Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 021. தீ வினை அச்சம்


arusolurai_munattai01

01. அறத்துப் பால்  
02. இல்லற இயல்
அதிகாரம் 021. தீ வினை அச்சம்

தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும்
தீய செயல்களுக்கு அஞ்சுதல்.  
 201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்,
தீவினை என்னும் செருக்கு.
தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்;
தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார்.
 202. தீயவை, தீய பயத்தலால், தீயவை,
தீயினும் அஞ்சப் படும்.
தீயைவிடத், தீமைதரும் தீய
செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக.
 203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய,
செறுவார்க்கும் செய்யா விடல்.
பகைவர்க்கும், தீச்செயல் செய்யாமையே,
அறிவுகளுள் சிறந்த அறிவு.
 204. மறந்தும், பிறன்கேடு சூழற்க; சூழின்,
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மறந்துபோய்க் கேடு நினைத்தார்க்கும்
அறமே கேடு நினைக்கும்.
 205. “இலன்”என்று, தீயவை செய்யற்க; செய்யின்,
இலன்ஆகும், மற்றும் பெயர்த்து.
“ஏழை”என்று, தீச்செயல்கள் செய்தாலும்,
மேன்மேலும் ஏழையே ஆவான்.       
 206. தீப்பால, தான்பிறர்கண் செய்யற்க, நோய்ப்பால,
தன்னை அடல்வேண்டா தான்.
துன்பத் தாக்குதலை விரும்பாதான்,
துன்பத்தால் பிறரையும் தாக்கற்க.
 207. எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை,
வீயாது; பின்சென்(று) அடும்.
எப்பகையிலிந்தும் தப்புவர்; தீப்பகையோ,
விடாது; துரத்தி அடிக்கும்.
 208. தீயவை செய்தார் கெடுதல், நிழல்தன்னை,
வீயா(து) அடிஉறைந்(து) அற்று.
காலடிநிழல் தொடர்தல்போல், செய்த
கேடும், தொடர்ந்துவந்து கெடுக்கும்.
 209. தன்னைத்தான் காதலன் ஆயின், எனைத்(து)ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்.
தன்னைக் காதலிப்பான், தீச்செயலின்
பக்கமே நெருங்கக் கூடாது.
 210. அரும்கேடன் என்ப(து) அறிக, மருங்(கு)ஓடித்,
தீவினை செய்யான் எனின்.
கேடுறு தீச்செயல் செய்யானே,
கேடும் இல்லான்,என அறிக.
 – பேராசிரியர் வெ. அரங்கராசன்
arangarasan
(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல்)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue