இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்

river01

உள்ள வெள்ளம்

  ஊற்றென உளத்துள் தோன்றும்
.. உணர்வுகள் தொண்டை சேருங்
காற்றினை உதறச் செய்து
.. கவிதையாய் உதட்டுக் கீனும்;
ஏற்புடைத் தரத்தில் உண்டா
.. இலக்கணம் சரியா என்று
சாற்றிடும் போதென் நெஞ்சம்
.. சரிவரப் பார்ப்ப தில்லை (1)
மீட்டிடின் நீளும் நாதம்
.. முதற்செவி சேரும் முன்னர்
ஊட்டிடும் விரலி னூடே
.. உணர்வினால் உள்ளம் சேர்ந்து
காட்டுமோர் மோக மாயை,
.. காண்கையில் மயங்கும் போது
கூட்டியோ குறைத்தோ பாட்டைக்
.. கொன்றிடல் இயல்பு தானோ? (2)
 ஆழ்கடற் குடித்த நீரை
.. அணைத்திடும் முகில் போன்றே
வாழ்வியல் பயிற்றும் பாடம்
.. வகைபல, வாங்கிச் சேர்த்து
மூழ்கியே அதனுள் முத்தை
.. முனைப்புடன் நாடித் தேர்வேன்,
சூழ்ந்தஇவ் வரங்கச் சான்றோர்
.. சொல்கவென் தவற னைத்தும் (3)
 கரைவழி எங்கும் தோன்றும்
.. கண்வழிக் காட்சி நெஞ்சில்
வரைந்திடும் ஓவி யத்தை
.. வண்ணமும் நனவும் சேர்த்து;
நுரைத்திடும் நெஞ்சில் நின்று
.. நுண்ணிய கனவே சொல்லால்
உரைத்திடும் கவியாய் மாறும்,
.. உணர்வது கவிதை தானே (4)
  மோதிடும் உணர்வாய் நெஞ்சில்
.. முளைத்திடும் கவிதைப் போது;
யாதிலும் கவிதை காணும்
.. யந்திரம் ஆகும் நெஞ்சம்;
வேதமும் விண்ணார் தெய்வம்
.. வேதனும் கண்கள் பார்த்த
காதலும் அழகாய்த் தோன்றும்
.. காட்சியும் கவிதை ஈனும் (5)
 கங்கையாய் தலையில் வெள்ளம்,
.. கைவழி விரலில் ஊறி
பொங்கிடும் கவிதை யாகப்
.. புதுப்புது வடிவங் கொண்டே;
பங்கிடப் பெருகும் தீபோல்
.. பரவிடும் பொருளே இஃதும்
இங்கினி இயன்ற நேரம்
.. இயல்வ தும் இதயம் ஏறும் (6)
 சேயதன் சித்தி ரத்தை
.. தேர்ந்திடா தாயும் உண்டோ?
தீயெனச் சொன்ன துண்மை,
.. தேடிவோர் கவிதை தந்தேன்;
வாயுவின் வீச்சே தன்முன்
.. வளர்தழல் எரியச் செய்யும்;
தாயென நீரே ஆகித்
.. தணலெனை ஊதிக் காப்பீர் (7)
  கண்படும் காட்சித் தென்றல்
.. கனவெனும் முகிலைத் தள்ளும்;
எண்ணமும் கனவும் சேர
.. இடித்தெழும் கவிதைக் கீற்று;
வண்ணமாய் வானில் தோன்றும்
.. வடிவமாம் வளைந்த வான்வில்;
மண்ணெலாம் நனைக்கப் பெய்யும்
.. மழையது சுவைதா னன்றோ (8)
 இத்தரை மரத்தின் மீதே
.. இனித்திடும் பழமும் உண்டு;
மெத்தவே விளைச்சல் தந்தும்
.. மாறுமோ இனிப்பின் தன்மை?
நித்தமோர் சுவையிற் தோய்த்து
.. நின்மன வாயில் சேர்க்கும்
வித்தைசேர் உள்ளம் ஒன்று
.. விளைந்திடும் கவிதை நூறு  (9)
 பாட்டுடைப் பொருளாய் கண்ணில்
.. படும்பொருள் யாவும் மாறும்;
பூட்டிய நெஞ்சின் தாழ்ப்பாள்
.. பொடியுறத் துவங்கும் பாட்டும்;
கூட்டிட வரிகாண் சொற்கள்
.. கோலமாய் மாறி முன்னர்
கேட்டிடாக் கவிதை யாக
.. கொட்டிடும் கோல சாலம் (10)
 சொல்லினுள் உணர்வும் உண்டோ?
.. சொலச்சொல சேர்ந்த சொத்தோ?
கல்லினுள் சிற்பம் ஒன்றைக்
.. கடைந்தவன் காண்ப தைப்போல்
மெல்லவே இதயம் தேய்த்து
.. மெருகிடக் கவிதை யேற்ற
புல்லிலை பூவில் கூடப்
.. புதுப்புது வண்ணம் சேரும் (11)
  உள்ளமே நதியின் மூலம்,
.. உடைந்தெழும் கவிதை ஆறு;
வெள்ளமே நதியின் ஓட்டம்
.. வெளியெழும் உணர்வின் ஊற்று;
பள்ளமா மேடா என்று
.. புதுப்புனல் பார்த்தா பாயும்?
உள்ளெழும் கவியி னூடே
.. உதிரியாய் தவறும் சேரும்  (12)
 செல்வழி உருளும் கற்கள்
.. தெளிந்திடச் செய்யும் நீரை;
கல்வழி மன்றத் தோரென்
.. கவிதையின் களங்கம் நீக்கி
சொல்வதில் தவற றுத்து
.. தூய்தமிழ் மொழியில் நானும்
வல்லமை பெறவே நல்ல
.. வழியதைக் காட்டிச் செல்வீர் (13)
அன்புடன்
சந்தர் சுப்பிரமணியன்
www.MovingMoon.com
குறிப்பு: தமிழ்க்கலை இலக்கியப் பேரவையில் 27/06/2010 அன்று நடந்த கவியரங்கத்தில் ‘உள்ளத்தின் வெள்ளம்’ எனும் தலைப்பில் பாடப்பட்ட கவிதை.
ChandarS02

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue