திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்


attai_kuralarusolurai03

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 048. வலி அறிதல்

செயற்படும் முன்னம், எல்லாவகை
வலிமைகளின், திறன்களின் ஆய்வு.

  1. வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும்,
      துணைவலியும், தூக்கிச் செயல்

     செயல்வலி, தன்வலி, பகைவலி,
        துணைவலி ஆராய்ந்து செய்க.

  1. ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச்
      செல்வார்க்குச், செல்லாத(து) இல்.

     முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து
        செய்தால், முடியாததும் இல்லை.

  1. உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின் ஊக்கி,
      இடைக்கண் முரிந்தார், பலர்.

    ஆற்றலை அறியாது, செயற்பட்டு,
        இடையில் கெட்டார் பலர்.

  1. அமைந்(து)ஆங்(கு) ஒழுகான், அள(வு)அறியான், தன்னை
     வியந்தான், விரைந்து கெடும்.

     தன்வலிக்குள் அடங்கான், அளவை
        அறியான், தற்பெருமையான், கெடுவான்

  1. பீலிபெய் சாகாடும், அச்(சு)இறும், அப்பண்டம்,
      சால மிகுத்துப் பெயின்.

     அளவுகடந்து மயில்இறகு ஏற்றினும்,
        வண்டியின் அச்சும் முறியும்.

  1. நுனிக்கொம்பர் ஏறினார், அஃ(து)இறந்(து) ஊக்கின்,
      உயிர்க்(கு)இறுதி ஆகி விடும்.

   உச்சிக் கொம்பில் ஏறியார்,
        மேன்மேலும் ஏறினால், உயிர்இழப்பர்.

  1. ஆற்றின் அள(வு)அறிந்(து) ஈக; அது,பொருள்
     போற்றி வழங்கும் நெறி.

    வருவாயின் அளவுஅறிந்து கொடுத்தல் 
       பொருட் கொடை முறைஆகும்.

  1. ஆ(கு)ஆ(று), அள(வு)இட்டி(து), ஆயினும், கே(டு)இல்லை,
     போ(கு)ஆ(று), அகலாக் கடை.

    செலவு மிகாஆயின், வரவுவழி
       சிறிதுஆயினும், கேடு இல்லை.

  1. அள(வு)அறிந்து, வாழாதான் வாழ்க்கை, உளபோல,
      இல்ஆகித் தோன்றாக் கெடும்.

     அளவுஅறிந்து, வாழான், உளன்போல்
        தோன்றுவான்; பின்தோன்றான்; கெடுவான்.

  1. உளவரை, தூக்காத ஒப்புர(வு) ஆண்மை,
     வளவரை, வல்லைக் கெடும்.

   செல்வ அளவுஅறியாது, பொதுக்கொடை
       செய்தால், விரைவில் வளம்கெடும்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
ve.arangarasan04
(அதிகாரம் 049. காலம் அறிதல்)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue