Skip to main content

விரலில் வைக்கும் புள்ளியே விடிவெள்ளியாகும்! – உருத்ரா




தலைப்பு-விரல் புள்ளி-விடிவெள்ளி : thalaippu_pulliyevidivelli

விரலில் வைக்கும் புள்ளியே  விடிவெள்ளியாகும்!

நாட்கள் நெருங்கி விட்டனவே.
அறிவு மிகுந்தோர் சிந்தனை செய்வீர்.
உள்ளம் உடையார் வெள்ளமெனப் பெருகுவீர்.
உணர்வு கேட்கும் வெளிச்சம் காண‌
இருள் மறைப்புகள் விலக்குவீர் விலக்குவீர்.
பொருளாய் பணமாய்ப்
பாதை தடுக்கும் பாதகம் மறுப்பீர்.
தாயின் மணிக்கொடி
பேய்களின் கையிலா?
மக்கள் தத்துவம் மறைந்து போக
தனிமனிதப் புள்ளிகள் நம்முள்
பூதமாய் இங்கு நிழல்கள் காட்டும்.
பொது சமுதாயப் புனிதம் காக்க‌
கோவிலும் வேண்டா கடவுளும் வேண்டா!
சாதியும் வேண்டா சதிகளும் வேண்டா!
உழைக்கும் ஒவ்வொரு கரத்திலும் காண்பீர்
உலகம் இன்றே நிமிர்ந்து பூக்கும்.
சில்லறைத் தன்நலம் இரைச்சல்கள் காட்டும்.
பொதுநலம் காக்கவே மக்கள்நாயகம்!..இது
சிலர்நலம் காக்கும் தத்துவம் அல்ல.
விசையைத் தட்டி விளையாடவா
இங்கு மலைப்பாம்பாய் வரிசையில் நிற்பீர்.
மனம் நினைத்தது மண்ணில் பூக்க‌
மனத் தடுமாற்றம் அகற்றுவீர் அகற்றுவீர்!
புரையோடிய புண்ணே இங்கு ஊழல்!
மருத்துவம் தந்திடும் மருந்துச்சீட்டு
உங்கள் கையில் உண்டு உண்டு?
தமிழே தன் உயிர் என‌
அறியாமலேயே
தமிழர்கள் வாழும் திருநாட்டில்
குட ஓலை முறையை
உலகுக்குக் காட்டிய‌
உயர் தமிழ் மாண்பின் ஒரு நாட்டில்
வெறும் வெண்ணிரும்புக் குடங்கள்
அவர் கண்ணையும் கருத்தையும்
மறைக்கும் அவலம் தீர்ந்திடுமோ?
பார்த்தோம் பார்த்தோம்
“பால்குட அரசியல்”
ஊர்தோறும் பார்த்தோம்.
இடம் கிடைக்க‌
பலப்பல வேடம்
பார்த்தோம் பார்த்தோம்
வேடிக்கை பார்த்தோம்.
கைக்குள் அரித்தது என்று எண்ணி
கையில் அகப்படும் விடிவானம் தன்னை
இழக்கச் செய்திடும் சூழ்ச்சிகள் மறுப்பீர்
பொம்மலாட்டம் இனியும் வேண்டாம!.உங்கள்
விரல்கள் அசைப்பில் வெற்றிகள் குவியும்.
மூட்டம் அகன்று வாட்டம் தீர்ந்து
மூண்டதோர் வெளிச்சம் தோன்றிட வேண்டும்.
விரலில் அது புள்ளியல்ல..இன்னமும்
அதுவே இங்கு விடிவெள்ளியாகும்!
53ruthra
உருத்ரா

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue