எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்

thirukkural+1

எனக்குப் பிடித்த திருக்குறள்

  எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற   உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன்,
  திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக் குறிப்பிடும் பொழுது அஃது ஒருவகையில் முதல்  மக்கள் இனமான தமிழ் மக்களைத்தான் குறிக்கின்றது, அவ் வகையில் தமிழ் மக்களைப் போற்றும் வகையில் குறிப்பிடும் திருக்குறளே எனக்கு மிகவும் பிடித்த திருக்குறளாகும், ஆம்,
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றhங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
என்னும் திருக்குறள்தான், அது.
 இக்குறளுக்கான உரையில் பரிமேலழகர். “படைப்புக்காலத்து அயனால் படைக்ககப்பட்ட கடவுட் சாதி. அவர்க்கு இடம்   தென்திசையாதலின் தென்புலத்தார் என்றார்.” என விளக்குகிறார். படைப்புக் காலத்தில் முதலில் படைக்கப்பட்ட மக்கள் இனம்தமிழினம்தானே! எனவே தமிழ் மக்கள் தம் இனத்தாரை ஓம்புதல்வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
  இதனை வேறுவகையாகவும் பார்க்கலாம். உயிர் நீத்தாரை வணங்கிப் போற்றுதல் மக்கள் பண்பாடு. எனவே பெருங் கடல்கோள்களால் கூட்டம் கூட்டமாக மறைந்த தென்புலத் தமிழ் மக்களை வணங்கிப் போற்றுதல் வேண்டும; பிற இனத்தாரின் தாய் இனம் தமிழினமாதலின் அவர்களும் போற்ற வேண்டும் என வான்புகழ் வள்ளுவர் தென்புலத்தார் நினைவைப் போற்ற வேண்டும் என்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்,
  மறைந்தோர் நினைவைப் போற்றினால் மட்டும் போதுமா? இருப்போரைப் போற்ற வேண்டாவா? என்கிறீர்களா? இதற்குப் பேராசிரியர் முனைவர் சி,இலக்குவனார் அவர்கள் கூறும் பின்வரும் விளக்கத்தைப் பாருங்கள்,
“தென்புலத்தார் = தென்நாட்டார் என்பதே நேர்பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென்தமிழ்நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன்நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க   வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை தென்தமிழ் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்றாக வலியுறுத்தினார் என்பதே சாலப் பொருததமாகும்.
  ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதிவாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர்   பெருமான் உளம் நொந்து     நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார், உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப்பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப்   பொது   மறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.”
எனவே, இறந்தோர் நினைவைப் போற்றுவதாகக் கொண்டாலும் சரி, வாழ்வோரைப் பேணவேண்டும் என எடுத்துக்   கொண்டாலும் சரி, எல்லாவற்றிற்கும் இடம் தரும் வகையில் உலகின் மூத்த இனமாகிய தமிழினத்தைச் சுட்டி வள்ளுவப் பெருந்தகை வாழ்வியல் அறம் வழங்கியுள்ள இக்குறளே எனக்கு மிகவும் பிடித்த திருக்குறளாகும்,

-இலக்குவனார் திருவள்ளுவன்
‘கண்ணோட்டம்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue