Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை


attai_kuralarusolurai

02.  பொருள் பால்
05.  அரசு இயல்

அதிகாரம் 060. ஊக்கம் உடைமை

எவ்வகைச் சூழலையும் கலங்காது,
எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி

  1. ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,
      உடைய(து) உடையரோ மற்று?

      ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;
        மற்றையார், உடையார் ஆகார்.

  1. உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,
      நில்லாது; நீங்கி விடும்.

      ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;
        பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.

  1. ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார், ஊக்கம்,
      ஒருவந்தம் கைத்(து)உடை யார்.

 வளநலங்களை இழப்பினும், ஊக்கத்தார்,
       “இழந்தோம்” என்று கலங்கார்.

  1. ஆக்கம், அதர்வினாய்ச் செல்லும், அசை(வு)இலா
      ஊக்கம், உடையான் உழை.

      வளநலங்கள், வழிகேட்டுத், தளராத
        ஊக்கத்தான் இடத்திற்கே செல்லும்.

  1. வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம்; மந்தர்தம்,
      உள்ளத்(து) அனைய(து), உயர்வு.

      நீர்அளவே, மலர்உயரம்; மனிதர்தம்
        ஊக்க அளவே, உயர்வு.

  1. உள்ளுவ(து) எல்லாம், உயர்(வு)உள்ளல்; மற்(று),அது
     தள்ளினும், தள்ளாமை நீர்த்து.

 உயர்வையே, சிந்தி! தள்ளிவிட்டாலும்,
       தள்ளக்கூடாத சிந்தனை அது.

  1. சிதை(வு)இடத்(து), ஒல்கார் உரவோர்; புதைஅம்பில்
      பட்டுப்,பா(டு) ஊன்றும் களிறு.

      அம்புகள் தைத்த யானைபோல்,
        ஊக்கத்தார், அழிவிலும் தளரார்.

  1. உள்ளம் இலாதவர், எய்தார், உலகத்து,
     “வள்ளியம்” என்னும் செருக்கு.

     ஊக்கம்இலார், “வள்ளல் தன்மையோம்”
       என்னும், பெருமையினை, அடையார்.

  1. பரியது, கூர்ங்கோட்ட(து), ஆயினும், யானை
      வெரூஉம், புலி,தாக்(கு) உறின்.

 மாபெரும் யானைகூடச் சிறுபுலி
        தாக்கினால் பெரிதும் அஞ்சும்.

  1. உரம்ஒருவற்(கு), உள்ள வெறுக்கை; அஃ(து)இல்லார்,
      மரம்;மக்கள் ஆதலே வேறு.

      ஊக்கம்தான், உள்ளத்துச் செல்வம்;
        ஊக்கம்இலான், ஆள்உருவில் மரமே.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 061. மடி இன்மை)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue