செந்தமிழ்ச் செம்மல் சி.இலக்குவனார் - நூற்குறிப்பு



போற்றுதலுக்கு உரிய மணிவாசகம் பதிப்பகம்

 பார்புகழ் பெறுவதாக!
  அறிஞர் முனைவர் ச.மெய்யப்பன்  அவர்களின் தமிழ்ப்பணிகளில் குறிப்பிடத்தகுந்தது அவரின்  மணிவாசகர் பதிப்பகம் மூலம் ஆற்றிய தமிழ் நூல்கள் வெளியீட்டுப் பணியாகும். இதனாலேயே பதிப்புச் செம்மல் என  அறிஞர்களால்  பாராட்டப் பெறுகிறார். அவர் வழியில் தொடர்ந்து நல்ல நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டும் வரும் மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு நல்லோர் வாழ்த்து என்றும் உரித்தாகும்!
  தந்தையார் எண்ணியதை முடித்து வரும் திருவாளர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் திருவாளர் இராம.குருமூர்த்தி அவர்களும் என்றென்றும் தமிழ்உலகின் போற்றுதலுக்கு உரியவர்களாகத் திகழ்கிறார்கள்.
  அறிஞர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்கள், தாம்  பெரிதும் போற்றிய தமிழ்ப்போராளி பேராசிரியர்சி.இலக்குவனார் குறித்துத் தம் தமிழியக்க வேர்கள் என்னும்  நூலில், ‘படிக்கும் பருவத்திலேயே தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் என்றும், ‘எதையும் திட்பநுட்பத்துடன் விளக்கும் திறனாளர் என்றும் எளிய நடையும்  புதிய நோக்கும  கொண்ட படைப்பாளர் என்றும் தமிழியக்கத்தலைவர்களில் தலைமைத் தலைவர் என்றும் போற்றி வணங்கியிருப்பார்.
  அவர் வழியில் இன்றைக்கு மணிவாசகர் பதிப்பகம்  செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் என்னும் தனிநூல் வெளியிடுவது  பேருவகை அளிக்கிறது.  எளிய இனிய தனித்தமிழை நூல்கள் வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் மக்களிடையே பரப்பிய பேராசிரியரின் அரும்பெரும் பணிகளை இக்காலத் தலைமுறையினரும் வருங்காலத் தலைமுறையினரும் அறியும்  வண்ணம் நூலாக வெளியிடும் மணிவாசகர் பதிப்பகம் மேலும் மேலும் சிறப்பதாக!
  எளிமையாலும் நல்லுழைப்பாலும் உயர்பண்பாலும் உயர்ந்து விளங்கும் கண்ணியம் ஆ. கோ. குலோத்துகங்கன் ஐயா அவர்களின் பெரும் முயற்சியால்  இத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.  தமிழால் பொருள் ஈட்டுவோரிடையே, தம் பொருளை ஈந்து தமிழ்அறிஞர்களையும் தமிழியக்கத் தொண்டர்களையும் போற்றி விருதுகள் அளித்து வரும் அருந் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்  அப் பெருந்தகையாருக்குத் தமிழ்உலகின் நன்றி என்றும் உரித்தாகும். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களுக்குத் தம் கண்ணியம் இதழின் சிறப்பு மலர் வெளியிட்ட அப்பெருந்தகையாளர் இன்று தனிநூலையே அளித்துப் பேராசிரியர்பால் தமக்குள்ள நன்மதிப்பையும் அவரைத் தமிழ்உலகம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்னும் தம் விழைவையும் வெளிப்படுத்தி உள்ளார். போற்றுதலுக்குரிய கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்களுக்குத் தமிழன்னையில் அருள் என்றும் கிட்டுவதாக!
  தமிழறிஞர்களின் புலமைகளை வெளிநாட்டார் வணக்கம் செய்யவேண்டும் என்னும்  பேரார்வத்துடன்  இணைய வழி படைப்புரை அளித்துப் பரப்புரை  மேற்கொண்டு வருபவர் இளைய தமையனார் பேராசிரியர் முனைவர் மறைமலை அவர்கள். இலக்கியத் திறனாய்விலும் வாழும் கவிஞர்களைப்போற்றுவதிலும் முன்னோடியாகத் திகழ்பவர்; சங்கப்புலவரைப்போன்று நடுநிலைஉணர்வுடன் பிற அறிஞர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும்  ஆங்கிலத்தில்  பாராட்டுரை தெரிவித்தும் தனித்தனி வலைப்பூக்களை உருவாக்கியும் வரும் இருமொழிப்புலவர்; இத்தகைய பணிகளில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும்  இல்லாத் தமிழ்ச்செம்மல் எனப் பாரில் உள்ளவர்களின் பாராட்டிற்குரியவராகத் திகழும் அவரின் தொகுப்பாக்கமும் இந்நூல் வெளியீட்டிற்குத்  துணைநின்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
 கண்ணியம், கூடல் மலர், தினமணி, தென்றல் இணைய இதழ், நட்பு இணைய இதழ், புகழ்ச்செல்வி, புதுகைத் தென்றல்,  மீண்டும் கவிக்கொண்டல், விடுதலை
ஆகிய இதழ்களில் வெளிவந்தனவும்
  இரியாத்திலுள்ள  சவுதி அரேபியா வளைகுடாத் தமிழ்ச்சங்கம்,  ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்,  இலக்குவனார் இலக்கிய இணையம், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம்,  கோவிலூர்  ஆதினம்,  செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்,  சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறை, சென்னை வானொலி நிலையம், மா.இராசமாணிக்கனார்  இதழியல் ஆய்வு நிறுவனம், 
 ஆகிய அமைப்புகள் நடத்திய கருத்தரங்கங்கள், விழாக்கள் முதலானவற்றில் இடம் பெற்ற உரைகளும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
  கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்,  ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் கண.சிற்சபேசன், பேராசிரியர் இராசம் இராமமூர்த்தி, முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியம், முனைவர் ச.சு.இராமர் இளங்கோ, செம்மொழி அறிஞர் முனைவர் க.இராமசாமி, இ.சிகாமணி, இடைமருதூர் கி.மஞ்சுளா, ஐவர்வழி வ.வேம்பயைன்,  கவிஞர் அ.நவநீதன்,  கவிஞர் கா.முருகையன்,  கவிஞர் மு.வில்லவன், கொடுமுடிக்கவிஞர் க.அ.பிரகாசம்,  நவீன்குமார்,  பழமைபேசி,    பா.சு.இரமணன்,   புகழ்ச்செல்வி - பரணிப்பாவலன்,   புதுவைப்புலவர் செ.இராமலிங்கம், புலவர் பூங்கொடி பராங்குசம், பேரளம் க.இளங்கோவன்,    பேராசிரியர் சா.சி.மதிவாணன், வெண்பா வேந்தர் புலவர்  இராம.வேதநாயகம் முதலான தமிழ்நாட்டிலும்  அயல்நாடுகளிலும் உள்ள ஆன்றோர்களின் கருத்துரைகள் தொகுப்பிற்கு அழகு சேர்க்கின்றன. தொகுப்பாளர்களான கண்ணியம் ஆ. கோ.குலோத்துங்கன்,  திறனாய்வுச் செம்மல், பேராசிரியர் முனைவர் மறைமலை,  ஆகியோரின் படைப்புகளும் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகிய என் படைப்புகளும் உரைகளும்  தொகுப்பிற்கு இடம் பெற்றுள்ளன. மூத்த தமையனார் பொறி இ.திருவேலன், கவிஞர் குமரிச்செழியன், ஆகியோரின் அச்சுத் திருத்தப் பணி இந்நூலைச் செம்மைப்படுத்தி உள்ளது.
  இந்நூலின் மூலம், பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் தொல்காப்பியச் செழுமை,  சங்கஇலக்கிய வளமை, திருக்குறள் நுண்மை, தமிழ் காத்த தகைமை ஆகியவற்றுடன் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும் கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழலில் ஒரு பகுதியையும் அறிய முடிகின்றது. இதனால் இந்நூல் பாடநூலாகும் சிறப்பைப் பெற்றுள்ளதைப்  பல்கலைக்கழகங்கள் உணர்ந்து  ஆவன செய்ய வேண்டும்.
 இரண்டாம் தொல்காப்பியராகவும்,  இரண்டாம் நக்கீராகவும்,  இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் ஆகவும் சிறப்பிக்கப்பெறும் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பற்றிய சிறப்பான தொகுப்பு நூலை வெளியிடும் மணிவாசகம் பதிப்பகம் பதிப்புத் துறையில் மேலும் சிறந்து பார்புகழ் பெறுவதாக! தமிழ் உலகு பயன் உய்வதாக!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
(பி.கு. : 240 பக்கங்கள் கொண்ட நூலின் விலை உரூபாய் 100)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue