தொடர்கதை : பூங்கோதை – வித்துவான் மு. இராமகிருட்டிணன்

பூங்கோதை – வித்துவான் மு. இராமகிருட்டிணன் கலை.மு.,ஆசி.இ.,

தொடர்கதை
vaazhaiyadivaazhai01
சிவக்கொழுந்து, மருத்துவமனைத் தாழ்வாரத்தில் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வினாடியும் அவருக்கு ஓர் ஊழியாகத் தோன்றிற்று. மகப்பேற்றறையிலிருந்து குழந்தை  வீறிட்டழும் குரல் கேட்டது. அப்பொழுது சிவக்கொழுந்தினது முகத்தில் வருத்தத்திற்கிடையே ஒரு மகிழ்ச்சிக் குறி தோன்றியது. அவர் மருத்துவப் பணிப்பெண்ணின் வருகையை எதிர்நோக்கிய வண்ணமிருந்தார். சில மணித்துளிகள் கடந்தன. மருத்துவப் பணிப்பெண் வெளிவந்து, சிவக்கொழுந்தைப் பார்த்துத் தான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குத் தயங்கினாள். பிறகு சிவக்கொழுந்தை நோக்கி, அப்பணிப்பெண், ‘‘பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுடைய அம்மாவின் சாயலாக இருக்கிறது’’ என்றாள்.
குழந்தையைப் பெற்ற தாயின் நலத்தைப் பற்றி அவள் ஒன்றும் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றிச் சிவக்கொழுந்து எண்ணிக்கொண்டிருக்கும் அளவில், சிவக்கொழுந்தின் தாயார், மகப்பேற்றறையிலிருந்து வாய்விட்டுக் கதறியழுகின்ற ஓலம் கேட்டது ‘என்ன நடந்தது’ என்பதைச் சிவக்கொழுந்து அறிந்து கொண்டார்.
brother-sister01 

சிவக்கொழுந்திற்கும் சண்பகம் ஒரே தங்கை. அவர் தம் தங்கையை அவளுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அன்பாக நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவளுக்குச் சீரும் சிறப்பும் பொருந்த மணம் செய்வித்தார். சண்பகத்தை மனைவியாக ஏற்றுக் கொண்ட செந்திலப்பர் அவளுக்கேற்ற அன்பும், பண்பும் அழகும் ஒருங்கே அமையப் பெற்றவர். அருந்தமிழ் நூல்களை ஆழ்ந்து கற்றவர். அவர் தமிழ்க் கல்லூரி ஒன்றிலே ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். கணவனும் மனைவியும் கவவுக்கை நெகிழாது வாழ்க்கை நடத்தி வந்தனர். அழகு மிளிரப் பூத்துக் குலுங்கும் மலர்களைக்கண்டு மகிழ்கிறோம். அவை வாடி உதிர்வதற்குச் சின்னாட்கள் ஆகும். அதற்கிடையிலேயே அவை பறித்தெறியப்படுவதும் உண்டு. அதுபோலவே செந்திலப்பரின் இன்ப வாழ்வும் எதிர்பாராத வகையில் முடிந்தது.
சண்பகம் கருவுற்றிருந்த மூன்றாவது திங்களிலேயே அவளது இல்வாழ்க்கையில் இருள் கவிந்தது. கணவனை யிழந்த சண்பகம் தனது தமையன் இல்லத்திலேயே வாழ்வாளாயினாள். அவள் தானிருந்த ஈருயிர் நிலையை எண்ணியே தன் உயிரை மாய்த்துக் கொள்ளாதிருந்தாள். சண்பகத்தின் தாய் பூங்கோதையம்மாள் எல்லாம் சிவனருள்’ எனத்தன் மகளுக்கு ஆறுதல் கூறி வந்தாள். பொறுத்திருந்த சண்பகம் தான் பொறையுயிர்த்த நாளன்றே தன் கடமை தீர்ந்ததெனத் தன் கணவன் திருவடியைச் சென்று சேர்ந்தாள்.
சிவக்கொழுந்து தன் தந்தையார் விடுத்துச் சென்ற வாணிகத்தையும், நில புலன்களையும் கூர்த்த மதியோடும், அயராத ஊக்கத்தோடும் கவனித்து வந்ததால் செல்வச் சிறப்புடையவராகவே வாழ்ந்து வந்தார். குயிற்பொதும்பர் என்னும் அவரது சிற்றூரில் வாழ்ந்து வந்தவர் யாவரும், அவரைப் பெருமையாகவே மதித்து வந்தனர். ஆயினும் அவருடைய உள்ளத்தில் மட்டும் அமைதி நிலவுவது முயற்கொம்பாக இருந்தது. உள்ளது என் இல்லவள் மாணாக்கடை?
சிவக்கொழுந்திற்கு மனைவியாக முளைத்த செங்கமலத்தம்மையார், சென்னை மாநகரின் செல்வச் சிறப்பிலே தோன்றி வளர்ந்தவள். குழவிப் பருவத்திலிருந்தே ஆங்கிலமும் தமிழும் விரவிய மொழியில் பெருமையெனக் கருதிப் பயின்றவள். ஆடை அணிகலன்கள் அணிவதும், ஆரவாரமாகப் புறம்போந்து உலவுவதும், வாழ்க்கையின் சிறந்த கூறாகக் கொண்டு ஒழுகி வருபவள். குயிற்பொதும்பரின் வாவியும், வண்ண வண்ண மலர்களும் காவியம் புனைவார்க்குக் கண்கவர் காட்சியாகத் திகழலாம். அணித்தே செல்லும் சிற்றோடை அயர்ந்த உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கலாம். ஊரின் நாப்பண் எழுந்திருந்த பிறவா யாக்கைப் பெரியோன் கோயின் சிவனடியார்க்குச் செல்வச் சிறப்பாகத் தோன்றலாம். ஆயினும் செங்கமலத்திற்கு இவை யாவும் யாது பயன் தருவன? இவ்வூரில் என்ன இருந்தென்ன? ஒரு திரைப்படக் கூடமாவது உண்டா? இந்தப் பட்டிக்காட்டில் நாகரிகமுடையவர்கள் யார் குடியிருக்க முடியும்?’ என்று செங்கமலத்தம்மையார் அடிக்கடி சலித்துக் கொள்வார்கள்.
சிவக்கொழுந்து யாது செய்வார்? ‘இதுவும் அவன் செயல்’, நாளடைவில் தம் மனைவி திருந்தி விடுவாள் என்று எண்ணியிருந்தார். செங்கமலமும் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகி விட்டாள். என்றாலும், இளமையில் தான் பயின்ற ஆரவார முறையிலேயே அவள் தன் வாழ்க்கையை நடத்தி வந்ததுமின்றி, தன் குழந்தைகளையும், தன் வழியிலேயே பயிற்றி வந்தாள். தம் இல்லத்தில் பணிபுரிந்து வந்த ஏவலர்களை இழித்தும் பழித்தும் பேசுவது செல்வர்களது பிறப்புரிமை என்று கருதினாள். இவளுடைய செயல்கள் யாவும் சிவக்கொழுந்திற்கு உள்ளப் போராட்டத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்தன.
இவ்வாறு அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் நாட்களில்தான், தங்கை சண்பகம் தான் ஈன்றெடுத்த மகனைச் சிவக்கொழுந்தின் பொறுப்பில் விடுத்துச் சென்றுவிட்டாள். ‘என்னுடைய குழந்தைகளை வளர்ப்பதே எனக்குப் பெரும்பாடாக இருக்கின்றது. போதாக் குறைக்கு எங்கோ கிடந்த இந்த அனாதைச் சனியனும் என் உயிரை வாங்க வந்திருக்கிறது’ என்று புழுங்குவாள் செங்கமலம். அவளுடைய சொற்களைக் காதில் வாங்கிக்கொள்ளாதவர் போல் பூங்கோதையம்மையார், தன் பெயரத்தியாகிய அம்மகவினைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வந்தார்.
தாயில்லாப் பிள்ளையை வளர்ப்பது என்பது அத்துணை எளிதா? இரவெல்லாம் கண் விழித்துக் குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி வளர்ப்பதென்பது இளம் பருவத்தினர்க்கும் அரிய தொன்றாகும். அவ்வாறிருக்க, அத்துணைப் பொறுப்பை, பூங்கோதையம்மையார் தாமே செய்ய இயலுமா? சிவக்கொழுந்து தம் இல்லத்தில் பணியாற்றி வந்த காளியம்மையைத் தம் தாயாருக்கு உதவியாக, அக்குழவியைப் பாதுகாத்து வருமாறு பணித்திருந்தார். செங்மலத்தின் சீற்றத்திற்கு அஞ்சிய காளி, பூங்கோதையம்மையார்க்கு உதவுவதென்பது ஏட்டுச் சுரையாயிற்று. இரவும் பகலும் தாமே இரவும் பகலும் தாமே குழவியைக் கவனித்து வந்ததால், முதுமைப் பருவத்தராகிய பூங்கோதையம்மையார் நாளடைவில் உடல் நலங் குன்றி, ‘காளி என் ஆரூயிர் மகள் சண்பகம் விடுத்துச் சென்ற இவ்வழகுப் பெட்டகத்தை உன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன்’ என்று கூறி இறைவன் திருவடி எய்தினாள்.
(வளரும்)

குறள்நெறி, தை 2, 1995 / 15.01.1964

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue