Skip to main content

அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்

அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்

sanskrit.asokarperoid01
‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம்.
   இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு முல்லேருமே அவர். அவர்கள் தான் சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், இலட்டின் சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து “இவர்கள் வேதங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்…மேலும் இவர்கள் பழைமையான நாகரிகத்தினைச் சார்ந்தவர்கள் தாம்… அவ்வாறு நிலை இருக்க இவர்களின் இந்த மொழியில் நம்முடைய சொற்கள் பல தென்படுகின்றனவே… ஒரு வேளை இம்மொழியில் இருந்தே நம்முடைய மொழிகள் தோன்றி இருக்குமோ” என்று எண்ணி சமசுகிருதமே முதல் மொழியாக இருக்கலாம் என்ற தங்களது கருத்தினை உலகிற்கு முதலில் பரப்புகின்றனர். இது நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். அதில் தொடங்கியது தான் சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
 sanskrit-period03
  ஒரு மொழி என்பது முதலில் பேசப்பட்டே வந்து இருக்கும். பின்னரே காலத்தில் அதற்கு எழுத்துரு கிட்டி இருக்கும் என்பது வரலாறு. பல மொழிகள் இன்றும் எழுத்துரு பெறாது பேசப்பட்டு மட்டுமே வந்துக் கொண்டு இருப்பது அதற்கு நல்ல சான்று. இந்நிலையில் ஒரு மொழியின் வரலாற்றினை எவ்வாறு நாம் அறிவது. அதன் வயதினைக் கணக்கிடுவது எவ்வாறு?
  இப்பொழுது தமிழுக்குச் செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றார்கள். காரணம் தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மொழியாக இருக்கின்றது எனவே அதனைச் சிறப்பித்து அதற்குச் செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கணக்கிட்ட முறையைத் தான். இராண்டாயிரம் ஆண்டுகள் பழமை என்று சொல்கின்றார்கள்… எதன் அடிப்படையில் சொல்கின்றனர்.. கல்வெட்டுகள், நூல்கள், பல குறிப்புகள் போன்றவை கிடைத்துள்ளமையால் சொல்கின்றனர். அவற்றின் அடிப்படையிலேயே செம்மொழி நிலையும் வழங்கி உள்ளனர். ஆனால் தமிழ் அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே பேசப்பட்டுக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள் அவற்றைச் சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி விருதென்ன உலகின் முதல் மொழி விருதே கொடுக்கலாம்.
  எடுத்துக்காட்டுக்கு, தெலுங்கு மொழியினை எடுத்துக் கொள்ளலாம். இம்மொழியில் கல்வெட்டுகள் கி.பி காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் “அதற்காக இம்மொழி அதற்கு முன்னர் உலகில் இல்லை என்று நீங்கள் கருத முடியாது…எங்கள் தெலுங்கு மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்து வந்தது…நாங்கள் இதற்கு எழுத்துரு பின்னர் தான் தந்தோம்…ஆனால் ஆதிக் காலத்தில் இருந்தே எங்கள் மொழி இருந்தது….எங்கள் மொழியில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றின” என்று ஒரு தெலுங்கு நண்பர் கூறினால் நம்மால் மறுக்க முடியாது. ஏன் எந்த மொழியினையுமே மறுக்க முடியாது ‘பேசிக் கொண்டு மட்டுமே இருந்தோம்… ஆனால் எழுதவில்லை’ என்ற காரணம் பாரபட்சமின்றி அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.
  அவ்வாறு கூறிவிட்டால் சரி மொழியின் காலத்தினை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்… ‘நாங்கள் மொழியை — – இத்தனை வருடங்களாக பேசிக்கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுதுதான் அதனை எழுத்துருவில் கொண்டு வந்தோம்” என்று கூறலாம்.
  அந்த இடைப்பட்ட இடத்தை ஆயிரம் என்றோ இலட்சம் என்றோ ஏன் இன்னும் எத்தனை வருடங்களோ என்றும் போட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதை நிரூபிக்கத் தான் சான்றுகள் தேவை இல்லையே.
 sanskrit-period02
  அந்நிலையில் ஒரு மொழியினைப்பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய மக்கள் எங்கே இருந்தனர்…அவர்கள் இருந்தமைக்குச் சான்றுகள் இருக்கின்றனவா என்று பலவும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்குச் சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும் கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும் முக்கியமான செய்திகளைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி என்று கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது இருந்து தான் ஒரு மொழியின் காலத்தினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே முறை.
சரி…இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒருவர் இவர். இவரைப் பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்ற கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுகளைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுகளே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள உதவும் மேலும் சில கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுகள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கப்பட்டு உள்ளன.
பாலி
அருத்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்
ஆச்சரியவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டு கூட இதுவரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுகளை உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும்தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டு ஒன்று கூட சமசுகிருதத்தில் காணப்பட வில்லை.
“அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி… அதனைப் பொது மக்கள் அறிந்து கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்” என்று பார்த்தோமானால், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக் கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையைப் பழுது பார்த்த செய்தியை சுமந்து கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும் சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுகள் மற்றும் எழுத்துகள் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
அதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது. இந்நிலையில் ஒரு கேள்வி எழுகின்றது…
   அணையைப் பழுது பார்த்த செய்தியைத் தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையைப் பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமசுகிருதத்தில் எழுதி இருக்க வேண்டும்தானே. ஏன் சமசுகிருதத்தில் அசோகரின் கல்வெட்டுகள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்லை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை. எளிதாக சொல்லி விட்டார்கள். ஆனால் நம்புவது அவ்வளவு எளிதான காரியம் அன்று. இந்நிலையில் நாம் இன்னும் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டி இருக்கின்றது.
   ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுகளிலும் சரி காணப்படவில்லை. நான் சமசுகிருத எழுத்துகளைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி… அப்படி அவர்கள் சொன்னார்கள் என்ற தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா…இது வரை அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.
மேலும் அசோகர் காலத்து எழுத்துகளை, பிராகிருத எழுத்துகள் என்பர்.
பிராகிருதம் என்றால் – இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள்.
அனால் சமசுகிருதமோ – நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது. நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன… யாரால் செய்யப்பட்டது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
 sanskrit01
  அதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துகளோ… அம்மொழியைப் பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்… எங்கு பேசினர் என்ற தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை. அவ்வாறு சான்றுகளே இல்லாத மொழி எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாமே. நாம் முன்னர்க் கண்டது போல ஒரு இலட்சம் வருடங்கள் முந்தியும் இருந்து இருக்கலாம். ஆனால் காலத்தில் அது அழிந்து இருக்கலாம். அதற்குப் பின்னர் வந்த மொழிகள் இருந்தமைக்குச் சான்றுகள் அழியாது கிடைக்கின்றன… ஆனால் இம்மொழி இருந்த வரலாற்றை மட்டும் அழித்து விட்டனர்…அல்லது அழிந்து விட்டது. இதற்கு எல்லா மொழிகளுமே பொருந்துமே.
  இல்லை… சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம் பழமையானதான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தும் இப்பொழுது எழலாம். உண்மைதான்.
 வேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் பாடல்களாய் இருந்த பொழுது சமசுகிருதத்தில்தான் இருந்தன என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.
  ஏன் எனில் இந்திரன், வருணன் ஆகிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக் கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள ‘தியெளசு’ என்ற வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள ‘சுஃசு’ கடவுளை நினைவுபடுத்துகின்றார். மேலும் பெர்சியர்களின் வழிபாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின் பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம் சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர் வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.
 sanskrit-asokar-edicts
 சான்றுக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள், வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்துதான் அம்மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா? அப்பொழுது எந்த மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தைக் கணக்கிட்டுத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம் பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?
  எனவே, சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தைக் கணிக்க முடியாது. சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை இருந்ததற்குச் சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை, கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள் கிட்டும் வரை.
http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/32.html
pirar-karuvuulam 

Comments

  1. அசோகர் கல்வெட்டு தமிழ் மொழியில் எங்குள்ளது.

    ReplyDelete
  2. 1. தொல்காப்பியத்தில் வடமொழிபற்றிய குறிப்பிருக்கிறது. "திசைச்சொல் வடசொல்" என்று ஒரு பாவில்வரும்.
    2. வடமொழிக்கு எழுத்துருயில்லையென்பதும் அது பின்னாளில் தேவநாகிரியென்னும் எழுத்துருவைக்கடன்பெற்றதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

    ReplyDelete
  3. பேச்சுமொழியாக மட்டுமேயிருந்து பின்னாளில் எழுத்துவடிவத்தையேற்ற மொழி என்று வடமொழியைக்குறிப்பர். ஆனால் வடமொழியைத் தாய்மொழியாய்கொண்டவர் இருக்கிறாராயென்றால் இல்லையென்பதுதான் பதில்., இருந்தாராயென்றால் அதற்கும் பதிலில்லை. பேச்சுவடிவிலிருந்து பின்னாளில் எழுத்துவடிவமேற்றமொழி என்று கொண்டாலும் முரண்பாடுகள் எழும், காரணம் வடமொழியின் காலத்தை இதிகாசங்களிலும் வேதங்களிலும் வரும் நிகழ்வுகளைவைத்தே கணக்கிடுகின்றனர். எப்படி செவிவழியாகவே 3000 ஆண்டுகள் ஒரு செய்தியைப் பிழையில்லாமல் சொல்லமுடியுமென்று சிந்தித்துப்பார்த்தால் கொஞ்சம் சிரிப்புதான் வருகிறது.

    ReplyDelete
  4. வேந்தன் என்று தான் தொல்காப்பியத்தில் வருகிறது. அது நன்னூலில் இந்திரனென்றானது தமிழ்மொழியில் நடந்த வடமொழிக்கலப்பு. வேந்தன் என்பதற்கு மாற்றுச்சொல்லாக நன்னூல் காலத்தில் இந்திரன் வழக்கிற்குவருகிறது. இது திருமால் கொற்றவைக்கும் பொருந்தும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue