Skip to main content

இலக்குவனார் புகழ்நிலைக்கும்! – கவிஞர் கா. முருகையன்

ilakkuvanar+05

பேராசிரியர் இலக்குவனார்!

இலக்குவனார் எனும்பெயரைச் சொல்லும் போதே
இனஉணர்வும் மொழிஉணர்வும் எழுமே நெஞ்சில்!
தலைமுறையில் தமிழுக்கும் தமிழ ருக்கும்
தம்வாழ்நாள் முழுமைக்கும் தொண்டு செய்தார்!
சிலரைப்போல் ஒருபோதும் தமிழைச் சொல்லி
சில்லறைகள் இவர்சேர்த்த தில்லை! ஆனால்
மலையெனவே எதிர்ப்புகளுக் கஞ்சி டாமல்
மாத்தமிழைக் காத்திடவே சிறைக்கும் சென்றார்!
மொழிப்போரில் களம்கண்டோர் தம்மில் அந்நாள்
முன்வரிசைப் படையினிலே இவரி ருந்தார்!
“அழித்தொழிக்க வந்தஇந்தி தமிழின் மீது
ஆதிக்கம் செலுத்திடுமா தமிழர் நாட்டில்?
விழித்தெழுவீர் மாணவர்காள்!”- என்றே சொல்லி
வேங்கையென முழக்கமிட்ட மறவர்! மானம்
இழப்பதற்கோ? காப்பதற்கோ? இந்த வாழ்க்கை!
இல்லையில்லை! இந்தஉயிர் தமிழுக் கென்றார்!
எத்தனையோ பேர்பிறந்தார்; இறந்து போனார்!
இறந்தபின்னும் வாழ்ந்திடுவோர் ஒருசிலர்தாம்!
அத்தகையோர் யார்? பிறர்க்காய் உழைத்தோர் அன்றோ!
அன்னோரில் இலக்குவனார் ஒருவர்! நேற்று
செத்தவரா அவர்? இல்லை! தமிழர் நெஞ்சில்
செம்மாந்து நிற்கின்றார் நூற்றாண்டாக!
இத்தனைக்கும் மேலாக வேறொன் றுண்டோ?
இலக்குவனார் புகழ்நிலைக்கும் எச்ச மாக!
-கவிஞர் கா. முருகையன்
‘செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார்’  நூல்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue