Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்

01.அறத்துப் பால்

03.துறவற இயல்    

 அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்


அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத
ஒழுக்கக் கேட்டோடு கூடாமை.

  1. வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள்
     ஐந்தும், அகத்தே நகும்.

  வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு,
       மெய்வாய்கண் மூக்குசெவி நகும்.

  1. வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்,
   தான்அறி குற்றப் படின்.

  மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக்
       கோலத்தால் என்ன பயன்?

  1. வலியில் நிலைமையான் வல்உருவம், பெற்றம்
   புலியின்தோல் போர்த்துமேய்ந்(து) அற்று.

  பொய்வேட ஒழுக்கத்தார், புலித்தோல்
       போர்த்திப் புல்மேயும் பசுபோல்வார்.

  1. தவம்மறைந்(து), அல்லவை செய்தல், வேட்டுவன்
    புதல்மறைந்து, புள்சிமிழ்த்(து) அற்று.

    தவவேடத்தார் தீச்செயல், வேடன்
       புதர்மறைந்து, பறவை பிடித்தல்போல்.

  1. ”பற்(று)அற்றேம்” படிற்(று)ஒழுக்கம், எற்(று)எற்(று)என்(று),
   ஏதம் பலவும் தரும்.

         ”பற்றுஇல்லை” என்பார்தம் பொய்நடத்தை,
         என்றுஎன்றும் துன்பங்களையே தரும்.

  1. நெஞ்சில் துறவார்; துறந்தார்போல், வஞ்சித்து
     வாழ்வாரின், வன்கணார் இல்.

       மனத்துள் பற்[று]இலார் பற்[று]உளார்
       போலவே நடிப்பார், கொடியார்.

  1. புறம்,குன்றி கண்(டு)அனையர் ஏனும், அகம்,குன்றி
     மூக்கில் கரியார் உடைத்து.

       குன்றிமணிபோல், காவிக்கோலம்; மனத்துள்,
       அதனது மூக்குப்போல் கரிக்கோலம்.

  1. மனத்தது மா(சு)ஆக, மாண்டார்நீர் ஆடி,
     மறைந்(து)ஒழுகு மாந்தர் பலர்.

       மனத்துள் அழுக்கராய், வெளியில்,
       பொய்ஒழுக்கராய் ஏய்ப்போர் பற்பலர்.

  1. கணைகொடி(து); யாழ்கோடு செவ்வி(து);ஆங்(கு) அன்ன,
     வினைபடு பாலால் கொளல்.

  அம்புநேர்பு; யாழ்வளைவு; அதன்அதன்
       செயற்பாட்டுத் தன்மையால் மதிப்பிடு.

  1. மழித்தலும், நீட்டலும், வேண்டா, உலகம்
   பழித்த(து) ஒழித்து விடின்.
                   உயர்ந்தார் பழித்தவற்றை ஒழிக்க;  
       மொட்டையும் சடையும் அதன்பின்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 029. கள்ளாமை)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue