Skip to main content

சிற்றருவி! பேரருவி! – சி.செயபாரதன், கனடா





;தலைப்பு,சிற்றருவி,பேரருவி, சி.செயபாரதன் thalaippu_aruviseyabharathanjayabharathan

சிற்றருவி! பேரருவி!


[குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.]

இறை வணக்கம்
அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
வற்றாத் தமிழூட்ட வா !

கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
ஓரளவு தேறிடவே ஓது !
ஒரு கல்லில் அடிப்பேன்
இரு மாங்காய் !
இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
ஒரு மூச்சில் !

குற்றால அருவி !

குற்றாலச் சிற்றருவி !
குதித்தோடும் தேனருவி !
முத்தான நீரருவி !
முகிலெட்டும் வானருவி !
குற்றாலம் வெண்ணருவி !
கொட்டுகின்ற தண்ணருவி!
சிற்றாறுக் குன்றருவி !
சிரித்தோடும் பொன்னருவி !

நயாகரா அருவி !

புவியிலே பேரருவி !
பூத உடல் நீரருவி !
கவிழ்ந்து விழும் கீழருவி !
கழுத்தொடிக்கும் பேயருவி !
முற்றிலும் மண்ணருவி !
முதலிரவுப் பெண்ணருவி !
குற்றாலம் விண்ணருவி !
குறைவாகும் சின்னருவி !
தோற்றம் கீழே உனக்கு ! வானத்
தோரணம் ஏது உனக்கு ?
போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
நாற்றச் சாக்கடை தான் !

குற்றால அருவி !

குற்றாலம் குளியருவி !
குடிமக்கள் தேனருவி !
நெற்றி நிமிர் மேலருவி !
நெளிதோடும் கானருவி !
குரங்காடும் நீரருவி !
கூடுகட்டும் ஊர்க்குருவி !
மரமாடும் பேரருவி !
மானோடும் வானருவி !
குற்றாலம் சிற்றருவி ! மழைக்
குன்றின் வெற்றருவி !
நயாகரா பேரருவி !
நல்வணிகர் பேருதவி !

குற்றால அருவி !
எளியவர் கண்டு களிக்கலாம் !
எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
துர்நாற்றம் இல்லா நீரது !
தூய்மை யான மழையது !
குற்றாலச் சூழ் மேடை
சூழ்ந்து வரும் பூவாடை !
நயாகரா நதி ஓடை
நாகரீகச் சாக்கடையே !

நயாகரா அருவி !
ஆறாக ஓடி வரும் !
ஆத்திரமாய்ப் பாய்ந்து விழும் !
மாறாகக் கீழ் ஓடுது !
மண்ணைப் போய்த் தாவுது !
குரங்கில்லை ! குன்றில்லை !
மரமில்லை ! மானில்லை !
இயற்கை வனப்பழியும் ! எங்கும்
செயற்கை மினுப்படிக்கும் !
ஒரு நதி இடையில் பிரியுது !
இரு நீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
பிரமிப் பான காட்சிதான் !
பேரிடி கேட்கும் மூச்சிதான் !

குற்றால அருவி !
வெள்ளிக் கதிர் எழுமருவி !
வேகமாய் விழுமருவி !
துள்ளி வரும் நீரருவி !
தூங்கி விடும் ஓரருவி !
ஆன்மீக நாட்டருவி !
ஆடிவரும் காட்டருவி !
நான் விழையும் நீரருவி
நாத எழும் தூயருவி !
நயாகரா அருவி !
வாணிபச் சந்தை அது !
வஞ்சிப்போர் மந்தை அது !
தோணியிலே சென்றாலும்
துட்டுத்தான் கரையுதடா !
காசிருந்தால் நீர் வீழ்ச்சி !
காசுரிக்க ஓர் சூழ்ச்சி !
காசிருந்தால் சூதாட்டம் !
காசிழந்தால் போராட்டம் !
பகலிரவாய் நீர் பாயும் !
பார்த்தாலே குடல் சாயும் !
மகத்தான நீர்வீழ்ச்சி !
மாறான கண்காட்சி !
மின்சக்தி உருவாக்கும் !
மின்வெளிச்சம் நிற மூட்டும் !
வானூர்தி வட்டமிட்டு
வானிருந்து நதி காட்டும் !’

குற்றால அருவி !
பசுமை மரமுண்டு !
பாடும் குயிலுண்டு !
அசையும் இலையுண்டு !
அத்தனைக்கும் உயிருண்டு !
பட்டப் பகலில் பரிதி ஒளி !
பறவை பாடும் பண்ணின் ஒலி !
எட்டும் இரவில் நிலவின் வெளி !
என்றும் மாறா வண்ண ஒளி !

நயாகரா அருவி !
நயாகரா நீர்வீழ்ச்சி
நாணயப் படக்காட்சி !
உயிரில்லை ! உணர்வில்லை
ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

வான வில்லாய் நீர்வீழ்ச்சி
இரவில் மாறும் நிறக்காட்சி
பகலில் வெள்ளி நீர்க் காட்சி !
ஆயின் வீணே மின்சக்தி  !

நயாகரா காதலர்க்கு !
நாடிவரும் வாணிபர்க்கு !
வயாகரா மானிடர்க்கு !
வாடிக்கை மாதருக்கு !

சிற்றருவியா ? பேரருவியா ?

குயில் இல்லை பாட,
குரங்கில்லை தாவ,
மயில் இல்லை ஆட
மானில்லை காண !

தாலர் வாழும் நயாகாரா !
தாலர் ஆளும் நயாகரா !
தாலர் கூடும் நயாகரா !
தாலர் நாடும் நயாகரா !

குபேரச் சாக்கடை முங்கிக்
குளிப்பது யார் தற்காலம் ?
குசேலக் குற்றாலம் பொங்கிக்
குளிப்பது நம் பொற்காலம் !
s.jayabharathan01
சி.செயபாரதன், கனடா

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue