பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 14– ஆ.வெ.முல்லை நிலவழகன்


aa.ve,mullainilavazhagan
 [மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி]
காட்சி – 14
அங்கம்    :     கவிஞர், அன்பரசன்
இடம்      :     குடிலின் முன்வாசல்
நிலைமை  :     (நாடகமாடுவோர் அழகுகளை
நயம்பட எடுத்துக் கூறியபின்
ஓடிய முடியூர் எண்ணத்தை
உரைக்கின்றார் கவிஞர் அன்புக்கு)
அன்ப :     இத்தனை அழகு இருவருக்கும்
இருக்க வேண்டுமா? நடிப்பதற்கு!
சத்தியமிட்டே சொல்கிறேன்!
இருவருமே நல்ல அழகுதான்!
கவி       :     பார்த்ததும் மனதிலோர் ஒழுக்கத்தைப்
பரப்பிடும் அழகு ஒன்றென்றால்
பார்த்ததும் காம இச்சைதனை
எழுப்பிடும் அழகினை இரண்டெனலாம்!
எவ்வகை அழகைத் தேர்ந்தெடுத்து
இவர்களை நடிக்கவைத்தாரோ?
கவனம் நமக்கு இதில் வேண்டாம்!
கருத்துடன் கொஞ்சம் கேட்டுவிடு!
முடியூர் வழிநோக்கி அடிமேல் அடிவைத்து
அடைந்தேன் அவ்வூரை அறிந்தேன் பலசெய்தி
கற்றாழை கள்ளி கருவை மரமும்
சுற்றிலும் ஊரில் மதில்போல் நிற்க
பனைபுளி ஆலமரங்களும் அங்கே
வினைவழிக்கதைகளை சொல்லவும் கேட்டேன்!
ஊரின் கிழக்கில் தனித்தே இருந்த
ஆறே குடிகள், நடுவினில் கோயில்
தெருவின் பெயரோ பறையர் தெருவாம்
உருவின் ஊரில் ஓரங்கம் அதுவாம்
எட்டேகுடில்கள்! திட்டாய் நிற்க
விட்டேன் ஆங்கே! கேட்டேன் பெயரை
பள்ளத் தெருவு பார்க்க யாரை?
சொல்ல வேண்டும் என்றார் ஒருவர்!
களைப்பு நடந்த நடையால் அல்ல!
சொல்லதனைக் கேட்டத்திகைப்பால் தம்பி!
தேநீர் அருந்தக் கடைக்குச் செல்ல!
கூனல் வடிவில் நின்ற ஒருவர்
யார்றா? உந்தன் பேர்றா? என்ன?        
ஊர்றா? வர்ணம் கூற்றா, என்றார்?
சாதியில் கீழோ! என்றே கேட்டார்?
மீதொன்றும் இல்லை என்றார் கடைநர்!
ஊருக்கு நடுவில் கள்ளத்தெருவாம்!
ஊரின் ஓரம் வண்ணாரத் தெருவாம்!
தொழிலின் பெயரே தெருவின் பெயராய்!
வழிவழி சொல்லும் வாயங்குக் கண்டேன்!
வளையர்பள்ளர் கள்ளர் பறையர்
என்னும் சாதிப்பிரிவிற் கேற்ப!
உள்ளார் வெளுப்போர் சிரைப்போர் தம்பி!
பறையர்க்குத் தொழிலோ செய்வர் இங்கே
பள்ளர்க்குச் செய்வோரிலும் மிகத்தாழ்வாம்,
கள்ளர்க்குச் செய்வோரே அனைத்திலும் உயர்வாம்
எள்ளிநகைத்திட இதிலும் செய்தி!
வேறெங்கு உண்டு? வெட்கக்கேடே!
அன்ப :  சாதிமத பேதம் காலத்தால்
நாதியே அற்றுப் போகாதா?
கவி       :     சாதிஎனச் சொல்லும் சண்டாள வெறிநாயை
வீதியில் சுட்டுவிடும் நாளும் எந்நாளோ?
அன்றே ஒழியுமடா! அடிவேரும் தீயுமடா!
இன்றேல் என்றுமது தீராநோய் தாண்டா!
அன்ப   :       கவிஞரே!
கவி       :     ஒன்றே வயல்களின் குளமொன்றாக
ஒன்றே குலமாய்! திருமூலர் முதலாய்
நன்றே வள்ளுவன் பாரதி ஒளவை
இன்னும் அறிஞர்கள் பெருமக்கள் வரையில்
பன்னெடுங்காலமாய்ப் படித்தே உரைத்தும்
பாடிப்பாடி எடுத்தே உரைத்தும்
“என்றுமே நீக்கமாட்டோம்” என்றே
உடும்புப்பிடியாய் பிடிக்கின்ற மாக்கள்
மக்களாய் இங்கே வாழ்ந்திடும்போது
எவர் எதை உரைத்தும் ஆவது என்ன?
இக்காலமல்ல! இன்னுமோர் பத்து
ஆயிரம் ஆண்டும் உரைப்பதுவீணே!
அன்ப :        நிலவிலே மனிதன் உலவிய பின்பும்
நீங்காத சாதி நீங்குவதெப்போ?
தெளிவாய் எனக்கு உரைக்கவே செய்வீர்
நீங்கவே வழியே இல்லையா? மொழிவீர்!
கவி  :     ஆண்டைகள் அடியார்கள் சம்பந்தியாக
சட்டமே போடும் அரசிங்கு வேண்டும்!
வேண்டாமே! என்று சொல்கின்ற அவரை
நாற்சந்தி சதுக்கத்தில் நாய்போல் சுட்டு ஏனென்றக்
கேள்விக்குச் சட்டமாய் நெற்றிப்
பொட்டிலேச்சீட்டு ஒட்டவும் வேண்டும்!
ஆண்டுகள்பத்தில் சாதின்னா என்ன?
கேள்வியே அற்றுபொருளற்றுப்போகும்!
அன்ப :     தனியயாரு மனிதனின் சுதந்திரம்! இதனால்
அழியுமே கவிஞரே! அறிவீரன்றோ?
கவி       :     இனமே இரண்டாய் வாழப்பத்து
ஆண்டேக் கட்டுப்பாடு! தம்பி!
குருதி ஒன்றென! குலமும் ஒன்றென!
அண்ணன் தம்பி மாமன் மைத்துனர்
உறவுகளாக அனைவரும் ஆனால்
எவனைப் பார்த்து எச்சாதி என்பான்?
அன்ப :       உண்மை ஐயா! உண்மை! உண்மை!
உணர்ந்தே உரைத்தீர்? அறிந்தேன் நானும்;
கவி       :     நன்றந்த நாளாய் வருகின்ற நாளே
நன்னாள், பொன்னாள், தமிழர் திருநாள்
[காட்சி முடிவு]
  (பாடும்)
 two-sparrows09


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue