Skip to main content

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05– சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05

  1. நாடும் நகரங்களும்
   இயற்கை யெல்லைகளால் பிரிக்கப்பட்டுத் தமக்கென ஒரு மொழியைக் கொண்டு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ‘நாடு’ என்று அழைத்தனர் தமிழக முன்னோர். அப் பகுதி அங்கு வழங்கும் மொழியால் வேறுபடுத்தி அழைக்கப்பட்டது.  ‘தமிழ்’வழங்கும் பகுதி ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு, மொழியை யடுத்தே நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை உலகெங்கும் காணலாம். தமிழ்நாடு ‘தமிழகம்’ எனவும்,  ‘தமிழ்கூறும் நல்லுலகம்’எனவும் சுட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்ற பெயரால்  பண்டைத் தமிழர்களின்  உலகக்  கண்ணோட்டத்தை உணரலாகும்.
 தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடவெல்லை திருவேங்கட மலையாகவும், தென் எல்லை குமரியாகவும், கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகள் கடல்களாகவும் இருந்துள்ளன என்பது பனம்பாரனார் பாயிரத்தால் அறியலாகும்.  தெற்கிலிருந்த குமரி என்பது கடலா, மலையா, நாடா, முனையா என்பது நன்கு தெளியப்படாமல் உள்ளது.  சங்கக் காலம் முடிய-கி.பி. முதல் நூற்றாண்டு – தமிழ்நாட்டின் எல்லைகள் இவையே.
 ஆனால், மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழகமாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலைநாட்டப்படும் உண்மையாக உள்ளது.
 மண்ணிற் புதையுண்டு மறைந்த ஆரப்பா’  ‘மொகஞ்சதரா’ நகரங்களில்  வழங்கிய மொழி தமிழே என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ் வுண்மையை வலியுறுத்தும்.  புறநானூற்றில்,
தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல.          ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
 தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
 குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
 குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
 …….       …….         …….       …..
 உருவும் புகழு மாகி விரிசீர்த்
 தெரிகோன் ஞமன்ன் போல ஒருதிறம்
 பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!”              ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும்மதுரைக்காஞ்சியில்,
தென்குமரி வடபெருங்கல்
 குணகுட கடலா எல்லைத்
 தொன்று மொழிந்து தொழில்  கேட்ப”  ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் கூறுவதனால் தமிழரசராட்சியின் கீழ்ப் பரதகண்ட முழுவதும் ஒரு காலத்தில் தங்கித் தழைத்தது என்ற உண்மை வெளிப்படுகின்றது.
  தமிழர்கள் (திராவிடர்கள்) வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்றும் ஆரியர்களால் வட இந்தியாவிலிருந்து தெற்கே துரத்தப்பட்டவர்கள் என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கூறியிருக்கும் கூற்று பிழைபட்டது என்று இன்று தெளிவாகின்றது.  உலகில் முதன் முதல் மக்கள் தோன்றியதே தமிழகத்தில்தான் என்றும் இங்கிருந்தே மக்கள் வெளியிடங்களுக்குச் சென்றனர் என்றும் புதைபொருள் ஆராய்ச்சியாளரும் வரலாற்று ஆசிரியரும் பூவியல் அறிஞரும் சான்று காட்டி நிறுவுகின்றனர்.  ஆதலின், ஒரு காலத்தில் இமயமுதல் பூமையக்கோட்டை யடுத்து இருந்த குமரிக்கடல்வரை தமிழகம் பரவியிருந்தது என்பதும், வடக்கே  ஆரியத்தின் வரவாலும் தெற்கே கடல்கோளாலும் தமிழ் வழங்கும் பகுதி சுருங்கியது என்பதும் நினைவிற் கொள்ளற்பாலன.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue