Skip to main content

இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க! – பூங்கொடிபராங்குசம்


Ilakkuvanar+04

இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க!


இலக்கியம் கூறும் இயல்புடை வாழ்வைப்
பலப்பலக் கூறாய்ப் பகுத்துக் காட்டிச்
சங்கத் தமிழைச் சாறாய்ப் பிழிந்த
சிங்க மறவர்; சிறந்தநல் மொழியர்
இலக்குவன் என்னும் பண்புடைப் பெரியர்
கலக்கமில் நெஞ்சர் கண்ணிமை துஞ்சா
உழைப்பில் நாளும் உயர்ந்த நிலையால்
அழைத்தது காலம் அவர்நூற் றாண்டைப்
போற்றி மகிழப் புதுப்பொலி வானது
ஆற்றிய பணிக்கே அகமுக நெகிழ
நன்றி யென்பதை நாடி யவர்க்கே
இன்று சொல்லியே இறும்பூ தெய்தது.
கற்றோ ரெல்லாம் களிப்புறு வாழ்த்தால்
பொற்றா மரையெனப் போற்றினர் புகழ்ந்து
செந்தமிழ் மாமணி செம்மொழி வேந்தர்
சிந்தையில் குளிர்ந்த சீருறும் அறிஞர்
இலக்குவ னார்போல் இன்றமி ழாய்ந்தே
இலக்கணம் தேர்ந்திட எளிய தமிழும்
மாணவர் பயில மக்களைத் தொடர
ஆனதே இன்று@ அன்னவர் நூற்றைப்
பாவலர் புகழும் பாட்டினி லெல்லாம்
காவலர் தமிழ்க்குக் கரையவர் என்பர்
இன்பத் தமிழை இனிப்பாய்த் தந்த
அன்பரைப் புகழ்வோம்! ஆருயிர் மொழிக்காம்
இலக்கிய இணைய இன்பந் தந்த
இலக்குவ னார்புகழ் இனிதே வாழ்க!
– புலவர் பூங்கொடி பராங்குசம்
புதுச்சேரி
‘செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார்’  நூல்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue