நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -சந்தர் சுப்பிரமணியன்




தலைப்பு-நோபல்பரிசாளர் பாபு தைலன், சந்தர் சுப்பிரமணியன் ; thalaippu_bobdylon_chandar_subramaniyan

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர்  பாடலர் பாபு தைலன் (Bob Dylan)

  வழக்கம்போல் 2016-ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு குறித்த செய்திகள் வரத்தொடங்கிய கடந்த ஒரு மாதக்காலத்தில், பரிசாளர்கள் பட்டியல் குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் உலவத் தொடங்கின. நோபல் பரிசுகளில் மிக முதன்மையான பரிசான இலக்கியப்பரிசு இந்த ஆண்டு யாருக்கு என்று அதனதன் நோக்கில் அலச ஆரம்பித்தது ஊடகம். அக்டோபர் 6 ஆம்  நாள், ‘நியூ (இ)ரிபப்ளிக்கு / new republic‘ என்னும் நாளிதழ், இலக்கியப்பரிசு குறித்த ஒரு கட்டுரையில் “பாபு தைலனுக்கு விருதா? வாய்ப்பே இல்லை” என்று  பறையறிவிப்புகூடச் செய்தது. ஆனால் விருதாளர் அறிவிக்கப்பட்ட பொழுது, நிலைமை தலைகீழானது. அறுபது-எழுபதுகளில் மிகவும்  புகழ்பெற்று விளங்கிய பாடலாசிரியரான பாபு தைலன் அப்பரிசைப் பெற்றார். இது வரலாற்றில் முதல்முறையாக ஒரு பாடலாசிரியர் நோபல் பரிசை வெல்கின்ற நிகழ்வாகும்.
  இப்பரிசுக்காக இவரைப் பரிந்துரை செய்த  தாக்ஃகோம்(Stockholm) பல்கலைக்கழகப் பேராசிரியர், 1966 ஆம் ஆண்டு வெளியான பாப்-இன் ‘பொன்னிறம் படிந்த அழகி/blonde-on-blonde‘ என்ற இசைத்தொகுப்பை முன்வைத்தே பரிந்துரை செய்தார். இத்தொகுப்பில், ‘மழைநாள் பெண்/Rainy Day Women‘, ‘நான் உன்னை விரும்புகின்றேன்/I Want You‘  முதலான பதினான்கு பாடல்கள் உள்ளன.  இத்தொகுப்பைப்பற்றிக் குறிப்பிட்ட இந்தப் பேராசிரியர், “பாபுவின்(bob)  குமுக(சமூக)ச் சிந்தனைகளைச் சீரிய இயைபு நயத்துடன் வெளிப்படுத்திய தொகுப்பு இது” என்று கூறுகிறார்.
  நோபல் விருதுக்குழுவின் அதிகாரபூர்வமான செய்தியில், “குமுகச்சிந்தனை, சமயம், அரசியல், காதல் போன்ற பல்வேறான தடங்களில், ஏராளமான படைப்புகளைப் படைத்தவர் பாபு(Bob)” என்று குறிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாய், இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களில் தன் முதன்மை நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவராக விளங்கிய பாபு தைலன், பாடலாசிரியர், ஓவியர், நடிகர், கதாசிரியர் போன்ற பன்முகக் கலைஞராய் விளங்கினார்.
  இவர் விருதுபெற்றது குறித்து கருத்து தெரிவித்த சல்மான் உருடி (Sir Ahmed Salman Rushdie), ‘ஆர்பசு முதல் ஃபேயிசு வரை/From Orpheus to Faiz’, பாடல்களும் கவிதையும் இணையாகவே கருதப்படுகின்றன. அந்த வகையில் பாபுக்கு விருது வழங்கப்பட்டது மிகவும் சரியானதே” என்று தெரிவித்துள்ளார்.
  இராபர்ட்டு ஆலன் சிம்மர்மேன் (Robert Allen Zimmerman) என்ற இயற்பெயர் கொண்ட பாபு தைலன், 1962 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் முயற்சியாகப் ‘பாபு தைலன்’ என்னும் இசைக்கோப்பினை வெளியிட்டார். முழுக்க முழுக்க நாடோடிப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டமைந்த இக்கோப்பின் பெயரையே தன்னுடைய பெயராகப் பின்னர் மாற்றிக்கொண்டார்.
 பத்துக்கும் மேற்பட்ட கிராமி விருதுகள், பொன்னுலக (Golden Globe) விருது, ஆசுகர் கலையக (Oscar Academy)விருது, 2008 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு(Pulitzer Prize), 2012 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நாட்டின் தலைவர்(President)விருதுபோன்ற பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தவரான பாபு தைலன், இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஏற்கும் 108 ஆவது விருதாளர் ஆவார். மேலும், 1993 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஓர் அமெரிக்கர் இவ்விருதை வெல்வதும் குறிப்பிடத்தக்கது.
  அமெரிக்க மக்களின் எழுச்சிப்போராட்டத்திலும், வியத்துநாம் போர்குறித்த கண்ணோட்டத்திலும் பல பாடல்கோப்புகளை பாபு தைலன் அளித்துள்ளார். அவற்றுள் ‘காற்று ஊதுகிறது(Blowing in the wind)’ என்ற 1962 ஆம் ஆண்டு வெளியான கோப்பு குறிப்பிடத்தக்கது.
  பிறப்பால்  (இ)யூதமதத்தைச் சேர்ந்தவரான இவர் பின்னாளில் கிறித்துவ மதத்திற்கு மாறினாலும் இப்போது, எந்த மதத்துடனும் தொடர்பற்றவராகவே விளங்குகின்றார். இரவு நேரக் கேளிக்கை விடுதிகளில் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய பாபு, தன்னுடன் இணைந்துள்ள உடன்கலைஞர்கள் பலரின் நாடோடிப்பாடல் படிமங்களைத் தனதாக்கிக்கொண்டு வளர்ந்தார். ஒரு கேளிக்கை விடுதியில் இவர் நடத்திய அத்தகைய இசை நிகழ்ச்சியை இராபர்ட்டு செல்டன் என்பவர்  புதுயார்க்கு காலம் / நியூயார்க்கு தைம்சு /  The New York Times நாளிதழில் எழுத, அதன் மூலம் புகழடைந்த பாபு தைலன், சிறிது சிறிதாக இசைத்துறையில் தன் காலடியைப் பதித்தார்.
 பாபு தைலனின் ‘காற்று ஊதுகிறது/Blowing in the wind’ என்ற கீழ்வரும் கவிதையில், குமுக(சமூக)நிலை குறித்த அவரது சினத்தையும், ஆதங்கத்தையும், அதை எதிர்த்து மக்களை விழிப்படையச் செய்யும் தொனியையும் காணலாம்:
இழுத்ததை அழிக்கும் கடலெதிரே – இனும்
எத்தனை நாள்தான் மலை இருக்கும்?
விழிப்பதன் விடுதலை வரும்வரையில் – ஏன்
வெற்றாய்ச் சிலர்நாள் பழி கிடக்கும்?
கழுத்தினை ஆட்டி எதுவரையில் – கண்
காணா ததுபோல் இனும் பொறுக்கும்?
விழிப்புறு நண்பா விடை இதுதான் – இனி
வீசுங் காற்றில் விடைபிறக்கும்!
வெடிக்கும் கணத்தை நெருங்கும் எரிமலையை
வெளிச்சமிட்டுக் காட்டும் கவிதை அன்றோ இது?
  எடுப்பார்க் கைப்பிள்ளை போன்று, தான் என்னும் எண்ணத்தை அறவே மறந்து, வீணாக வாழ்க்கையைக் கடக்கும் நலிவுற்ற மன்பதையின் நிலையை நயம்படக்கூறும் ‘ஓர் உருளும் கல்போல்/Like a rolling stone’ என்னும் கவிதையின் ஒரு கூறு இது:
பொருளற் றுலகில் இருக்கின்றாய்,
  பொய்யாம் இழப்பும் உனக்கில்லை;
உருவற் றுலகில் இருக்கின்றாய்,
  உண்மை மறைக்கும் நிலையுமிலை;
ஒருமை நோக்கில் உனக்கெனவாய்
   உறைதற் கேதும் திசையின்றி
உருளும் கல்லாய்த் தனித்துலவும்
   உன்னை எவ்வா றுணர்கின்றாய்?
“இழப்பதற்கு ஏதும் இல்லை; மறைப்பதற்கும் ஏதும் இல்லை என்ற நிலையில் ஏன் இன்னும் இலக்கின்றி வாழ்கின்றாய்?” என்று இடித்துரைக்கும் கவிதை இது.
அவர்கள் மாற்றத்திலுள்ள  காலம் / The times they are a-changin‘ என்ற கவிதையின் கூறு இது:
எல்லையை வரைந்து மென்னே
   இயம்பிய சாபம் என்னே
மெல்லவே இயங்கும் யாவும்
   வேகமாய் மாறும் நாளை;
சொல்லிய முறையும் மாறும்!
   தொன்மமாய் நிகழ்கா லாகும்!
வல்லிய கால மாற்றம்
   வகுத்திடும் முதலை ஈற்றாய்!
   ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்னும் சித்தாந்தத்தை உறுதி செய்யும் கவிதை. சமுதாயத்தின் கோர வழக்கங்களால், வாழ்வின் விளிம்பில் வழியின்றி வதங்கும் அந்த இனத்துக்காக, அவர்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பி, வெற்றியை வாழ்வில் காணும் விழிப்புணர்ச்சியை ஊட்டும் பாடல் இது.
   தன்னுடைய உடன் இசைக்கலைஞராகவும், நண்பராகவும் விளங்கிய பூரணதாசு பவுள் குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்திற்காக, பாபு தைலன், 1990 ஆம் ஆண்டு கல்கத்தா வந்துசென்றார் என்பதைவிட இந்தியாவுடன் வேறெந்த நேரடித் தொடர்பும் உடையவர் அல்லர் என்றாலும் மிக அதிக எண்ணிக்கையில் பாடலாசிரியர்களைக் கொண்ட இந்தியாவுக்கு, அவர் பெற்ற இவ்விருது ஊக்கத்தை அளிக்கும் என்பதில் வியப்பில்லை.
ChandarS01
சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல் இதழ் எண் 37, ஐப்பசி/ நவம்பர், 2016

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue