Skip to main content

மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்! – சொ.வினைதீர்த்தான்

மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்! – சொ.வினைதீர்த்தான்

bow-and-arrow-01
  ஒரு பதிவுக்காகப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலுள்ள பாடல்களைப் படித்தேன். கீழ் வரும் பாடல் கவர்ந்தது; நம் முன்னோர் அறம் வியக்கவைத்தது.
  திண்ணன் என்று பெயரிடப்பட்ட வேடனாகிய கண்ணப்பர் தக்க பருவம் வந்ததும் வேடர்களுடன் முதல்முதலாக வேட்டைக்குச் செல்கிறார். மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். கொடிய மிருகங்களை எதிராக ஓடிச் சென்று எதிர்த்துக் கொலைசெய்கின்ற வேடர்கள் (கொடியனவெதிர் முடிகியுறு கொலைபுரி சிலை மறவோர்) வேட்டை நெறி முறைகளைக் கடைப்பிடிதனராம். 1.உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த மெல்லிய காதுகளையும் உடைய யானைக் கன்றுகள் மேல் வேட்டையைத் தொடர மாட்டார்களாம். 2.ஓசைபட ஓடிக் குதிதோடும் சிறு விலங்குக் குட்டிகளைக் கொல்லமாட்டார்களாம். 3.கருவுற்றதால் வயிறு பெருத்து ஓடமுடியாமல் தள்ளாடிவரும் பெண் விலங்குகளுக்குத் துன்பம் செய்யமாட்டார்களாம்.
periyapuranam_peyar02
துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்;
வெடிபடவிரி சிறுகுருளைகண் மிசைபடுகொலை விரவார்;
அடிதளர்வுறு கருவுடையன வணைவுறுபிணை யலையார்;
கொடியனவெதிர் முடுகியுமுறு கொலைபுரிசிலை  மறவோர்.
(பெரிய புராணம் :10 கண்ணப்பநாயனார் புராணம் : பாடல்எண் :86)
 கல்வியறிவு இல்லாத கொடிய வேட்டையையே தொழிலாகக்கொண்ட வேடர்களிடம் இருந்த தொழில் அறம் வியக்கவைக்கிறது. கன்றுகள், குட்டிகள், கருவுற்றத் தளர்ந்த பெண்ணின விலங்குகள் வேட்டையாடப்படவில்லை.
மறக்கருணை போற்றப்படுகிறது.
  தொழில் அறம் காக்கப்படுகிறபோது அத்தொழிலின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் பேணப்படுவதையும் காண்கிறோம். கன்றுகளும், குட்டிகளும், சூல்கொண்ட விலங்குகளும் கொல்லப்படாமல் விலக்கப்படுகிறபொழுது காட்டின் உயிர் வளம் காக்கப்படுகிறது. வேட்டை வழி எதிர்கால உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது காத்துகொள்ளப்படுகிறது.
  தற்காலத்தில் வட்டித் தொழிலில் கந்து வட்டிக்காரர்களால் தொழிலறம் மீறப்படுகிறபோது அத்தொழில் நலிந்து தேவைபடுகிறவர்களுக்குத் தக்க நேரத்தில் பணம் கிடைக்காது உதவாமல் போகிறது. மீனவர்கள் பயன்படுத்தும் புதிய வகை வலைகளால் சிறுசிறு மீன் குஞ்சுகளும், ஏனையச் சிறிய கடல் உயிரினமும் மொத்தமாக அரித்தெடுக்கப்பட்டுக் கடல் வளம் அடியோடு அழிக்கப்படுகிறது என்பதை ஒரு பதிவில் படித்தேன்.
  எனவே எச்செய்கையிலும் அறத்தைக் கடைப்பிடிப்பது அனைத்து வழிகளிலும் இன்றியமையாதது என்பது புலப்படும்..
  வேடர்களிடமே விலங்குகள்பால் அறம் பேணப்பட்டபோது நாகரிகத்தில் மிக்கிருந்த அரசர்களிடம் மனிதர்கள்பால் எத்தகைய போர் அறம் இருந்திருக்கும் என்பதை உய்த்து உணரலாம். இன்று காசா பகுதியில் பிள்ளைகள் குறிவைத்துக் கொல்லப்படுகிறபோது வருந்தும் நாம், நேற்று யாழ்ப்பாணத்தில் குழந்தைகளும் பெண்களும் சீரழித்துக் கொல்லப்பட்டதையும் கண்டு வருந்திய நாம், அன்றைய வேட்டை அறத்தையும் போர் அறத்தையும் போற்றாதிருக்க இயலாது!
so.vinaitheerththaan02


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue