Skip to main content

திருக்குறளைப் போலச் சிறந்ததொரு நூலில்லை- கருமுத்து. தி.சுந்தரனார்

திருக்குறளைப் போலச் சிறந்ததொரு நூலில்லை- கருமுத்து. தி.சுந்தரனார்

thirukkural02
நம் கடமை
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’
நம் நாடாகும். தெய்வமணம் கமழும் திருக்குறள் நெறியைப் பாரெங்கும் சென்று பரப்ப வேண்டியது பைந்தமிழர் கடமையாகும்.
மகளிர் மாண்பு
திருவள்ளுவரின் முப்பாலைப் பற்றி இங்கே இருபாலார் பேசுவது மகிழ்ச்சிக்குரியதாகும். அதிலும், மகளிர் அறத்துப்பாலைப்பற்றி உரை நிகழ்த்துவது மிகவும் பொருத்தம் உடையதாகும். மக்களைப் பெற்று அன்புடன் பேணி வளர்த்து இல்லறத்தை நல்லறமாக நடத்துவதற்கு ஏற்ற பண்புகள் பெற்று விளங்குபவர் மகளிரேயாவர் அன்றோ!
துணிவு வேண்டும்
பிறமதத்தவர் தம் மதங்களின் உயர்வுகளை எடுத்துக் கூறுகின்ற அளவுக்குச் சைவ சமயத்தார் தம் மதத்தின் உயரிய உண்மைகளை எடுத்துக் கூறுகின்றார் இலர். அதைப் போன்றே வள்ளுவரின் உயரிய நெறிகளை விரிவாகவும் துணிவாகவும் கூறுகின்ற அறிஞர்கள் சிலராகவே உள்ளனர். இந்த நிலை மாறுதல் வேண்டும்.
திருக்குறளும் வீடுபேறும்.
திருக்குறள் அறம், பொருள், இன்பங்களை அமைப்புறக் கூறி வீடு பேற்றை விளக்கி வீறுபெற நிற்கும் விழுமிய நூல் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
செம்மை மணம் பரப்பி நிற்கும் சிறப்பு மிகு திருக்குறளைச் சிலர் தீக்குறளே எனக்கூறியது கேட்டு மனம் மிக வருந்தினேன்.
வள்ளுவரும் புத்தரும்
ஆசையே துன்பத்திற்குக் காரணம்; ஆகவே ஆசையை நீக்குமின்’, என்பது புத்தர் பெருமான் திருவாக்கு. இக்கருத்தைத் திருவள்ளுவர்,
‘‘யாதெனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’’
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்
எனக் கூறியுள்ளார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’.
என்ற திருக்குறளும் இங்கே நினைவு கூறத்தக்கதாகும்.
வள்ளுவரும் ஏசுநாதரும்
சமயச் சான்றோர்கள், தலைவர்கள், கூறுகின்ற கருத்துக்களைத் தெளிவாகத் திருக்குறள் கூறக் காண்கின்றோம்.
ஏசுநாதர், ‘‘ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால், மற்றொரு கன்னத்தையும் காட்டு’’ எனக் கூறியுள்ளார். இக்கருத்தை,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நண்ணயம் செய்து விடல்’
எனக் கூறிச் செல்லும் முறை வியந்து வியந்து போற்றுதற்குரியதாகும்.
உண்மை இன்பம்
வாழ்க்கை நன்முறையில் அமைந்து வளம்பல பெறுவதற்குக் குறள் வழி காட்டுகிறது. ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ எனக் கூறும் வள்ளுவர், ‘அறத்தால் வருவதே இன்பம்’ எனக் கூறி உண்மை இன்பத்தை உறுவதற்கு நெறி வகுத்துச் செல்கின்ற முறை சிந்தித்துப் போற்றுதற்குரியதாகும்.
வள்ளுவர் அரசியலில் பெரியாரைத் துணைக் கோடல்
உலக நாடுகளில் அமெரிக்கா சிறந்து விளங்குவதை அனைவரும் அறிவர். சட்ட அமைப்புகளாலும் நெறிமுறைகளாலும் இணையின்றி விளங்கும் எழில்மிகு அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு ஆட்சி முறையில் வழிகாட்டியாக இருப்பதை நாம் நன்கு அறிவோம். அங்குள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் உதவியை ஒவ்வொரு துறையிலும் விரும்பி ஏற்றுச் செயலாற்றுதலே அதற்கு முதன்மைக்காரணம் ஆகும். அறிஞர்களைப் போற்றும் மனப்பான்மை வளள்தல் வேண்டும். வள்ளுவர், பெரியாரைத் துணைக்கோடல் பற்றியும் அவர்தம் இடித்துரைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
இன்பம் பற்றி வள்ளுவர்
இன்பத்துப்பால் இயம்பும் உயரிய கருத்துகளை நாம் உளம் கொள்ளுதல் வேண்டும். தலைவனைப் பற்றியும் தலைவியைப் பற்றியும் குறள் கூறும் கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை ஆகும்.
சொல்லாமை உண்டேல் எனக்குரை; மற்று நின்
வல்வரவு வாழ்வார்க் குரை’
என்பது போன்ற, விழுமிய கருத்தினை ஏற்று நிற்கும் குறள் ஏராளம்! ஏராளம்!!
திருக்குறட் பெருமை
அறத்தைப் பற்றிப் பேசுகின்ற நூல்கள் பலவாக இருந்தபோதிலும் திருக்குறளைப் போலச் சிறந்ததொரு நூலினைக் கண்டிலேன். எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை பெரும்புலவர் பலர் திருக்குறட் சிறப்பினைத் தெளிவாகப் பாடியுள்ளனர்.
தானே முழுதுணர்ந்து தண்டமழின் வெண்குறளால்
ஆன அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழி னிரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கொன்னாற்றம் மற்று
என நக்கீரர் வள்ளுவரின் பெருமையை எடுத்துக் கூறியுள்ளார்.
எழுச்சி கொள்க!
வேற்றுமை உணர்வுகளைநீக்கி ஒற்றுமையினைப் பரப்புவீராக! அதன்பின் வழியது உயர்நிலை என்பதை உணர்ந்துபோற்றுவீராக! ‘செய்க பொருனை’ என்பது குறள் நெறி; பொருள் வளம் பெறத் தொழில் வளத்தைப் பெருக்குவீராக! கற்றுத் துறைபோய முத்தமிழ்ச் செல்வர்களாகத் திகழ்வீராக! எழுச்சி கொள்க! புதுமை காண்க! குறள் நெறி வாழ்க! வாழ்க வள்ளுவம்.
‘‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்’’
[6.2.64ஆம் நாள், மதுரை, தியாகராசர் கல்லூரி, இளங்கோ மன்றத்தில் நடந்த திருவள்ளுவர் விழாவின்போது திரு.கருமுத்து, தி.சுந்தரனார் அவர்கள் நிகழ்த்திய தலைமைப் பேருரை.]


 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue