பேசு தலைவா பேசு! – சுப.வீரபாண்டியன்




பேசு தலைவா பேசு!


நீ என்றன் பள்ளிக்கூடம் –
சிந்தை தெளியாப் பருவத்துச்
சிறுவனாய்ப் படித்தேன் உன்னை
உயர்கல்வித் தளத்தில் கூட
உன்னைத்தான் படித்தேன்
அப்போதே எனது
திசைகளைத் தீர்மானித்த
தொலைதூர வெளிச்சம் நீ
தொடமுடியா விண்மீன் நீ!

நீ என்றன் பள்ளிக்கூடம்
இலக்கியம் எப்படி எழுதுவதென்றும்
மேடையில் எப்படிப் பேசுவதென்றும்
வாதம் புரியும் வகைஎது என்றும்
வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்

நீ என்றன் பள்ளிக்கூடம் –
பத்து ஆண்டுகள் உன்
பக்கம் இருந்தேன்
பார்த்துக் கொண்டிருந்ததாய்ப்
பலரும் கருதினர்
படித்துக் கொண்டிருந்தேன்
தலைவா உன்னை!

நீ என்றன் பள்ளிக்கூடம் –
ஆண்டுகள் பலவாய்ப் படித்தும் கூட
ஆரம்பப் பாடமே முடியவில்லை
தோண்டத்  தோண்டச்
சுரக்கும் ஊற்று நீ

நீ என்றன் பள்ளிக்கூடம் –
இப்போது ஏன் இந்த மௌனப் பாடம்
ஏங்கும் தமிழினம் பார்த்திடு தலைவா
உன் குரல் கேட்க
குவிந்திருக்கின்றன
கோடான கோடிக் காதுகள்
எத்தனை கோடிச் சொற்கள் இருந்தென்ன
‘உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’
என்னும்
ஒற்றைத் தொடருக்கு ஈடாகுமா அவை?
பேசு தலைவா பேசு
உன் நாவை அசை – எங்கள்
கண்ணீரைத் துடை!

– சுப.வீரபாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர் : மின்னூல்: சூன் 2017

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue