பிரபாகரன் வருகைப் பத்து- சபரி நாதன்


55albatross_bird

வருவாய் இதுசமயம்!

வானோங்கு தமிழினம்
வளர்ந்தோங்கச் செய்தவனே
தேனோங்கு செந்தமிழால்
நாளுமுன்னைப் பாடுகிறோம்
மானோங்கு தமிழர்க்கு
மருள்நீக்கும் மன்னவனே
வானோங்கு செங்கதிரே
வருவாய் இதுசமயம். .
கையில் தமிழேந்திக்
கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிநடப்போம்
மேலான எம்தலைவா
பொய்யான கதைகளும்
புனையான வார்த்தைகளும்
நைந்ததென நீஎழுந்து
வருவாய் இதுசமயம். .
வஞ்சகத்தின் வலையதனில்
வகையாக மானானோம்
குஞ்சரி மணவாளா
குணமுள்ள மாதவனே
வஞ்சகத்தின் தளையறுத்து
வண்டமிழர் குலம்காக்க
வஞ்சலென வந்திடுவாய்
ஆறுதலைத் தந்திடுவாய். .
அஞ்சித்தலை குனிந்தும்
அடிமைபோல் வாய்புதைந்தும்
அஞ்சலென வந்தவர்க்கு
ஆதரவு சொல்லிடவே
நெஞ்சம்
நிறைந்திருக்கும்
நீதிமனுச் சோழனே
கொஞ்சம் விரைந்திங்கே
வருவாய் இதுசமயம். .
மெய்யிருக்கும் இவ்வுயிரும்
ஏங்குதய்யா உனைக்காண
பொய்யிருக்கும் இவ்வுலகம்
பேசுதய்யா புனைகதைகள்
ஐயா பிள்ளைவேலு
பெற்றெடுத்த ரத்தினமே
செய்யதமிழ்க் கொண்டுவாரும்
பொய்யதனைப் பொடியாக்க. .
கூறாமற் குறைதீர்க்கும்
குறிப்பறிந்த மன்னவனே
தேறாத கவிஎனினும்
திருமுன்பு சாற்றுகிறேன்
மாறாத துயரகல
மாயவனே நீ வருவாய்
ஆறாத வடுமாற
ஆயனென நீவருவாய். .
பண்ணாறும் செந்தமிழால்
பரணியது பாடிடவே
வண்ணக் கரும்பட்டை
வாகையணி துப்பாக்கி
வன்புலிச் சின்னம்
வரைந்திட்ட தொப்பியுடன்
கண்மை நிறமீசை
கணம்பொருந்த வாருமையா. .
எண்டிசை நடுங்கவே
இன்றிங்கு வாருமே
தெண்டிரைச் சூழ்உலகில்
தென்னிலங்கைத் தேறவே
கண்ணெடுத்துப் பாருமே
கயவர்கள் சோரவே
பண்பாடி அழைக்கிறோம்
பாயஇது நல்லசமயம். .
யாரென்ன சொன்னாலும்
யான்உன்னை ஒருநாளும் ஐயுற்ற தில்லையப்பா
கார்த்திகைத் திங்களில்
கவியெடுத்துப் பாடுவேன் வல்லவன் நின்புகழை
காலெடுத்து வாருமே
கவலைகள் நிலம்புதைய. .
வாழ்க தண்டமிழர்
மீள்க தமிழர்நிலம்
ஆழ்க துயரெல்லாம்
சூழ்க நலமெல்லாம்
வாழ்க தமிழ்ப்பாவை
வெல்க தமிழ்ப்படை
வளர்க ஒற்றுமை
வருக எம்தலைவர்.

- சபரி நாதன்
http://vaettoli.blogspot.in/2014/11/blog-post_26.html




saparinathan01


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue