Skip to main content

சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்


சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

sivagangai_ramachanthiranar01

  தமிழே நம் மொழியும் இனமுமாகும். ‘திராவிடம்’ என்பது மொழியுமல்ல; இனமுமல்ல. ஆனால், ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்று மாறியுள்ளது. ‘திராவிடம்’ என்பது மொழியைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுகிறது; இனத்தைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப இனங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரம் இயக்கத்தைக் குறிப்பிடுகையில், ஆரிய மூட நம்பிக்கைகளை அகற்றும், தமிழின் அருமை பெருமைகளை உணரச் செய்யும், தன் மதிப்பில் வாழ அறிவுறுத்தும், பகுத்தறிவை நாடச் சொல்லும் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. எனவே, ‘திராவிடம்’ என்று குறிக்கும் பொழுது தமிழரல்லாத பிற தமிழ்க்குடும்ப இனத்தவரை மட்டும் குறிப்பதாகக் கருதி அதனை இழித்தும் பழித்தும் பேசுவது தவறாகும். ‘திராவிடம்’ என்பதைத் தமிழில் இருந்து வேறுபடுத்துவதால் ‘திராவிடம்’ என்னும் பெயரில் தமிழின் சிறப்புகள் குறிக்கப்படும் இடங்கள் எல்லாம் நமக்குரியன அல்ல என்றாகிறது. ஆதலின், நாம் தமிழரே என்னும் நிலையில் நின்று மன்பதை மறுமலர்ச்சிப் பணியின் குறியீடாக உள்ள திராவிடத்தை நாம் பாராட்டுவதும் திசைமாறிப் போகிறவர்களை மீளவும் ஈர்ப்பதும் நம் வேலையாகும். அந்த வகையில் திராவிட இயக்கத்தைப் பரப்பியும் பேணியும் வந்த ஆன்றோர் சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீரிய பணிகளைப் பார்ப்பது திராவிடத்தை உணர்த்துவதற்கான உரைகல்லாகும்.
  சிவகங்கை இராமச்சந்திரனார் 50 ஆண்டுகள்(16.09.1884-26.02.1933) கூட வாழவில்லை; ஆனால், ஐம்பதினாயிரம் ஆண்டுக்கால வரலாற்றைப் பதியும் வகையில் தொண்டாற்றி விட்டார். எனினும் மிகச் சுருக்கமாகச் சிலவற்றை மட்டுமே நாம் இங்கே நினைவு கூர்கிறோம்.
திராவிட இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர்
  இனமானப் போராளி, தன்மதிப்புக்கொள்கைப் பரப்பாளி, பகுத்தறிவுச் செயலாளி சிவகங்கை இராமச்சந்திரனார் மன்பதை மறுமலர்ச்சிக்கென பாடுபட்டவர்; தம் உழைப்பையும் செல்வத்தையும் இதற்கெனவே செலவழித்தவர். இவரின் அரும்பெரும் பணிகளை அறிந்த தந்தை பெரியார் இவரைப் பார்க்க விரும்பி, அவரைச் சந்தித்து அவருடன் இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். எனவே, திராவிட இயக்கத்தால் உருவான தலைவர் என்றில்லாமல் திராவிட இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர் எனத்,‘திராவிட இயக்க வைர விழுது’ எனப் பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட சிவகங்கை இராமச்சந்திரனாரைக் குறிப்பது பொருத்தமாகும். ‘திராவிட இயக்கம்’ என்பதைக் குறியீடாகக் கருதுவதால், இவ்வியக்கம் தோன்றுவதற்கு முன்னர் நீதிக்கட்சி முதலானவை மூலம் ஆற்றிய மன்பதை மறுமலர்ச்சியையும் இது குறிக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைவருக்குமான கல்விக்கு வித்திட்டவர்
  இராமச்சந்திரனார்,
“மத பேதம் கொள்ளாதவன் மனிதச் சாதி
மற்றவர்கள் எல்லாம் கீழ்ச்சாதி”
என வலியுறுத்திச் சாதி இல்லா மன்பதைக்குப் பாடுபட்டார். கல்வி வளர்ச்சி சாதி ஒழிப்பிற்குத் துணை நிற்கும் என்பதால் தாழ்த்தப்பட்டவர்களின், பிற்பட்டவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் கருத்து செலுத்தினார். கேடில்விழுச் செல்வமாகிய கல்வி, ஆண்-பெண், ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், நகரம் – சிற்றூர் என்றெல்லாம் பாகுபாடு காட்டப்படாமல் அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் வழங்கப்பெற வேண்டும் என்னும் உறுதியான கொள்கை உடையவராகச் செயல்பட்டார் இராமச்சந்திரனார். தம் பரம்பரைச் செல்வத்தையும் தாமே ஈட்டிய செல்வத்தையும் கல்விப்பணிக்கெனவே செலவிட்டார்.
  கொட்டக்குடி, அகிலாண்டபுரம், காஞ்சிரங்கால் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக உள்ள இடங்களில் எல்லாம் அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இரவுப் பள்ளிகளை நிறுவினார். இவரது பள்ளிகளில் படித்தவர்கள் எல்லாம் முன்னேற்றப் பாதையைக் கண்டனர். இவரது சிவகங்கைப் பள்ளியில் படித்த கக்கன்தான் பின்னாளில் அமைச்சரானார். அதுபோல், அகிலாண்டபுரத்தில் படித்த பார்வதிதான் பின்னாளில் கக்கனின் மனைவியானார். பள்ளிகள், இரவுப்பள்ளிகள், விடுதிகள் என இராமச்சந்திரானர் உருவாக்காமல் இருந்தால் எண்ணற்றோர் வாழ்க்கை இருண்டுதான் போயிருந்திருக்கும். இவரது பணிகளைப் பார்த்தே தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் தாழ்த்தப்பட்டோர்க்கான பள்ளிகளும் விடுதிகளும் உருவாகின.
  சிவகங்கைமன்னரின் சத்திரம் மாணவர் விடுதியிலும் பிற நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளிலும் பிராமண மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். இராமச்சந்திரனார், தமிழர்கள், தமிழ்நாட்டில் கட்டும் விடுதிகளில் தமிழின மாணவர்கள் சேர்க்கப்படாமை கொடுமை என இதனை எதிர்த்துப் போராடினார். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிற நகரங்களில் உள்ள மாணாக்கர் விடுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். திராவிட இயக்கத்தின் சமநிலைக்கான இப்பணி இல்லையேல் பிற வகுப்பினர் கல்வி வாய்ப்பையும் அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் இழந்திருப்பர்.
இராமச்சந்திரனாரது கல்விப்பணி குறித்துத் தென்னிந்திய – இலங்கைக் கலைக்களஞ்சியம் 1937-38 இல் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது (தரவு : கொடைக்கானல் காந்தி எழுதிய ‘சிவகங்கை இராமச்சந்திரனார்’):
  “காலஞ்சென்ற இராமச்சந்திரனார், ஆதித்திராவிடர் குமுகாயத்தின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்தார்; இக்குமுகாயத்தின் இளைஞர்கள் கல்வியில் சிறக்க வேண்டும் என்பதற்காகக் கல்வியகங்கள், ஏழை மாணாக்கர் விடுதிகள், இரவுப்பள்ளிகள், முதலியனவற்றை நடத்தினார்; இதற்கெனத் தம் சொந்த வருவாயில் இருந்து பெருந்தொகையைச் செலவழித்தார்.”
  திராவிட இயக்கத்தலைவர்கள் வாய்ப்பேச்சாக எதையும் கூறாமல் மக்கள் நலன்கருதித் தன்னலம் பார்க்காமல் சொந்தச் செல்வத்தையும் செலவழித்துத் தொண்டாற்றினர் என்பதற்கு இவரது முன்னோடிப் பணிகளே சான்றாகும்.
பதவி நாடாத பண்பாளர்
  பொல்லினி முனுசாமி (நாயுடு) (1885-1935) நீதிக்கட்சியின் நான்காம் முதல்வராக 1930 முதல் 1932 வரை இருந்தார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மக்கள் தலைவரான இராமச்சந்திரனாரைத் தம் அமைச்சரவையில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், பதவி ஆசையின்றி அமைச்சராகும் வாய்ப்பை மறுத்துவிட்டார். சிலர் தந்தை பெரியார் அறிவுரைக்கிணங்கத்தான், அமைச்சர் பதவியை மறுத்ததாகத் தவறாக எண்ணி உள்ளனர். தந்தை பெரியார் தம் கருத்தை யாரிடமும் திணிக்கும் பண்புடையவரல்லர். அவர் பங்குபெற்றிருந்த நீதிக்கட்சியும் பின்னர்ப் பேராயக்கட்சியாகிய காங்கிரசும் ஆட்சியில் இருந்த பொழுது யாரிடமும் அவ்வாறு சொன்னதில்லையே! தான் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது பிறரை ஏன் அமைச்சராக வேண்டா எனச் சொல்லப் போகிறார். எனினும் ஆட்சியை விரும்பாதத் தொண்டர்களை உருவாக்கித்தான் திராவிடர் கழகத்தை வளர்த்து எடுத்தார். 1944 இல் நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய தந்தை பெரியார், கட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். அதற்கு முன்பே ஆட்சியில் பொறுப்பேற்க வந்த வாய்ப்புகளை உதறித்தள்ளியவர்தான் அவர். 1940-42களில் இருமுறை ஆட்சியை அமைக்குமாறு ஏற்குமாறு அழைப்பு வந்தும் இராசாசி அவர்கள் நேரில் வந்து வேண்டியும் அதனை அடியோடு மறுத்தவர்.
  தந்தை பெரியார்போல் பதவி ஆசை இல்லாதவராக இராமச்சந்திரனாரும் விளங்கினார்; முதலில் சாதி, சமயச் சழக்குகளில் இருந்து மக்கள் விடுதலை அடைய வேண்டும் என விரும்பினார்; பதவியில் இருந்தால் மக்களுக்கு நன்மைகள் செய்யலாமே என்றவர்களிடம், “பதவியும் வயிறு வளர்ப்புமே மனித வாழ்வின் இலட்சியமல்ல” என்றார். இதற்கு முன்பு 1929இல் மாவட்ட நீதிபதி பதவி இவரைத் தேடி வந்த பொழுதும் மறுத்தவர். அப்பொழுதே, “நான் பதவிகள் மூலமாக என் மக்களுக்குத் தொண்டு செய்யும் காலம் என்பது, அவர்களிடம் சமத்துவம், சமதருமம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இவை எல்லாம் சரியாக அமைந்த பின்னர்தான் வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் பயன். எனக்கும் பெருமை. அது வரையில் போராட்டம்தான் எனக்கு வாழ்க்கை” என்றார்.
  இப்பொழுதெல்லாம் நடிக்கத் தொடங்கியதுமே நாளைய முதல்வர் எனக் கனவு காண்பதுவும் எக் கட்சியில் இருந்தாலும் பதவிக்காக அலைவதையும் நம்மால் காண முடிகிறது. ஆனால், ஆட்சிப்பதவிகளை மறுக்கும் தலைவர்களையும் பதவி ஆசை இல்லாத் தொண்டர்களையும் கொண்டு திராவிட இயக்ககங்கள் செயல்படுகின்றன என்றால் உண்மையிலேயே பாராட்ட வேண்டும் அல்லவா? மாறாகப்பதவி வெறி பிடித்த, ஊழலில் ஊறிப் போகின்ற இக்காலத் தலைவர்களின் செயல்பாடுகளை எல்லாம் அவர்கள் மீதும் “திராவிடம்“ என்னும் குறியீடு மீதும் திணிப்பது தவறல்லவா?
மதுக்குடிக்கு எதிராகப் பாடுபட்ட மாண்புடையாளர்
  மக்களிடையே உள்ள குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் இராமச்சந்திரனார்.
கையறி யாமை  உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.
என்னும் தெய்வப்புலவரின் திருக்குறளை வலியுறுத்தி மக்களை மது அரக்கனின் பிடியிலிருந்து மீட்டார். திராவிட இயக்க வரலாற்றில் இராமநாதபுரத்தில் முதல் மதுவிலக்கு மாநாட்டினைத் தலைமை தாங்கி நடத்தியவரும் அவரே! இராமநாதபுர மாவட்ட மதுவிலக்குக் குழுத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பிறருக்கு முன்னோடியாகத்திகழ்ந்தார்.
தமிழ் வளர்த்த தகைமையாளர்
  இவரது கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த தாய்மாமன் – மாமனார் – தமிழ்ப்பேராசிரியர் முத்துராமலிங்கனார் அவர்களால் இவருக்கும் தமிழ் ஈடுபாடு மிகுதியாகவே இருந்தது. தமிழ் இலக்கியங்களைப் படித்து அவற்றின் சிறப்பை மக்களிடையே பரப்பினார். தமிழர் வாழ்வின் எல்லாநிலையிலும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும் என்பதைக் கூட்டங்கள் வாயிலாக வலியுறுத்தினார். இராசாசி அவர்களால் இந்தி திணிக்கப்பட்ட பொழுது, தமிழ் மேம்பாட்டிற்கும் தமிழர் வளர்ச்சிக்கும் இந்தி இடையூறே விளைவிக்கும் என்பதை உணர்த்தித் தமிழ் வாழ்விற்காகக் குரல் கொடுத்துப் பரப்புரை மேற்கொண்டார் இராமச்சந்திரனார்.
சாதி ஒழிப்பிற்கு உழைத்த சான்றோர்
  ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணாக்கர்களுக்காக இவர் உருவாக்கிய அரசர்விடுதியில் அவர்களுக்கு முடி திருத்த மறுத்தனர் முடிதிருத்துநர்கள். உடன், மன்னருக்கும் தமக்கும் முடி திருத்தும் தொழிலாளியைக் கொண்டே ஆதிதிராவிட மாணாக்கர்களுக்கும் பிற ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கும் முடிதிருத்தச் செய்தார். இதன் மூலம் சாதி வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதை உணர்ந்தே தொழிலாளர்களும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தினார் இராமச்சந்திரனார்.
  இன்றைக்குத் தமிழ்நாடு நீங்கலாக இந்தியா முழுமைக்கும் பெயர்களுக்குப் பின்னால் சாதிப்பட்டங்கள் வால்களாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தலைவர்கள் சாதிப் பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றார்கள்; அவ்வாறு அழைத்தால்தான் அறியப்படுகின்றார்கள். தமிழ்நாடு விதிவிலக்காக அமைந்ததற்குக் காரணம் திராவிட இயக்கப்பணிகளின் வெற்றியே எனலாம். இன்றைக்குப் பிற மாநிலங்களில் இருந்துவரும் கலைஞர்கள் சாதிப்பட்டங்களுடன் வருகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரே, தாங்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர் எனக் காட்டுவதற்காக சாதிப்பட்டங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். எனினும் மிகப்பெரும்பான்மை மக்கள் சாதிப்பட்டங்களைத் துறந்துதான் உள்ளனர். மிகப்பெரிய வெற்றி அல்லவா இது? இதற்குக் காரணமும் பகுத்தறிவுச் சுடர் இராமச்சந்திரனார்தான். செங்கற்பட்டில் 17.02.1989 இல், முதல் தன்மதிப்பு(சுயமரியாதை) மாநாடு சௌந்தரபாண்டியனார் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் தன்மதிப்பு அரிமா இராமச்சந்திரனார், பெயர்களுக்குப்பின்னார் சாதிப்பெயர்களைச் சூட்டிக்கொள்ளக்கூடாது என்றும் அவ்வாறு சாதிப்பெயர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளவர்கள் அப்பெயர்களை நீக்க வேண்டும் என முன்மொழிந்தார். தந்தை பெரியார் அதனை வழிமொழிந்தார். இராமச்சந்திரனாரும் திராவிட இயக்கத்தினரும் சாதிப் பெயர்களைத் தூக்கி எறிந்தனர். அதன் விளைவுதான் சாதிப்பெயர்கள் இல்லாத் தமிழ்ப் பெயர்களை நம்மால் இன்று காண முடிகின்றது. (திரைப்படம் ஒன்றில் தந்தை பெரியார் இத் தீர்மானத்தை முன் மொழிந்தது போலும் மேடையில் மூன்றாமவராக இராமச்சந்திரனார் வழி மொழிந்தது போலும் தவறாகக் காட்டி இருப்பார்கள்.45 அகவையில் இருந்தவரை முதிய தோற்றத்தில் காட்டியிருப்பார்கள்.)
  சாதிப் பெயர்களை மட்டும் அல்ல, சாதி, சமய அடையாளங்களை அணியக்கூடாது என்றும் தீ்ர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். மக்களிடையே வேறுபாட்டையும் பாகுபாட்டையும் உண்டாக்கும் குறிகளை அகற்ற அவர் கொணர்ந்த தீர்மானத்தால்தான், வழிபடு இடங்கள் அல்லது வழிபடுநேரங்கள் தவிரப் பொதுவாகப் பொது இடங்களில் குறியீடுகளை இட்டுக்கொள்வோர் குறைந்து போயினர்.
  அதே ஆண்டு திருநெல்வேலி மாநகரில் நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிற்கு இராமச்சந்தினார்தாம் தலைமை தாங்கினார். 1930 இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது தன்மதிப்பு மாநாட்டிலும் இராமச்சந்திரனார் சாதி ஒழிப்பிற்காகப் பேருரை ஆற்றி மக்களை சாதியில்லாப் பாதையில் நடைபோடச் செய்தார். இத்தகைய அரும்பணிகள் ஆற்றிய இயக்கத்தை இன்றைய நோக்கி்ல் பார்த்துப் பழிப்பது தவறல்லவா?
  இட ஒதுக்கீட்டால் நாம் இன்றைக்குப் பயனடைந்ததற்குக் கால்கோளிட்டவர்கள் சீர்திருத்தச் செம்மல் இராமச்சந்தினார் முதலானவர்களே ஆவர். இவர்கள் அன்று ஆற்றிய அரும்பணிகளால் நாம் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்! எனினும் நாம் அடைய வேண்டிய பிற இலக்குகளையும்   நாம் அடைய வில்லை. இன்றைய அரசியல்வாதிகள் செய்த தவறுகளுக்கு நாம் முன்னோரைக் குறைகூறிப் பயனில்லை. இன்றைய இன மான வளர்ச்சிக்குக் காரணமானவர்களைப் போற்ற வேண்டும். அவர்கள் வழியில் தமிழ்நல அரசை நிறுவ அரசியலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முந்தையோர் நற்பெயர்களால் ஆட்சி நலனைத் துய்ப்பவர்கள் அவர்கள் கொள்கைவழியில் தடம் புரளாமல் நடைபோடவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். அதே நேரம் தடம் புரண்டவர்களை அளவுகோலாகக் கொண்டு மக்கள் நேயத்தையும் வாழ்வுரிமையையும் பரப்பிய ஆன்றோர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் சீர்திருத்த இயக்கப் பணிகளை வேறு வண்ணம்பூசி மறைக்கக்கூடாது என்பதை நாம் மறக்கக்கூடாது.
  சிவகங்கை அரசின் வழக்குரைஞராக வாழ்நாள் இறுதி வரை செயல்பட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் அருந்தொண்டாற்றினார். இராமநாதபுர மாவட்ட நகராண்மைக்கழகத்திலும் கல்விக்கழகத்திலும் இராமநாதபுரம் மாவட்டக் கல்விக் குழுவிலும் எனப் பல்வேறு பங்கேற்றுப் பல்வேறு நிலைகளிலும் மதிப்புநிலை நீதிபதி முதலான பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்டுச் சமஉடைமை மன்பதை அமைய பாடுபட்டார். இவ்வாறு அல்லும் பகலும் ஒல்லும் வகையெல்லாம் அருந்தமிழ் நாட்டினர் உயர்விற்கெனவே பாடுபட்டவர் இராமச்சந்திரனார்.
  இந்தியாவிலுள்ள சீர்திருத்தப் பணிகளில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் சீர்திருத்தப்பணிகளில் முன்னோடி அறவாணராகத் திகழ்ந்தவர் சீர்திருத்தச் செம்மல் இராமச்சந்திரனார். இவரைப்போன்ற ஆன்றோர்களின் உழைப்பு இல்லையேல் இன்றைக்கு நாம்அடைந்திருக்கும் வளர்ச்சியும் முன்னேற்றமும் பல நூற்றாண்டுகள் தள்ளிப் போயிருந்திருக்கும்.
  எனவே, நாம்திராவிட இயக்கப் பெருந்தலைவர் தன்மானச்சுடர் சிவகங்கை இராமச்சந்திரனாரை நினைவுகூர்ந்து அவர் வழியில் தன்மானத்துடன் வாழ்வோமாக!
(16.09.2014 பகுத்தறிவுச்சுடர் இராமச்சந்திரனாரின் 131 ஆவது பிறந்தநாள்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png




Comments

  1. தங்களின் தொடர் பாராட்டுகளுக்கும் கருத்திடுகைகளுக்கும் நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue