Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 054. பொச்சாவாமை

attai_kuralarusolurai97
02.பொருள் பால்
05.அரசு இயல்

அதிகாரம் 054. பொச்சாவாமை 

மகிழ்ச்சியிலும், கடமை மறவாமை,
மனத்தின்கண் சோர்வு அடையாமை

  1. இறந்த வெகுளியின் தீதே, சிறந்த
     உவகை மகிழ்ச்சியின், சோர்வு.

     மகிழ்ச்சியில் செயலை மறத்தல்
       மிகுந்த சினத்தைவிடத், தீயது.

  1. பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை,
      நிச்ச நிரப்புக்கொன்(று) ஆங்கு.

 மறதிமை புகழையும் கொல்லும்;
        வறுமை அறிவையும் கொல்லும்.

  1. பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை; அது,உலகத்(து)
     எப்பால்நூ லோர்க்கும், துணிவு.

     ‘மறதியர்க்குப் புகழ்மை இல்லை’
        என்பதே நூலறிஞர் முடிவு.

  1. அச்சம் உடையார்க்(கு) அரண்இல்லை; ஆங்(கு)இல்லை,
     பொச்சாப்(பு) உடையார்க்கு நன்கு.

     அஞ்சுவார்க்குப் பாதுகாப்பும் இல்லை;
       மறதியார்க்கு நல்நிலையும், இல்லை.

  1. முன்உறக், காவா(து) இழுக்கியான், தன்பிழை,
      பின்,ஊ(று) இரங்கி விடும்.

 வரும்முன், பிழையைத் தடுக்காதான்,
       வந்தபின், பெரிதும் வருந்துவான்.

  1. இழுக்காமை, யார்மாட்டும், என்றும், வழுக்காமை
      வாயின், அஃ(து)ஒப்ப(து) இல்.

      எக்கணமும் தவறாத மறவாமையே,
        ஒப்புஇல்லா ஆற்றல் ஆகும்.

  1. அரியஎன்(று) ஆகாத இல்லை,பொச் சாவாக்
      கருவியான், போற்றிச் செயின்..

      மறவாது, விழிப்போடு செய்வார்க்கு
        ஆகாத செயல்ஏதும் இல்லை.

  1. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும், செய்யா(து)
      இகழ்ந்ததார்(கு), எழுமையும் இல்.

 புகழ்செயல்கள் செய்யார்க்கு, என்றும்
        புகழ்மிகு வாழ்க்கை கிடைக்காது.
  1. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம்தம்,
     மகிழ்ச்சியின், மைந்(து)உறும் போது.

     மகிழ்ச்சி மிகும்பொழுது, மறதியால் 
       கெட்டாரை எண்ணி உணர்க.

  1. உள்ளிய(து) எய்தல், எளிதுமன், மற்றும்,தான்
      உள்ளிய(து), உள்ளப் பெறின்.

     நினைத்ததை நினைத்துக்கொண்டே இருப்பின்,
       நினைத்ததைப் பெறுதல் எளிது.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 055. செங்கோன்மை)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue