Skip to main content

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 2 – வெ.அரங்கராசன்


11.0. வல்லுநர் கருத்து அறிதல் [EXPERT OPINION]  
  ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த – ஆராய்ந்த – பட்டறிந்த – வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்கொள்ளலாம். இதுவும் ஒரு வணிக நடைமுறையே. இதையும் திருவள்ளுவப் பெருந்தகையார் தெளிந்துள்ளார்; தெரிவித்துள்ளார். இதனைச்,
        செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை
         உள்அறிவான் உள்ளம் கொளல்.            [0677]
 என்னும் திருக்குறள்வழி தெரிந்துகொள்ளலாம்.
வல்லுநர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் நுண்ணாய்வு செய்து தெரிவிக்கின்றார்.
       ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை    
        ஊக்கார் அறி[வு]உடை யார்       [0463]
   பின்னர் வரும் இலாபத்தைக் கருத்தில் கொண்டு, முதலையே இழக்கும்படியான எவ் வகைச் செயற்பாட்டையும் அறிவுடையார் ஊக்கப்படுத்தார்.
அப்படிப்பட்ட உயர்ந்த – பட்டறிந்த வல்லுநரிடம் அறிவுரைகள் பெற வேண்டும். தீ நோக்கரிடம் சென்றுவிடக் கூடாது.
12.0. வல்லுநரைக் கொண்டு வணிகம் செய்தல்
        இதனை இதனால் இவன்முடிக்கும் என்[று]ஆய்ந்[து]
         அதனை அவன்கண் விடல்   [0517]
   இச் செயலை இவ் வகையால் – இம் முறையால், இவன் வெற்றிகரமாக முடித்துவிடுவான் என ஆழஆரய்ந்த பின்னர், அச் செயலை அவனிடம் விட்டுவிட வேண்டும்.
  வணிகரே அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செய்ய இயலாது. அதனால், அவ்அவ் செயற்பாடுகளுக்குத் தகுதியும் திறனும் மிக்காரிடம் அவற்றை விட்டுவிட வேண்டும்.
         வினையால் வினைஆக்கிக் கோடல் [0678]
  ஒரு செயலை வணிகரால் செய்ய முடியாதபோது, அச் செயலில் வல்லுநர் யார் என்பதை ஆராய்ந்து, அவரைக் கொண்டு அச் செயலைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.
    மேற்காணும் தொடரில் முதலில் அமைந்துள்ள வினை என்பது தொழிலாகு பெயராகக் கொள்ளப்பட்டுள்ளது. வினை = வினையாளர் = வல்லுநர்.     
13.0. பணியாளர் தேர்வு [STAFF SELECTION PROCESS]
வணிகச் செயற்பாட்டிற்கு எத்தகையோரைத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் தெளிவாகவே சிந்தித்திருக்கிறார். வணிகத்தின் வெற்றி, பணியாளர்களைப் பொறுத்தும் அமையும். அதனால் பணியாளர் தேர்வில் ஆழ்ந்த ஆய்வு தேவை.       
13.1. அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்[று]அவர்
     பற்[று]இலர் நாணார் பழி.          [0506]   
13.2. காதன்மை கந்[து] அறி[வு]அறியார்த் தேறுதல்
     பேதைமை எல்லாம் தரும்.        [0507]          
13.3. தேரான் பிறரைத் தெளிந்தான், வழிமுறை
     தீரா இடும்பை தரும்.              [0508]     
13.4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்       \                
     வே[று]ஆகும் மாந்தர் பலர்.       [0514]     
13.5. அறிந்[து]ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால், வினைதான்
     சிறந்தான்என்[று] ஏவற்பாற்[று] அன்று.        [0516]  
         இத்தனை கூறுகளையும் கூர்ந்து ஆராய்ந்த பின்னரே பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத் தேர்வே வணிகம் வெற்றி பெற உற்றதுணையாக முற்றும் உதவும்.
14.0. தெளிந்து தேர்ந்தாரிடம் பணி ஒப்படைப்பு
         வினைக்[கு]உரிமை நாடிய பின்றை அவனை
         அதற்[கு]உரியன் ஆகச் செயல்       [0518]
        நன்கு ஆராய்ந்து எச் செயலுக்கு எப் பொறுப்புக்கு எப் பணிக்கு எவர் தகுதி உடையவர் என வணிகப் பணியாளர்களைத் தேர்ந்து எடுத்தபின், அச் செயலுக்கு அப் பொறுப்புக்கு அப் பணிக்கு அவரை உரியவர் ஆக்கிவிட வேண்டும்.  
15.0. மனித வள மேலாண்மை [HUMAN RESOURSE MANAGEMENT]
        இதனை இதனால் இவன்முடிக்கும் என்[று]ஆய்ந்து
         அதனை அவன்கண் விடல்       [0517]
 என்னும் திருக்குறட் பாவின்படி, அவரவருக்கு ஏற்ற பணிகளை அவரவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் அப் பணிகளை அவர் எதிர்பார்த்தபடி செய்கிறாரா என்பதையும் நாள்தோறும் மேலாண்மை செய்ய வேண்டும். இதனைத் திருவள்ளுவர்,
      நாடோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
        கோடாமை கோடா[து] உலகு.         [0520]
  என்னும் திருக்குறட் பாவில் கூறுகிறார்.
(தொடரும்)
பேராசிரியர் வெ.அரங்கராசன்
பேரா.வெ.அரங்கராசன்
பேரா.வெ.அரங்கராசன்
 அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015

Comments

  1. நன்னோக்கு, நல்லுரைத் தொகுப்பு

    ReplyDelete
  2. நன்னோக்கு, நல்லுரைத் தொகுப்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue