Skip to main content

மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்


மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்

௩௰ “உடையும் என் உள்ளம்”

- தலைவன்

-சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 thalaivan-thalaivi01
எல்லா வகையிலும் மேம்பட்டு விளங்கிய தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்தனர். ஒருவர்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்பதற்கு உறுதிசெய்து கொண்டனர். பிரிந்து அவர் அவர் வீட்டிற்குச் சென்றனர். தலைவன் தலைவி நினைவோகவே இருந்தான்; தலைவி தலைவன் நினைவாகவே இருந்தாள். தலைவன் காதலியை அடைந்து காதல் உரையாடிக் களிப்பெய்தக் கருதினான். ஒரு பெண் – மணமாகாத பெண் அவ்வளவு எளிமையாகக் கிட்டக் கூடியவளா? அவளையடையவதற்கு வழிகளை நாடினான். முதலில் அவள் ஆருயிர்த் தோழியின் உதவியை பெறுதல் வேண்டுமென்று முடிவு செய்தான்; பல தோழிப்பெண்களுள் அவளையும் அறிந்துகொண்டாள். நெருங்கினான் அவளை அவளும் அவனைக் கண்டாள்.
தோழி: யார் ஐயா! தாங்கள்.
தலைவன்: நான்………..
தோழி: ‘நான்’ என்றால்
தலைவன்: நான் தங்கள் தோழியின்….
தோழி: என்ன?
தலைவன்: இல்லை; தங்கள் தோழியைக் காதலிப்பவன்.
தோழி: என்ன ஐயா! அவள் இன்னும் அதற்குரிய பருவத்தை அடையவில்லையே!
தலைவன்: அவ்விதம் கூறுதல்கூடாது.
தோழி: அவள் பெற்றோர் தங்கட்குக் கொடுக்க விரும்புவார்களா?
தலைவன்: அவள்விரும்பினால்……….
தோழி: அவள் விருப்பம் கொண்டிருப்பதாகக் காணும் நீர் நேரே அவளிடம்சென்று உம் கருத்தைக் தெரிவிக்கலாமே. நான் ஏன் இடையில்.
தலைவன்: உன்னுடைய உதவியின்றேல் என்ன முடியும்?
தோழி: நான் செய்யக்கூடியது ஒன்றும் இல்லையே.
தலைவன்: உன்னால்தான் எல்லாம் ஆதல் வேண்டும்.
தோழி: அவளை நீர் காதலித்தால், அவளுடைய பெற்றோரிடம் உம்முடைய காதலைத் தெரிவித்து, அவளைத் திருமணம் செய்து தருமாறு கேட்கலாமே.
தலைவன்: இவ்விதமெல்லாம் உரைப்பது நீதியாகாது. இதனால் பயனும் இல்லை. இவ்விதம் கூறுவது, பாம்பால் கடிபட்டவன் போல், துன்பப்படச் செய்கின்றது.
தோழி: அது என்ன ஐய துன்பம்?
தலைவன்: ஒரு காதலன் உள்ளம் எவ்வாறு இருக்குமென்பதை அறியாதது போல் கூறுகின்றாயே.
தோழி: அறியேனே.
தலைவன்: ஓ ஓ! நீ அவ்வளவு சிறிய இளம் பெண்ணா? நன்று இளம் பெண்ணே நீ பல்லாண்டு வாழ்க.
தோழி: என்ன ஐயா! என்னிடம் பல்லாண்டு பாடத் தொடங்கிவிட்டீர்.
தலைவன்: இவ்விதம் உரைப்பதெல்லாம் தகாது; நகைக்காதே. என் உள்ளம் உடையும்.
தோழி: உள்ளம் உடையுமா? அது என்ன ஐயா?
தலைவன்: இதோ பார்! அவள் என்னை அன்று பார்த்தாள் அந்தப் பார்வை……..
தோழி: கண் பெற்றவர் பார்க்காது என்ன செய்வர்? இது என்ன நீர் சொல்வது விந்தையாக இருக்கின்றது.
தலைவன்: பார்வை என்றால் எல்லாம் ஒன்றாகிவிடுமா? காதலி காதலனைப் பார்க்கும் பார்வையின் தன்மையை அறிவாயா?
தோழி: எப்படி?
தலைவன்: அன்று அவள் என்னை உற்றுப் பார்த்தாள். அப்பார்வை நஞ்சு பூசிய குருதிதோய்ந்த அம்புபோல, என் உள்ளத்தைத் தைத்துவிட்டது. என் புண்பட்ட மனம் நலம் பெறுவதற்கு…….
தோழி: நலம் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?
தலைவன்: அவள் அருட்பார்வை! இணங்கும் நோக்கம் வேண்டும்.
தோழி: ஐயா! இவ்வாறு களவொழுக்கத்திலேயே காலம் கழித்துக் களிப்பெய்தக் கருதாதீர். விரைவில் மணந்து கொள்ள ஏற்பாடு செய்யும்.
தலைவன்: அதற்கு என்ன தடை? இன்று வருத்தும் என்நெஞ்சம் வாழும் வழிதானே கேட்கின்றேன்.
snake01
natrinai-heading
௩௰. பாடல்
நற்றிணை 75 குறிஞ்சி
நயன் இன்மையில் பயன்இது என்னாது
பூம் பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன்பைப்
பாம்பு உயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது
தகாஅது; வாழியோ குறுமகள்! நகாஅது
உரைமதி; உடையும் என் உள்ளம்; சாரல்
கொடுவில் கானவன் கோட்டுமோ தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழிபோலச்
சே அரி பரந்த ‘மாஇதழ்’ மழைக்கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யும் ஆறே
உரைநடைப்படுத்தல்:
க. நயன் இன்மையில்……..குறுமகள் (அடிகள் க-௪)
உ. சாரல் கொடுவில்…….உய்யும்ஆறு (அடிகள் ரு-௰)
௩. நகா அது உரைமதி உரையும் என் உள்ளம் (அடி ௪-ரு)
சொற் பொருள்
(க. அடிகள் க-௪)
நயன் இன்மையின் – இவ்விதம் நகையாடிக் கூறுவதில் நன்மை இல்லாததனால், பயன் இது என்னாது – இவ்விதம் நகையாடுவதே பயன் என்று நினையாமல், பூம் – அழகிய, பொறி-புள்ளிகளால், பொலிந்த – அழகுபெற்றுவிளங்கிய, அழல்உமிழ் – நெருப்புப் போன்று வருத்துகின்ற நஞ்சை உமிழ்கின்ற, அகன்-விரியும் தன்மையினையுடைய, பை – படத்தினையுடைய, பாம்பு – பாம்பானது, உயிர் – உயிர் உள்ள உடலை, அணங்கியாங்கும் – வருத்தியது போலும், ஈங்கு – இவ்விடத்தில், இது – இவ்விதம் நகைத்துக் கூறுவது, தகாஅது – பொருந்தாது, வாழியோ – வாழ்வாயாக, குறுமகள் – சிறுபெண்ணே!
உ. அடிகள் ரு – ௰
சாரல் – மலைச்சாரலில், கொடுவில் – கொல்லுந் தொழிலைச் செய்வதினால், கொடிய-கொடிய, வில் – வில்லைத் தாங்கியுள்ள, கானவன் – காட்டில் வாழும் வேடன், கோட்டுமா – கொம்புள்ள விலங்குளாகிய மான்களை, தொலைச்சி – கொன்று, பச்சு ஊன் – பசிய தசையில், பெய்த – செலுத்திய, பகழி போல – இரத்தம் தோய்ந்து சிவந்த அம்புபோல, சேஅரி – சிவந்த கோடுகள், பரந்த – பரவியுள்ள, மாஇதழ் – (மைபூசப் பெற்றதால்) கரிய இமைகளையுடைய, மழைக்கண் – குளிர்ந்த கண்களின், உறா நோக்கம் – என் எண்ணத்தை நிறைவேற்றாத பொருந்தாப் பார்வை, உற்றபெற்ற, என் பைதல் நெஞ்சம் – என்னுடைய வருந்திய நெஞ்சம் – உய்யுமாறு – பிழைக்குமாறு,
௩ (அடிகள் ௪ – ரு)
நகாஅது – நகையாடாது (பரிகசிக்காது) உரைமதி – சொல்வாயாக, இல்லையேல், உடையும் என் உள்ளம் – என் மனம் கலங்கி அழியும்.
ஆராய்ச்சிக்குறிப்பு:- இப்பாட்டுக் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகும், தலைவன் தோழிகேட்பச் சொல்லியதாக அமைந்துள்ளது.
kuriji01
குறிஞ்சி:-இடவகையால் மலையும் மலைசார்ந்த இடத்தைக் குறிக்கும். ஒழுக்க வகையால், தலைவனும் தலைவியும் கூடி ஒழுகும் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆம் ஒழுக்கத்தைக் குறிக்கும். குறிஞ்சி யொழுக்கத்திற்கு (களவில் காதலித்து ஒழுகுதல்) உரிய காலமாகக் ‘கூதிர்’ என்ற பெரும் பொழுதும், ‘யாமம்’ என்ற சிறுபொழுதும் கொள்ளப்பட்டன. கூதிர்க்காலம் என்பது குளிர் மிகுந்த ஐப்பசியும் கார்த்திகையும் ஆம்.
ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளை மணந்து கொள்வதென முடிவுசெய்து கொண்டால் அவளை அடைவதற்குப் பல்வகையானும் முயல்வான். அவ்விதம் முயலுங்காலத்தில், தான் காதலித்த தலைவியை அடிக்கடிக் காணவும் உரையாடவும் முடியாது அல்லல் படுவதும் உண்டு. அப்பொழுது அத்தலைவியின் ஆருயிர்த் தோழியை அறிந்து அவள் வழியாகத்தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வான். களவொழுக்கத்தில் தோழி ஆற்றவேண்டிய தொண்டுகள் மிகப்பல. அவளே காதலர் காதல் வளர்ந்து உருவாகி மணம் நிகழ்வதற்குப் பெரிதும் துணைபுரிவாள். ஆதலின் தலைவன் தோழியை தெருங்கித் தன் கருத்தைக் குறிப்பாக உணர்த்துங்கால், தோழி அறிந்தும் அறியாதாள் போல் தலைவனைப் பல்வகையானும் ஆராய்வாள்.
தலைவி இளையள்’ என்பாள். “அவள் பெற்றோர் உனக்கு மனஞ்செய்து கொடுக்கமாட்டார்கள்” என்பாள் “நீயே சென்று உன் கருத்தைத் தெரிவித்துக் கொள்; என்னுடன் கூறாதே” என்று கருத்துக் கூறுவாள். இவ்வமயங்களில் தலைவன் உள்ளம் எப்படி இருக்கும். என்பதை உய்த்து உணர்ந்து கொள்ளுங்கள். இவ்விதம் கூறித்தலைவனை அப்பால் நிறுத்தும் நிகழ்ச்சிகளைச் ‘சேட்படை’ என்பர் அகப்பொருள் நூலார். (சேண் – தூரம் படை-வைத்து நிறுத்தல் – கிட்ட நெருங்கவிடாது தடுத்தல்) வெளிப்படையாக இவ்விதம் கூறுவதெல்லாம் தலைவன் உளப்பாங்கை அறியவே. மனத்தினுள் அவன் பால் இரக்கங்கொண்டு அவனுக்கு வேண்டுவன செய்யும் விருப்பம் மிகுதியும் உடையவளவாய் இருப்பாள்.
இப்பாடலில் தோழி, தலைவனைச் சேட்படுத்தவே, தலைவன் வருந்திக் கூறுகின்ற முறையை அறிந்தீர்கள். தன் நிலையை ஒளியாமல் கூறுகின்றான். பாம்பு கடித்த மனிதனுக்குத் தன்னை ஒப்பிடுகின்றான். தன் செயலை முடித்துத் தர வேண்டுமென்று அவளுக்குப் பல்லாண்டு கூறுகின்றான். “இனி நீதியல்ல; தகாது நகைக்காதே. என் உள்ளம் உடையும்” என்றெல்லாம் கெஞ்சுகின்றான். மாமூலனார் என்ன அருமையாகத் தலைவன் உள்ளத்தை விளக்கிக் காட்டுகின்றார்.
தலைவியின் கண்ணை ‘அம்பு’ என்கிறார். அம்பு உடலைத் தான் புண்படுத்தி, உடலையும் வாட்டி உயிரையும் போக்கும். காதலன் மனக்கருத்தை நிறைவேற்றாத குறிப்பைத் தரும். காதலி பார்வை, காதலன் உள்ளத்தில் கடுந்துன்பம் விளைக்கும், கருத்தை நிறைவேற்றும் குறிப்பைத்தரின் களிப்பெனும் கடலுள் ஆழ்த்தும்.
புலவர் பெருமான் வள்ளுவர்,
இருநோக்கு இவள் உன் கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து” (குறள் 1091)
என்று குறிப்பிடுகின்றார். நோய் நோக்கையே – துன்பம் தரும்.
நோக்கையே. “உறாஅ நோக்கம்” எனத் தலைவன் குறிப்பிடுகின்றான்.
சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற மாமூலனார் பாடல்கள் இவ்வளவே.
இன்னும், திருக்குறளின் சிறப்பையுரைக்கும் திருவள்ளுவ மாலையில் மாமூலனார் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. திருவள்ளுவ மாலையில் காணப்படும் ஐம்பத்து நான்கு செய்யுட்களும் திருவள்ளுவர் காலத்தில் பாடப்பட்டன. அல்ல என்று கூறுவாரும் உளர். அது உண்மையாயின். திருவள்ளுவ மாலையில் காணப்படும் பாடல் பின்னுள்ளோரால் புனைந்து கூறப்பட்டனவாகும்.
வள்ளுவர் பெருமான் மாமூலனார் காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். திருவள்ளுவ மாலையில் காணப்படும் பாடல் வள்ளுவர் காலத்திற்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த வேறொரு மாமூலனரால் பாடப்பட்டிருக்க வேண்டும். அப்பாடலே அதற்குச் சான்று தருகின்றது. அப்பாடல் வருமாறு.
அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்.
இப்பாடலில் புலவர் தலைவராம் வள்ளுவரை இன்று இழிவாகக் கருதும் வள்ளுவச் சாதியைச் சேர்ந்வரென்று எவனோ கூறியதை மறுத்துரைப்பது போல் காணப்படுகின்றது. சங்க காலத்தில் வள்ளுவன், இழிந்த பிறப்பினனாகக்கருதப்படவில்லை. அரசனுக்கு அறிவுரை கூறும் அமைச்சர் குழுவில் ஒருவனாக இருந்திருக்கின்றான். ஆகவே அன்று ‘வள்ளுவன்’ என்று கூறியவனைக் கடிந்துரைக்க வேண்டாம். இப்பாடலில் ‘வள்ளுவன்என்று கூறியவனைப் பேதை – அறிவில்லாதவன் என்று கடிந்துரைக்கக் காண்கின்றோம். ஆதலின் பிறப்பால் உயர்வு தாழ்வு மிதந்து வள்ளுவன் என்பது ஒரு சாதியைக் குறித்த காலத்தில் இப்பாடல் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் ஆகவே திருவள்ளுவமாலை பாடிய மாமூலனார் வேறு, சங்ககாலத்து மாமூலனார் வேறு என்று தெளிதல் வேண்டும். ஒரு பெயருடைய புலவர்கள் பலர் இருப்பது என்பது வியப்பல்லவே.
வாழ்க மாமூலனார்! வளர்க வண்டமிழ்!!
 Ilakkuvanar+04


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue