Skip to main content

மனத்தோடும் மணம் பேச வருவானே! – (உ)லோக நாதன்

மணம் நாடும் பெண் : ullathiluunamillai

மனத்தோடும் மணம் பேச வருவானே!

மூவாறு வயது தொட்டு
யாராரோ பெண் கேட்டார்கள்
பெண்ணை மட்டுமல்ல….
பொன்னும் பொருளும் கூட
ஊனமுள்ள பெண்ணென்று
உயர்ந்து கொண்டே போகிறது
வீடு வாசல் சொத்தென்றும்
ஊர்திகூட வேண்டுமாம் கைக்கூலியாய்!
அழகில் ஓர் குறையில்லை
அறிவிலும் ஓர் குறையில்லை
அன்பில் கூடக் குறையில்லை
அப்புறம் என்ன குறையோ?
ஊனம் கேட்டுப் பெற்ற வரமா?
கடவுள் கொடுத்த சாபமா?
பெற்றோரின் பாவமா?-அது
துய்ப்போரின் பலனா?
இயற்கை தந்த பரிசை
இழித்துரைக்கும் இனமே
இதயம் தொட்டுச் சொல்லுங்கள்
உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்…..!!??
ஊனமென்று படைத்தவனே
உணர்ச்சியைக் கொன்று படைத்திருந்தால்
உங்கள் முன் நிற்கத் தேவையில்லை
உயிரும் நோகத் தேவையில்லை
வரன் பேச வந்தவரெல்லாம்
முரண் படாமல் முறையாய்
வரன் பேசிச் சென்றிருந்தால்
நான் பேச இங்கொன்றுமில்லை
ஊனம் பார்த்துச் சென்றவர்கள்
ஊனமாய் பேசிச் சென்றார்கள்
ஊனத்துக்குப் பகரமாய்ப் பணமாம்
ஊனம் எனக்கா? உங்களுக்கா?
உள்ளத்தில் ஊனம் வைத்து
உதட்டில் பொய் மறைத்து
பணத்தில் குறி வைக்கும்
குணம் கொண்ட கூட்டமே
இந்த ஊனத்தோடும் உறவாட
இவள் உள்ளத்தோடும் உரையாட
இவள் மனத்தோடும் மணம் பேச
உள்ளத்தில் ஊனமில்லாதவன் வருவானே!
(உ)லோக நாதன்
loganathan


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue