இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 – மு.இளங்கோவன்



அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

இரவிச்சந்திரனின்  வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3

இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று தற்புனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.
  தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் தற்புனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செருசு தூப்புரோவிக்கி(Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச் சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். இனெர் சலீமின் ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புனைவு இலக்கியம் குருதீத்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் தற்புனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குருதீத்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.
  தற்புனைவு வடிவில் தமிழில் நிறைய படைப்புகள் சிறுகதையாகவும், புதினமாகவும், திரைப்படமாகவும், கவிதைகளாகவும் வந்துள்ளன. கி. இராவின் ‘பிஞ்சுகள்’ என்ற குறும்புதினம் தற்புனைவுக்கு நல்ல சான்று. பேராசிரியர் த. பழமலை அவர்களின் ‘சனங்களின் கதை’ குறிப்பிடத்தக்க படைப்பு. சேசாசலத்தின் ‘ஆகாசம்பட்டு’, சிற்பியின் ‘கிராமத்து நதி’ குறிப்பிடத்தக்க கவிதை இலக்கியங்களாகும். ஊர்ப்புறத்து நிகழ்வுகள், கதைமாந்தர்கள், சொல்லாட்சிகள் கொண்டு புதிய இலக்கியப் போக்காக இத்தகு நூல்கள் வெளிவந்த பிறகு பல்வேறு படைப்புகள் தமிழில் வெளிவந்தன. குறிப்பாக நடுநாட்டு இளைஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் வாழ்க்கை, பழக்க வழக்கம், குடும்ப அமைப்பு, ஊர், உறவு, தெய்வம் என அனைத்தையும் உள்ளடக்கிய படைப்புகளை வழங்கினர். தங்கர்பச்சானின் ‘ஒன்பதுரூபாய் நோட்டு’, ‘வெள்ளைமாடு’, ‘குடிமுந்திரி’ உள்ளிட்ட படைப்புகளைச் சொல்லலாம். கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களின் ‘செம்புலச் சுவடுகள்’ நூலில் புதுக்கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலியின் பகுதி) மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் பதிவாகியுள்ளன.
  ‘வெட்டிக்காடு’ என்னும் தம் ஊர்ப் பெயரில் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் தற்புனைவு வடிவில் வந்துள்ள சிறந்த நூலாக புலப்படுகின்றது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்றுப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இப்படித் திறன் படைத்த மாணவ மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மை பெற்ற  ஊரக மாணவரான இரவிச்சந்திரன் கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.
   இரவிச்சந்திரன் இப்போது உலகளாவிய அளவில் முன்னோடித் தொலைத்தொடர்பு கட்டமைப்புத் திட்டங்களில் (Telecommunications Network) மின்னணுப் பொறியாளராக பணியாற்றுகிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மலர்ந்துள்ள இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, பணியின் காரணமாகச் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அலுவல் காரணமாக கண்டம்விட்டுக் கண்டம் பறக்கிறார். வானுலக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தாம் பிறந்த வெட்டிக்காடு என்னும் சிற்றூரின் நினைவு இவரைப் பேயைப் போல் பிடித்தாட்டியதால் தம் பட்டறிவுகளை 2003 முதல் எழுதத் தொடங்கினார்.
  இரவி 17 வயது வரை தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு ஊரில் வாழ்ந்து, எளிய(சராசரி) உழவர் குடும்பத்தின் அனைத்து வகையான மேடுபள்ளங்களையும் கடந்து, கிண்டிப் பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் படித்து, தெற்கு ஆத்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தர முதன்மை பெற்று, இந்திய அரசின் உதவித் தொகைபெற்றுப் பொறியியல் கல்வி பெற்றவர்.  இவரின் உள்ளம் கிராமத்து இளைஞனின் உள்ளம். பதினேழு வயது வரை வாழ்ந்து பெற்ற பட்டறிவுகள் ஆழ்மனத்துள் புதைந்து கிடந்து, நேரமும் சூழலும் உந்தித் தள்ள அவை சிறுகதை, கவிதை, எழுத்துரை எனப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.
  தம் ஊரகத்து இளமைக்கால நினைவுகளையும் சில உண்மை நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது கட்டுரையாக்கிய இவர், இவற்றைத் தொகுத்து ‘வெட்டிக்காடு’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப்பெயர்கள் பண்டைக்காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல்சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு ஆலம்பிரியர் என்னும் நெல்வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடுமாடுகளை மேய்ப்பது ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று சிற்றூருக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக்கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கமாக விரிந்து நிற்கின்றது.
   வெட்டிக்காடு நூலில் கரைந்த எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, முனைவர் ம.இராசேந்திரன், நீதியரசர் நாகமுத்து ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் சிறப்புகளை இனங்காட்டியுள்ளன. இரவிச்சந்திரனின் இன்றைய வளர்ச்சி நிலையையும், கடந்துவந்த பாதைகளையும் வியப்புடன் பார்த்து மகிழும் அணிந்துரை அறிஞர்கள் தங்கள் இளமைக் கால நிகழ்வுகளையும் சிற்றூர்ப்புறங்கள் நாகரிக வளர்ச்சியால் அடையாளங்களை இழந்து வருவதையும் மறவாமல் பதிவுசெய்துள்ளனர்.
  குமுக(சமூக),  பொருளாதார மேல்சாதிக்காரர்களால் வரலாறு எழுதப்படும் சூழலில் அடித்தட்டு மக்களின் வரலாறு(Subaltern History) எழுதப்பட்டு வருவதை வரவேற்கும் சுந்தரராசு மாணிக்கம் போன்றவர்களை நினைக்கும்பொழுது வெட்டிக்காடு நூலின் முதன்மைத்துவம் விளங்கும்.
   பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் வெட்டிக்காடு நூல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue