நல்லதை நாட்டுவதே நம்பணி! – தமிழ்சிவா





தலைப்பு-நம்பணி, தமிழ் சிவா : thalaippu_nallathainaattuvathu_thamizhsiva

நல்லதை நாட்டுவதே நம்பணி!

மஞ்சள் நிறத்தொரு பூனை
       மக்களை ஏமாற்றும் பாரீர்
கொஞ்சல் மொழிகள் பேசி
       நெஞ்சம் பிளக்கும் பாரீர்!!
சந்தியில் தமிழன் சாகும்போதும்
       சத்தியம் வெல்லுமெனும் பாரீர்!
முந்தியது என்றாலும் அதன்
முகத்தையே மாற்ற வேண்டும்!
பச்சை நிறத்தொரு பூனை
       பாரில் வளருது பாரீர்!
இச்சை கொண்டது அப்பூனை
       ஈடிலாப் பதவி மேலே!
நச்சைக் கொணர்ந்து ஊட்டும்
       நல்ல திறமை அதற்குண்டு!
எச்சில் என்றே நினைக்கும்
       யாரையும், எடுத்தெறிய வேண்டும்!
மாம்பழம் தின்றிடும் பூனை
       மறக்காமல்  வளர்க்கும் சாதி!
நம்புவதற்கு இல்லை அதனை
       நல்சண்டை வளர்ப்பதே அதன்நீதி!
நாமதன் பின்னே போனால்
       நட்டாற்றில் விடப்பட்ட துரும்பாவோம்!
ஆமென்று ஒப்பி எல்லோரும்
       ஆவன செய்வோம் வாரீர்!!
தாமரைச் சிரிப்பை ஏந்தித்
       தாவி வருது ஒருபூனை!
நாமதை நச்சென்று நீக்கி
       நலமதை நாட்ட வேண்டும்!
சிரிக்கின்ற பிள்ளையைக் கிள்ளிக்
       களிக்கின்ற குணம்தான் அதற்கு!
எரிகின்ற கொள்ளியை எடுத்து
       யாரும் தலைசொரிய மாட்டார்!!
குல்லாய் போட்டது ஒருபூனை
       கூடவே இருக்கும் சகுனி!
நல்லாய் நீயும் கவனி
       நங்கென்று ‘தமிழ்’வீழ்த்தும் அசனி!
சிவப்பு நிறத்தொரு பூனை
       சிரத்தையாக இருக்க வேண்டும்!
உவப்புக் கொண்டது மேலும்
       உழைத்துக் களைக்க வேண்டும்!
சிறுத்தை குணத்திலொரு பூனை
சிறப்பாய்ச் செயலாற்ற வேண்டும்!
முரசம் அடிக்கும் பூனை
       முரட்டுத்தனத்தை மாற்ற வேண்டும்!
பம்பரம் சுற்றும் பூனை
       தன்பலம் பெருக்கல் வேண்டும்!
நம்பலாம் நம்பலாம் வாருங்கள்
       பலத்தை முற்றுமாய்த் தாருங்கள்!
கொள்ளை போயின யாவும்
       கண்டிப்பாய் நாமும் மீட்போம்!
எல்லை எதற்கும் உண்டு
எழுந்து யாவரும் வாரீர்!
வருத்தமே இங்கு மிச்சம்
       தமிழினம் வாழுமோ அச்சம்!!
பொருத்தம் இல்லாப் பதர்கள்
       அடைய வேண்டுமோ உச்சம்?
இளைஞர் கூட்டம் எல்லாம்
இருட்டில் வாழ்வதாலே குடியில்
திளைத்துத் தேசம் குலையுதுபாரீர்!
       திருத்தியமைக்க வேணும் வாரீர்! வாரீர்!
கல்லாமல் இருக்கும் வரையில்
       காதுக்குக் கடுக்கனே கிடைக்கும்;
நல்லோய் நீயும் கவனி
       நல்லதை நாட்டுவதே நம்பணி!
தமிழ்சிவா

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue