பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்


பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்

ira.ilankumaran02
‘அ…….ன்’
‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது?
  தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில்  வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் Bharathi02கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’
  ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதை நினையாமல் தமிழ்நாட்டில் வழக்கத்தில் வந்த சில வேறு மொழிச் சொற்களை அவ்வாறே வழங்காமல் மொழி பெயர்த்துக் கூறுவார். பிள்ளைகளிடம் பேசும்பொழுது ‘சிலேட்’ என்று சொல்லாமல் கற்பலகை என்றே சொல்லுவார். இப்படிப் பேசினால்தான் தம்மைக் தமிழ்க் கல்வியிற் சிறந்தவராக யாவரும் கருதுவார்கள் என்பது அவரது எண்ணம். அங்ஙனமே அநேகர் எண்ணி27 APRIL U VE HOUSE OPEN நடப்பது உண்டு.’’
  இரண்டு பகுதிகளையும் மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்; சிறிது சிந்தித்தும் பார்க்க வேண்டும். இரு பகுதிகளுக்கும் உள்ள முரண்பாட்டை எடைபோட்டும் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் முன்னவர் மொழி வளர்ச்சியில் ஊறியவர் என்றும் மொழிப் பற்றாளர் என்றும், பின்னவர் மொழி வளர்ச்சி பற்றிக் கவலையேதும் இல்லாமல் வந்த சொற்களையெல்லாம் வாரிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்துடையவர் என்றும் ஒருவேளை எண்ணி முடிவுக்கும் வந்துவிடுவோம். அதற்குரிய சான்றினைக் காட்டி நிலைநிறுத்தவும் துணிவோம். ஆனால் இரு வேறான கருத்துகளையும், கூறிய சான்றோர்களின் பெயர்களைக் குறித்துக் காட்டிவிட்டாலோ அல்லது தெரிந்து கொண்டாலோ நாம் செய்த முடிவுக்கு அஞ்சுவோம்; நாணவும் செய்வோம்!
  பாவேந்தர் பாரதியார் உரை முன்னது; தமிழ்த் தாத்தா சாமிநாதையர் உரை பின்னது! இவ்விருவரும் தமிழ் வளர்ச்சியில் வேறுபட்ட எண்ணம் உடையவர்களா? தமிழ்த் தொண்டில் மாறுபட்டவர்களா? தமிழ் வாழ, வளர எண்ணியதன்றி, அதனை வளர்த்து வளமுடையதாக்கக் கருதியதன்றிப் பிறிதொன்று எண்ணினரோ? இல்லையே! இருப்பினும் இக்கருத்து முரண்பாடு அறிஞர்களிடம் ஏற்பட்டிருந்தமை மொழி நலத்திற்கும் வளர்ச்சிக்கும் ஊறு செய்வதாக இருந்ததுடன் இன்றும் அந்நிலைமை மாறாமலேதான் இருக்கின்றது. இதனைச் சான்று காட்டி விளக்க வேண்டுவது இல்லை. கண்ணும் காதும் இருக்கும். அத்துணைப் பேர்க்கும் வெளிப்படையான உண்மையாகவே இருக்கிறது.
  அருளாளன் ஆபிரகாம் (இ)லிங்கனது பெருமை மிக்க சொற்பொழிவுகளிலே ஒன்று, ‘பிளவுபட்ட கூரை பிழைக்காது’ என்பது நம் மொழியின் நிலைமையை எண்ணிப் பார்க்கும் போது பிளவுபட்ட கூரையே abraham_Lincon01முன்னிற்கிறது! நம்மொழிப் பிளவு என்ன? மொழிக்குக் கண்ணென மதிக்கத்தக்க அறிவந்த சான்றோர்களிடத்தும் மொழி வளர்ச்சி – மொழிக் காப்பு – பற்றிய ஒருப்பட்ட நிலைமை இல்லை! அந்தப் பிளவே மொழிப் பிளவாகித் தமிழ்த் தாயின் முகத்தில் மாறா வடுக்களாகக் காட்சி வழங்குகின்றது!
‘வேற்று மொழிச் சொற்கள் புகுதல் கூடாது; வேற்றுமொழி எழுத்துகள் புகுதல் அறவே கூடாது. அவ்வாறு ஓரொரு கால் புகநேரின் தமிழின் இயல்புக்கு ஏற்ப, ஒலியமைப்புப் பெற்று முழுக்க முழுக்கத் தமிழ்ச் சொல்லாகவே காட்சியளிக்க வேண்டும்’ – இது முழு முதல் இலக்கண நூல் விதி! இவ்விதியை வகுத்துக் காட்டி, மொழி வாழ்வாங்கு வாழ வகை கண்ட ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்’ மொழிக்காப்பாளன் அல்லனோ? அவன் நெறியை அணு அணுவாகத் தெளிய ஆராய்ந்தும் அதன் வழி நிற்காது. அவ்வழியே மொழியைப் பேணாது சிலர் செல்ல, சிலர் சிலர் அதைப் பேணி நிற்க. பேணி நிற்பாரையும் பேணாதாரையும் மாறிமாறிப் பாராட்டியும் பழித்தும் பல்லாயிரம் தமிழர் பொழுது போக்க, ‘மொழி வெறி’ என்றும் மொழிக் கொலை என்றும் ‘பட்டங்கள்’ சூட்டிப் பிரித்துப் பிரித்துக் கொடுக்க உளதான பிளவு நிலை’ மொழிக்காப்பு ஆகுமா? அவர்களும் மொழிக்காப்பாளர் ஆவார்களா?
  உடையில் கறை கூடாது; வீட்டுள் குப்பை கூடாது; உடலில் அழுக்குக் கூடாது; வழியில் பள்ளம், மேடு, நாற்றம் இவை கூடா! அரிசி பருப்பு எண்ணெய் முதலாம் பண்டங்களில் கலப்புக் கூடா! இவ்வளவும் விரும்புவோம்! ஏற்போம்; முரண்பட்டால் பழிப்போம்! மொழிக் கலப்போ முடிந்த அளவும் செய்வோம்! மொழிக் கொலையும் பண்ணுவோம்!
  பாரதியார் மொழிக் குழப்பமும் சிதைவும் கலப்பும் மிக்க காலத்தே வாழ்ந்தார்; ஆங்கில ‘மோகமும்’ வடமொழிக் கலப்பும் உச்சநிலை உற்றிருந்த சூழ்நிலையில் வாழ்ந்தார். தமிழ்ச் செய்தித் தாளும், தமிழ் மேடையும் தமிழ்க் கல்வியும் காணுதற்கரிய கால நிலையில் வாழ்ந்தார்; அந்நிலைமையிலும் அவர் கொண்டிருந்த மொழிப்பற்றையும், வளர்ச்சி நோக்கத்தையும் எடைபோட்டுப் பார்க்கும்போதுதான் அவர் பெருமை புலனாகும்; அவர் உழைப்பும் தெளிவாகும்.
  MEMBER/மெம்பர் என்னும் ஆங்கிலச் சொல்லை ஆங்கிலம் கற்றோரும் அன்றி மற்றோரும் அறிவர். தமிழ் மட்டுமே சிறிது கற்றோரும் – ஏன் கல்லாதவர்களும் கூட ‘மெம்பர்’ என்னும் சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல்லை அறிவர். ஆனால் பாரதியார் இச்சொல்லைத் தமிழாக்க எப்பாடுபட்டார்! அவரே எழுதுகின்றார்!;
  ‘‘மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ சரியான வார்த்தை இல்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரை மணி நேரம் யோசித்துப் பார்த்தேன் ‘உறுப்பாளி’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன். கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்.’’
  பாரதியாரின் கால நிலைமையில் இன்றையத் தமிழ் இல்லை. தமிழ் தனிமொழி, ‘உயர்மொழி, செம்மொழி என்று பிற நாட்டவர்களாலும் உறுதி செய்யப்பெற்றுவிட்டது. இருந்தாலும் ‘பிடிவாதமாகவே’ தம்மால் முடிந்த அளவும் பிற மொழி எழுத்துகளையும் சொற்களையும் வாரி வாரிக் கொட்டி எழுதுவதும் பேசுவதும் ‘நாகரிகம்’ என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணை போபவர்களுக்கும் குறைவு இல்லை. தூய நிலையில் பேசவும், எழுதவும் ஆற்றலும் பயிற்சியும் உடைய அறிஞர்கள் பலரும் வேண்டுமென்றே, கலவையில் குழம்பும் – குழப்பும் – பிடிவாத நிலைமை தமிழ் மொழிக்கென்றே தனிச் சிறப்பாக அமைந்த கேடுபோலும்! இந்நிலைமை மாறுவது எந்நாளோ? மாற்றுவதும் எந்நாளோ?
குறள்நெறி: வைகாசி 19, 1995 / 01.06.64

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue