காதல் ஒரு விந்தை! - கவிக்கோ ஞானச்செல்வன்

காதல் ஒரு விந்தை!


கவிக்கோ ஞானச்செல்வன்
kaviko_gnanachelvan01
திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும்
தேன்சுவை தோற்கும் மொழியுடையாள்
கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில்
கொட்டும் திருவென உருவுடையாள்!
கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி
காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்!
பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர்
போன்றதன் காதலன் தனைக்காண்பாள்!
ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி
ஆளும் அடலுறு தலைவனுண்டு
ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம்
ஆடிப் பாடிக் களித்ததுண்டு
பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப்
பரந்த பெருங்கடல் வாழ்கையதாம்
சேயிழை தென்னஞ் சோலையென-வளம்
செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்!
பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம்
பாவை ஓரிடம் தனிலமர்ந்து
காதலன் வரவை மனத்தெண்ணி -கரம்
காட்டும் அசைவினில் உயிரேற்றி
நாதமாய் நிற்கும் இறையருளை-அவள்
நாடிக் களிக்கும் நிலைகண்டால்
ஞால முதல்வன் படைப்பினிலே-பெரும்
விந்தை இக்காதல் என்றிடுவோம்!
ஓரிதழ் அட்டைப் படத்திற்கு எழுதிப் பரிசு பெற்ற கவிதை(1996).
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue