தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்திடாரோ! – பாவேந்தர் பாரதிதாசன்


kellys_name

பெயர் மாற்றம்

சென்னையில் கீழ்ப்பாக்கத்தைத்
தேடினேன். ஓர் இளைஞன்
அன்னதோர் ஊரே இல்லை
என்றனன்! அப்பக்கத்தில்
இன்னொரு முதியோர் தம்மை
வினவினேன்; இருப்ப தாகச்
சொன்னார் அவ்வூர்க்குப் போகத்
தோதென்றும் சொல்ல லானார்.
மக்களின் இயங்கி வண்டி
இங்குதான் வந்து நிற்கும்
இக்காலம் வருங்காலந்தான்
ஏறிச்செல் வீர்கள் என்றார்.
மக்களின் இயங்கி வண்டி
வந்தது குந்திக் கொண்டேன்
சிக்கென ஓர் ஆள் “எங்கே
செல்லுதல் வேண்டும்” என்றான்.
“கீழ்ப்பாக்கம்” என்று சொன்னேன்
கேலியை என்மேல் வீசிக்
”கீழ்ப்பாக்கம் என்ப தில்லை
மேல்பாக்கம் தானும் இல்லை
கீழிறங் கிடுவீர்” என்றான்.
அங்கொரு கிழவர் கேட்டுக்
கீழ்ப்பாக்கம் உண்டு காணும்!
வரலாறு கேட்பீர் என்றார்;
கீழ்ப்பாக்கம் என்னும் அஃது
”கீல்பாக்கம்” என்றாகிப் பின்
தாழ்வுற்றுக் ”கெல்லிசு” என்று
தான்மாறிற்றென்று சொன்னார்.
கீழ்ப்பாக்கம் “கெல்லிசு” ஆனால்
கிள்ளையும் அள்ளி யுண்டு
வாழ்த்திடும் தமிழமிழ்தின்
வரலாறே மாறிடாதோ!
தமிழ்நாடு தமிழ்நாடென்ற
தன்பெயர் இழந்தி டாதோ!
தமிழ்நூலும் தமிழ்நூ லென்ற
தன்பெயர் இழந்திடா தோ!
தமிழரும் தமிழர் என்ற
தம்பெயர் இழந்திடாரோ!
தமிழ்ப்புகழ் தொலைப்பார் தங்கள்
தனியாட்சி நிறுவிடாரோ!
இவ்வாறு வருந்தா நின்றார்;
இயங்கியும் “கெல்லிசு” என்ற
அவ்விடம் நிற்கக் கண்டார்
அங்ஙனே இறங்க லுற்றார்
செவ்விதிர் கீழ்ப்பாக் கத்தின்
தெருக்கண்டார் தமிழ் வழங்கும்
கொவ்வைசேர் இதழ்கள் கண்டார்
கொம்புலிக் கூட்டம் கண்டார்
தமிழ்நலம் காக்க! இன்பத்
தமிழகம் காக்க! அன்புத்
தமிழரே தமிழ கத்தில்
தமிழரின் ஆட்சி காக்க
இமைமூடித் திறக்கு முன்னே
எதிரிகள் கோடி இன்னல்
சமைக்கின்றார்! அவர்கள் தோளைச்
சாய்ப்பது பெரியார் பாதை!
– பாவேந்தர் பாரதிதாசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue