Skip to main content

வல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்

padam_photo_Dr.S.Ilakkuvanar

நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க

முன்னிற்கும் முதன்மையர்

உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ,
இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ,
இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள்
இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ,
நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம்
இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள்
பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென்
றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚
அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும்
ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚
கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚
தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚
தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚
தாய்மொழியைப் பழிப்பானைத் தாய்தடுத்து நின்றாலும்
பாய்ந்தடக்க வீறியெழும் பண்பாட்டுப் பைந்தமிழ‚
தஞ்சைவரு வாய்மேட்டில் தான்பிறந்தும் தமிழகத்தின்
எஞ்சாத செம்பொருளாய்இயங்கிவரு சிறப்பான‚
இன்னிலமாய் அமைந்திருந்த நன்னிலத்துப் பள்ளியிலும்
பொய்யாத வளங்கொழிக்கும் ஐயாற்றுச் சாலையிலும்
இலகுமுயர் அன்புபேர் குலசேகர பட்டினத்தும்
எல்லையில்லாப் புகழ் வளர்த்த நெல்லையூர்க் கலையகத்தும்
பரிவாக அழைத்தந்தப் பரிவாலே அனுப்பியசீர்
பெருகுமொரு விருதுநகர்க் கல்லூரி மன்றத்தும்
புதுக்கோட்டை தஞ்சையொடு புலலெறும்பி யூரகத்தும்
மோகமுற அழைத்தேகி முதல்வராகும் முறையிருந்தும்
ஆகவொரு வகைசெய்யா நாகர்கோவி லகத்தும்
நல்லபல தொண்டாற்றி, நற்றமிழைப் பண்டிருந்தே
பல்லபல வகையாகப் பாலிக்கும் கூடற்கண்
கூடியுளீர்‚ கூட்டிய சீர்ப் பட்டமும் எய்தியளீர் ‚
ஓடிஓடி இளைக்காமல் ஓய்வுற்ற காலத்தும்
நாடியநற் றொண்டுசெய வீடொன்றும் கண்டுள்ளீர் ‚
கூடலெனும் நன்னகரம் வுட்டியுள சீரன்றோ‚
இளமையிலே ஊரகத்தே இயற்றமிழை வளர்ப்பித்தீர் ‚
வளமையுறு வாலிபத்தே வாய்ப்பாகத் தமிழ்நாட்டுத்
தெருத்தோறும் திசைதோறும் திகழ்தற்கு வகைகண்டீர்‚
பெருக்கமுறும் இந்நாளில் பிறநாட்டு நல்லறிஞர்
மன்றத்தில் மாண்புற்ற தமிழ்மாண்பை வைத்துள்ளீர் ‚
ஒன்றிவரும் ஆண்டேற, உடல்ஏற, அறிவேற,
உளமேற, தொண்டேற, புகழேறி வளர்கின்றீர் ‚
வளமென்ன எவையுண்டோ அவையெலலாம் வாய்த்திடுவீர் ‚
நெற்றிக்கண் காட்டினும் குற்றமது குற்றமென
முற்றியவோர் நக்கீரன் மொழிந்துள்ளான்; அன்னதனுக்
குற்றவோர் சான்றாக உள்ளீர்நீர், என்றுரைக்க
நிற்கின்ற நல்லறிஞ‚ நெஞ்சத்தில் உள்ளதனைச்
சற்றேனும் மாற்றாமல் மறையாமல் சாற்றியதை
உற்றவொரு பணியாலும் காட்டிவரும் சான்றாள‚
செற்றமுற மொழிவார்க்கும் செந்தண்மைப் பதிலிறுக்கும்
நற்றிறத்துப் போரேறே‚ நயனுணர்ந்த நாவலரே‚
“கம்பன்புகழ்பாடிக் கன்னித் தமிழ்வளர்ப்போம்……”
என்றந்த நெல்லையிலே ஏற்றெழுந்த குழுமத்தை
நெஞ்சாரப் பாராட்டி நேயத்தால் இன்புற்றீர் ‚
எஞ்சாமல் அக்குழுமம் எக்களிப்போ டொருநாளில்
சங்கத் தமிழ்நூலை வங்கத்தில் விட்டெறிவோம்
என்றார்த்து முழங்கியதனைக் கண்டறிந்து நெட்டுயிர்த்தீர்‚
என்னே கொடுமையிது‚ என்னே தகைமையிது‚
என்னே புலமையிது‚ என்னே உணர்ச்சியிது‚
கன்னித்தமிழ் காக்கக் கம்பன் புகழ்வளர்க்கச்
சங்கத் தமிழமுதை வங்கத்தோ போடவேண்டும்?
சங்கத் தமிழமுதச் சாறெடுத்துச் சுவையமுதம்
பொங்கச் சமைத்துள்ள புகழ்க்கம்பன் பேராலோ
இச்சிறுமை‚ ஐயகோ‚ என்றேங்கிக் கொண்டலென
அச்சமற ஆர்ப்பரித்து நீரெழுந்தீர்‚ அம்மம்மா‚
சங்கத்தமிழ் பாடித் தங்கத் தமிழ்காப்போம் ‚
என்றோங்கி நேர்நின்றீர்‚ தெருத்தோறும் பறையறைந்தீர்‚
‘சங்க இலக்கிய மெ’னும் சால்பிதழைத் தமிழகத்தின்
வீதிகளில் பீடுநடை போடுவணம் செய்து வந்தீர் ‚
ஓதுமுயர் ‘இலக்கியமும்’ உணர்வோங்க உவந்தளித்தீர் ‚
இந்நாளில் தமிழோடு பண்பாடும் இணைந்தோங்கும்
நன்னோக்கம் மேலோங்க நலமோங்கு குறள்நெறியைத்
தமிழ்மண்ணுக் களிக்கின்றீர்ƒ தமிழ்மண்ணை விண்ணுக்கு
நேராக்க நீர்நோக்கம் வைத்தமைக்குச் சான்றன்றோ‚
நன்னூல் முதலாய பின்னூலை மேனாட்டார்
முன்னூலாய்க் கொண்டாய்ந்து முன்னாளில் எழுதிவர
அன்னதனின் மாற்றநிலை அயராமல் அறிந்திருந்தும்
தன்னலமே கருத்தாகத் தனிமறைத்துத் தமிழர்தம்
பழமைநிலை சாற்றாமல் தமிழ்வாழ்வு கொண்டோர்கள்
மழுப்பிவரும் பழிநிலையும் இழிபாடும் இனக்காழ்ப்பும்
உள்ளத்தை வெதுப்பிவிட உண்மைநிலை உரைத்தற்குப்
பள்ளம்பாய் வெள்ளம்கோல் புறப்பட்டீர் ஆராய்ந்தீர் ‚
தமிழ்மொழியில் முனைவனெனும் தகவெய்த வேண்டுமெனின்
தமிழிலன்றோ அதையெழுதல் தகவாகும் ஐயகோ‚
ஆங்கிலத்தில் எழுதுவதாம்; ஆங்கிலவர் ஆய்வதுவாம்’
ஆங்கிலத்தின் வழியாகத் தமிழ்கற்ற அன்னோர்தாம்
முடிவுரைக்கக் கொள்வதுவாம், எனமுடித்து வைத்துள்ளார்
சென்னைப் பல்கலைக்கழகச் செந்தமிழா‚ என்செய்வாம்‚
ஒட்டகத்திற் கொருபக்கம் தானோகாண் கோணலதும்,
திட்டமுறத் தமிழ்நாட்டுக் கொருவழியோ கேடுடைய(து)……
என்றுரைத்த பாரதியார் திருவாய்க்குச் சர்க்கரைதான்
போடவேண்டும் இந்நிலைமை ஆங்கிலத்துத் தமிழ்அறிஞர்
ஏடதனை எதுகொண்டே முடிவெடுப்பர்; முன்னையோர்
நாடவிடு கருத்தன்றோ முன்னிற்கும்; ஆகையினால்
புரட்சியென மாற்றமெனப் புகன்றுரைத்துப் பற்பலவாய்
மறுத்தார்கள்; மறுப்புக்கும் மறுப்புரைத்துத் தமிழ்மாண்பைச்
சான்றோடு நிலைநாட்டிச் சரியென்னச் செய்துள்ளீர்‚
ஈன்றநம் தமிழ்த்தாய்க் கிந்நாளில் எவரோ காண்
ஆன்றநும் பணிபோலோ ஆராய்ந்து செய்துள்ளார்?
நன்மகனே‚ நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க
முன்னிற்கும் முதன்மையரே‚ முட்டின்றி நீர் வாழப்
பல்லாண்டு பல்லாண்டு நல்லாண்டு நல்கென்று
வல்லானை வாழ்த்துவேன் வாய்த்து.
-புலவர்மணி இரா.இளங்குமரன்
ira.ilankumaran01

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue