Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வெ. அரங்கராசன்


attai-kuralarusolurai

02. பொருள் பால்    
09. பொருள் இயல் (கூழ் இயல்)
அதிகாரம் 076. பொருள் செயல் வகை.

செல்வத்தின் தன்மை, தேவை,
சிறப்பு, திரட்டும் வழிமுறைகள்.

  1. பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும்
   பொருள்அல்ல(து), இல்லை பொருள்.

மதிப்பு இல்லாரையும், மதிப்பு
உள்ளாராக மாற்றுவது செல்வமே.

  1. இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை,
   எல்லாரும் செய்வர் சிறப்பு.
          
செல்வம் இல்லாரை, எல்லாரும்
இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார்.

  1. பொருள்என்னும் பொய்யா விளக்கம், இருள்அறுக்கும்
   எண்ணிய தேயத்துச் சென்று.  

செல்வம்எனும் நிலைவிளக்கு எங்கும்
செல்லும்; ஏழ்மைஇருளைக் கொல்லும்.

  1. அறம்ஈனும், இன்பமும் ஈனும், திறன்அறிந்து
   தீ(து)இன்றி, வந்த பொருள்.    

          தீதுஇலாது வருசெல்வம், அறவாழ்வும்,
தீரா இன்பமும் தரும்.

  1. அருளொடும், அன்பொடும், வாராப் பொருள்ஆக்கம்
   புல்லார்; புரள விடல்.
அருள்,அன்பு பொருந்தாது வரும்பொருள்
பெருக்கைப், பொருந்தாது விடு.

  1. உறுபொருளும், உல்கு பொருளும்,தன் ஒன்னார்த்
     தெறுபொருளும், வேந்தன் பொருள்.

வரிப்பொருளும், சுங்கமும், பகைவர்வழிப்
பொருளும் அரசுப் பொருள்.

  1. அருள்என்னும் அன்(பு)ஈன் குழவி, பொருள்என்னும்
   செல்வச் செவிலியால் உண்டு.   

அன்புத்தாயின் அருட்குழந்தை, செல்வம்எனும்
வளர்ப்புத் தாயால் வளரும்.

  1. குன்(று)ஏறி, யானைப்போர் கண்(டு)அற்(று)ஆல், தன்,கைத்(து)ஒன்(று)
   உண்டாகச் செய்வான் வினை.
கைப்பொருள் கொண்டு செயல்செய்தல்,
குன்றுஏறி, யானைப்போர் காணல்போல்.

  1. செய்க பொருளைச், செறுநர் செருக்(கு)அறுக்கும்
   எஃ(கு),அதனில் கூரிய(து) இல்.

பகைவர்தம் ஆணவத்தை அழிக்கும்
கருவிஆம், செல்வத்தைப், பெருக்கு.

  1. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு), எண்பொருள்
   ஏனை இரண்டும் ஒருங்கு. 

அறவழி வருநிறை பொருளே,
அறமும், இன்பமும் நிரப்பும்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue