Skip to main content

சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்





சங்கே  முழங்கு !


வரிகளிலே முருகனையே முதலில் பாடி
வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப்
பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப்
பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர்
அரிதான பாரதியின் தாச னாகி
அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக
உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால்
ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !

சாட்டையிலே சொற்களினை வீசி மூடச்
சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம்
வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த
வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம்
கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக்
கூட்டிவந்தே ஏட்டினையே தந்த வர்தாம்
பாட்டாளித் தோழர்க்குத் தோளாய் நின்று
பாட்டாலே விடியலினை விதைத்த வர்தாம்!

கவிஞரெனும் பரம்பரையை இவருக் கன்றிக்
கவியுலகில் பெற்றவர்கள் யாரு மில்லை
புவிதன்னில் புரட்சிப்பா வேந்தர் என்று
புகழ்பெற்றோர் இவரைப்போல் யாரு மில்லை
செவிகளிலே நுழையுமிவர் பாட்டைப் போல
செந்தமிழை உயர்த்தும்வேறு பாட்டோ இல்லை
நவின்றிட்ட இவர்பாட்டே தமிழ னுக்கு
நாட்டினிலே முகவரியைத் தந்த பாட்டு!

தமிழாக மட்டுமிங்கே வாழ்ந்தி டாமல்
தமிழுக்காய் வாழ்ந்தவனே பாரதி தாசன்
தமிழெங்கும் முன்நிற்கப் பாட்டின் மூலம்
தலைநிமிரச் செய்தவனே பாரதி தாசன்
அமிழ்தென்று புகழ்ந்ததுடன் நின்றி டாமல்
அனைவருக்கும் உணர்த்தியவன் பாரதி தாசன்
உமியாகத் தமிழ்ப்பகையை ஊத நெஞ்சில்
உரந்தன்னை விதைத்தவனே பாரதி தாசன் !

சிங்கத்தின் முழக்கந்தான் தாசன் பாட்டு
சிறுத்தையதன் பாய்ச்சல்தான் தாசன் பாட்டு
பொங்குகடல் வேகந்தான் தாசன் பாட்டு
பொலிமின்னல் வீச்சுத்தான் தாசன் பாட்டு
வெங்கதிராய்ச் சுட்டெரிக்கும் பழம்மூ டத்தை
வெண்ணிலவாய்க் குளிர்விக்கும் தமிழ்நெஞ் சத்தை
துங்கமணி போல்வந்த அவரின் பாட்டால்
தூக்கத்தை விட்டெழுந்தார் தமிழ ரெல்லாம் !

இருட்டறையில்    உள்ளதடா    உலகம்   சாதி
இருக்கின்ற   தென்பானும்   இருக்கின்  றானே
உருப்படுமா   இந்நாடு   என்று   ரைத்தும்
ஊர்ஊராய்ப்    பெரியார்தாம்   சுற்றி   வந்து
கருத்தாலே   சமத்துவத்தை    ஊட்டி   விட்டும்
காணுகின்றோம்   இன்னுமிங்கே    சாதிக்    கொடுமை
அரும்புலவன்   பாவேந்தன்     சொல்லை    ஏற்றே
அகற்றிடுவோம்     சாதிகளை!     பொதுமை    காண்போம் !

வேடமிட்டே   ஆரியர்கள்   சூழ்ச்சி    செய்து
வேதத்தில்   புராணத்தில்    உலவ    விட்ட
மூடத்தின்   மூக்கறுக்கக்   கவிதை   தன்னில்
மூட்டிவிட்டார்    விழிப்புணர்வைப்   பாவேந்   தர்தாம்
ஏடகமாம்   குயிலேட்டில்    பஞ்சாங்   கத்தை
ஏற்றிடாமல்    பகுத்தறிவை   ஏற்றி   டென்றார்
வீடகத்தில்    இன்னும்நாம்   முட்டா    ளாக
விதிப்படித்தான்    நடக்குமென்றே   வீழு   கின்றோம் !

வீட்டினிலே     தமிழில்லை    தெருக்கள்    தம்மில்
விளம்பரப்    பலகைகளில்    தமிழே   இல்லை
காட்சிதரும்    தொலைக்காட்சி    திரைப்ப   டங்கள்
காண்கின்ற    செய்தித்தாள்   கல்வி    தன்னில்
தீட்டென்றே    தமிழ்மொழியைத்    துரத்தி   விட்டார்
     தீந்தமிழ்தான்    அழிந்துவிட்டால்    இனமும்   மாயும்
மீட்டெடுக்க    எழவில்லை   என்றால்   ஞாலம்
மீதினிலே    பெயரின்றிப்    போவோம்   நாளை !

குழந்தைகளின்   நாவிருந்த   தமிழெ   டுத்துக்
கூப்பிட்டே    ஆங்கிலத்தை   அமர   வைத்தோம்
முழங்கிநிதம்   மேடையிலே   பேசிப்   பேசி
முத்தமிழைப்   பள்ளிவிட்டே    துரத்தி  விட்டோம்
பழகுகின்ற    நண்பருடன்   பேசும்   போதும்
பாதிபிற   மொழிகலந்தே   தமிழைக்    கொன்றோம்
வழங்குகின்ற   ஊடகங்கள்    தமிங்கி   லத்தை
வளர்த்தபோதும்    எதிர்க்காமல்   மகிழ்ந்து   நின்றோம் !

பண்பாட்டைத்   தமிழினத்தின்   அடையா   ளத்தைப்
படிப்படியாய்   நாம்மாற்றி   வருவ   தாலே
பண்டையநம்   வீரத்தின்   ஏறு   தழுவல்
பழம்பெருமை   வேட்டிக்கும்   தடைவி   தித்தார்
கண்முன்னே   நம்முன்னோர்   தீக்கு   ளித்துக்
காப்பாற்றித்   தந்ததமிழ்    துடிது  டிக்க
மண்ணாளும்   தில்லியவர்   இந்தி  தன்னை
மாய்ந்தசமற்   கிருதத்தை   நுழைத்தா   ரின்று !

எங்கிருந்தோ வந்தவர்கள் ஏற்றத்தைக் காண
            எலும்பொடிய உழைக்கின்ற தமிழாநீ உன்னுள்
தங்கியுள்ள மூவேந்தர் மறத்தை   மானத்
தமிழுணர்வை நெஞ்சேற்றிக் களமி  றங்கு !
இங்குள்ள பகைவரெல்லாம் அஞ்சி  யோட
இனவுணர்வை ஒற்றுமையைச் செயலில்  கூட்டி
எங்கெங்கும் தமிழ்மொழியே தமிழன் ஆட்சி
எனும்நிலையை உருவாக்க  முழங்கு  சங்கே !

நல்லவர்கள் எல்லோரும் வீட்டை விட்டு
நலிவகற்ற வாராமல் அமர்ந்து கொண்டால்
அல்லவை தாமிங்கே ஆட்சி செய்யும்
அவலங்கள் தாமெங்கும் காட்சி யாகும்
பொல்லாதார் செயும்தீமை பார்த்துக் கொண்டு
பொறுமையுடன் இருப்பதனால் பயன்தான் என்ன
வல்லமையை நாம்காட்டித் தடுக்கும் போதே
வளைந்திருக்கும் அறம்நிமிரும்  முழங்கு  சங்கே !

குற்றங்கள் கண்முன்னே நடக்கக் கண்டும்
குற்றேவல் புரிவோர்கள் திரியக் கண்டும்
கற்றவர்கள் கல்லோர்போல் பதுங்கிக் கொண்டால்
கயமைகளை ஒடுக்குதற்கு வருவோர் யாரே
விற்பனைக்கு விதைநெல்லை அளித்தல் போலாம்
வீணர்க்கு நாம்அஞ்சி ஒதுங்கி நிற்றல் !
சுற்றிநின்று அல்லவையைத் தடுக்கும் போதே
சுடர்முகமாய் அறம்ஒளிரும்  முழங்கு  சங்கே !

அதிகார மிரட்டலுக்கே அச்சப் பட்டே
அரசியலார் செய்கின்ற ஊழல் கட்குத்
துதிபாடி நின்றாலோ குமுகா யந்தான்
தூர்நிறைந்த குளமாகிக் கெட்டுப் போகும்
விதியென்று முடங்காமல் வீரத் தோடு
வீதிகளில் இறங்கியொன்றாய் எதிர்க்கும் போதே
எதிர்நிற்கும் அல்லவை தேய்ந்து போக
எதிர்காலம் அறம்பெருகும்   முழங்கு  சங்கே !

வேட்டைநாய் வீட்டவரைக் கடித்தல் போன்றும்
வேலிகளே பயிர்களினை மேய்தல் போன்றும்
நாட்டினையே ஆள்வதற்கு நாவில் தேனாய்
நன்மைகளைச் செய்வதாக வாக்கைப் பெற்றுக்
கூட்டாகப் பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு
கூறுபோட்டுக் கொள்ளையிடும் பொய்மை வேட
ஆட்சியாளர் முகத்திரையை மக்க ளெல்லாம்
ஆர்த்தெழுந்து  கிழித்திடவே   முழங்கு  சங்கே !

பிறப்பொக்கும் என்றுரைக்கும் குறளை வீட்டின்
பின்புறத்தில் வீசிவிட்டு மேடை மீது
நறவுதனை நாதடவி சமத்து வத்தை
நாள்தோறும் முழக்கமிட்டே ஊரி னுள்ளே
உறவழிக்கும் மதச்சாதிக் கலவ ரங்கள்
உருவாக்கிக் குளிர்காயும் பொய்மை வேடத்
துறவியெனும் மடத்தலைவர் முகத்தி ரையைத்
            துடித்தெழுந்து  கிழித்திடவே  முழங்கு  சங்கே !

பொருந்தாத திருமணத்தை எதிர்ப்ப  தற்கும்
பொறுப்பற்ற இளம்மணத்தைத் தடுப்ப  தற்கும்
மறுமணத்தைக் கைம்பெண்கள் செய்வ தற்கு
மறுப்போரின் குரல்வளையை நெரிப்ப  தற்கும்
அரும்பெண்ணைத் தட்சணையால் அலைக்க ழிக்கும்
ஆண்களினை   நெருப்பினிலே   தீப்ப  தற்கும்
பெரும்போகப்  பொருளென்று  பெண்ணைத்  தாழ்த்தும்
பேடியரை   விரட்டுதற்கே   முழங்கு சங்கே !

கருவணிகம் செய்துபணம் மூட்டை யாகக்
கறுப்பினிலே  மறைக்கின்ற  கயவர்  தம்மை
தரும்கல்வித் தந்தையெனும் பட்டம் பெற்றுத்
தனியாகப்   பணம்பறிக்கும்   அரக்கர்  தம்மை
வருவாயை ஈட்டுதற்கே கட்சி வைத்து
வன்தொண்டர் படைசூழ அதிகா ரத்தில்
பெருஞ்செல்வம் சுருட்டுதற்கே குண்டர்   தம்மைப்
பெயர்த்தடித்து   விரட்டுதற்கே   முழங்கு  சங்கே !

உண்ணாத போராட்டம் கைகள் கோத்தே
ஊர்சுற்றி நின்றெதிர்த்து முழக்கம் செய்தும்
எண்ணற்ற ஊடகங்கள் நாளும் நாளும்
எடுத்தெழுதி உரைத்தபின்பும் ஊரி னுள்ளே
கண்முன்னே நடக்கின்ற கையூட் டூழல்
கட்டுக்குள் வரவில்லை! வெற்றுக் கூச்சல்
கண்களினைத் திறக்காது சாட்டை யாலே
கண்டிக்க எழுந்திடுவோம்  முழங்கு  சங்கே !

– பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழ்நாடு  அரசு , தமிழ் வளர்ச்சித் துறை
நடத்திய
பாவேந்தர்  பாரதிதாசனின்  125 ஆம்  பிறந்த  நாள்
கவியரங்கம்
இடம் :  தி.இரா.சோ. திருமண மண்டபம்,   திருவள்ளூர்   
நாள் : பங்குனி 15, 2048 /  28 -03 – 2017

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue