செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி




thalaippu_chenthamizhser_ uruvaayinai_thamizhanambi

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை!
உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!
கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்’
‘புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்’ என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
“சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!
அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!”
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!
தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
(விழுப்புரம் “பாவேந்தர் பேரவை”யின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)
தமிழநம்பி : thamizhanambi

Comments

  1. அருமையான பகிர்வு

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர், வணக்கம்.
      தங்கள் பணி பாராட்டிற்குரியது. தங்கள் தொடர் பதி்வுகளுக்கு நன்றி.

      அகரமுதல இதழில் வரும் என் படைப்புகள் நூல் வடிவில் உருவாகின்றன. அதன் பின்னர் அவற்றை அளிக்கின்றேன்.

      இதில் வரும் கவிதைகள்,
      1. அகரமுதல இதழுக்கு என்றே அனுப்பப்படுவன.
      2. அகரமுதல இதழுக்கு அனுப்பும் பொழுதே பிற தளங்களுக்கும் அனுப்பப்படுவன அல்லது அவரவர் முகநூலில் பதியப்படுவன.
      3. முகநூல் அல்லது வரும் பொதுவான மின்னஞ்சல்களில் இருந்து தேர்ந்து வெளியிடப்படுவன.

      என மூவகைப்படும்.
      இவற்றுள் பின்னிரண்டை உரியவர் ஒப்புதலின்றி மின்னூல் வடிவாக்கக்கூடாது.

      அகரமுதல இதழில் வந்த, வரப்போகின்ற திருக்குறள் அறுசொல் உரை மின்னூல் வடிவாக்க வேண்டும்.

      இந்த நூலை உங்களின் எம்முகவரிக்கு அனுப்பினால் மின்னூல்வடிவாக்கித்தருவீர்கள் எனத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
      தொடர்பு தொலைபேசி எண்களையும் தெரிவியுங்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue