போரைத் தடுத்த கவிதை!

போரைத் தடுத்த கவிதை!








அதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை "நைடதம்' என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், ""நைடதம் புலவர்க்கு ஒüடதம்'' என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.
 வரகுண பாண்டியனின் மனைவியும் சிறந்த தமிழறிவுள்ளவள். அவளிடம் தம்பியின் நூலைக்காட்டி, அவள் கருத்தைக் கேட்டான். அவள் அந்நூலைப் படித்துப் பார்த்து, ""உங்கள் தம்பி எழுதியுள்ள நைடதம், நளன் சுயம்வரத்தில் தமயந்தியை மணந்தது, தங்கள் நாடு சென்று இல்லற வாழ்வில் இன்பம் அடைந்தது வரை கவிஞர்கள் பாராட்டும் அளவிற்குப் பாடியுள்ளார். ஆனால், கலி தொடர்ந்த பின் கலிநீங்கும் வரை நளனும் தமயந்தியும் துயரமடைந்த அவலச் சுவையை, கவிதைகள் நன்றாக விளக்கவில்லை'' என்று கூறினாள்.
வரகுணராம பாண்டியன், தன் மனைவியிடம், ""என் தம்பி அழகும் அறிவும் உள்ள பெண்ணை மணந்து இல்லற வாழ்வில் இன்பத்தின் எல்லை கண்ட காலத்தில் நளன் -தமயந்தியின் இல்லற வாழ்வைப் பற்றிப் பாடும்போது இன்பச் சுவையை அழகாகப் பாடியுள்ளான். இளைஞனான அவன், கலியினால் அவர்கள் துன்பம் அடைந்ததைப் பாடும்போது அவலச்சுவை குறைந்திருப்பது இயல்பே. நீயே உன் கருத்தை எழுதியனுப்பு'' என்று கூறினான்.
""நைடதத்தில் உள்ள கவிதைகளில் அழகும் சுவையும் முதற்பகுதியில் இருந்ததுபோல் இல்லாமல் போகப் போகக் குறைந்துகொண்டே போயுள்ளது. ஆதலால், வேட்டை நாய் முதலில் வேகமாக ஓடி, போகப்போக இளைத்தது போன்றும்; கரும்பை வேரிலிருந்து தின்னும்போது முதலில் சுவையாகவும் போகப்போகச் சுவை குறைந்துகொண்டே உள்ளது போன்றும் நைடதத்தின் கவிதைகள் உள்ளன'' என்று அவள் எழுதி அனுப்பினாள்.
இந்த ஓலையைக் கண்ட அதிவீரராம பாண்டியன், ""அண்ணா, வரகுணராம பாண்டியா, நீ என்னைப் பழித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீ என் கவிதைகளை - என் தமிழைப் பழித்தாய்! ஆதலால் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போருக்கு வரவேண்டும்'' என்று ஓலை எழுதி அனுப்பினான்.
தம்பியின் ஓலையைக் கண்ட வரகுணராம பாண்டியன், தம்பியிடம் மன்னிப்புக் கேட்டாலும் போர் தொடுத்தாலும் பழி உண்டாகும். இதற்கு என்ன பதில் எழுதுவது என்று யோசித்தான். அதைக்கண்ட அவன் மனைவி, ""ஒரு கவிதையினால் உங்கள் தம்பியின் கோபத்தைத் தணிக்கிறேன்'' என்று கூறினாள்.
""இராமாயணத்தில் சூரியன் மகனாகிய சுக்ரீவன். ராமனிடம் தன் அண்ணனான வாலியின் குற்றங்களைக்கூறி அண்ணனைக் கொல்லச் செய்தான்.
தென்னிலங்கை வேந்தனாகிய விபீஷணன் தன் அண்ணனான இராவணன் மார்பில் அம்பெய்தால்தான் அவன் உயிர் போகும் என்ற உண்மையை ராமனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்தான். மகாபாரதத்தில் அருச்சுனன் தன் அண்ணனாகிய கர்ணனைக் கொன்றான்.
அண்ணன்-தம்பிகளின் பாசத்திற்கு இந்த மூன்று தம்பிகளையும் பாராதே. அண்ணனின் பாதுகைகளை அரியணையில் ஏற்றி, "அண்ணன் ராமர் வரும் வரையிலும் அயோத்திக்குள் நுழையமாட்டேன்' என்ற விரதத்துடன் தவக்கோலம் பூண்டு, நாட்டை ஆண்ட தம்பி பரதனையும் ராமனையும் பார்'' என்ற பொருளில்,
""செஞ்சுடரோன்  மைந்தனையும்  தென்னிலங்கை
                                                                   வேந்தனையும்
பஞ்சவரில்  பார்த்தனையும்  பாராதே - மிஞ்சு
விரதமே பூண்டு மேதினி யாண்ட
பரதனையும் இராமனையும் பார்''
என்ற கவிதையை எழுதி அனுப்பினாள். ஓலையில் உள்ளதைப் படித்த அதிவீரராம பாண்டியன் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டான்.
அண்ணன்-தம்பிகளுக்குள் நடக்க இருந்த போரை ஒரு தமிழ்க் கவிதை தடுத்து நிறுத்திவிட்டது என்ற வரலாறு இக் கவிதையின் பெருமையை உணர்த்துகிறது.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue