பகுதி தகுதி விகுதி

பகுதி  தகுதி  விகுதி

First Published : 07 April 2013 12:31 AM IST
எதையுமே நேரடியாகச் சொல்லிவிட்டால் அதில் ஒரு சுவை இருக்காது. அதையே ஒரு புதிராகச் சொல்லும்போது சற்றே சிந்திக்கவும், சிந்தித்து விடையைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சியோடு அதை நினைவில் கொள்ளவும் முடிகிறது.
இராமலிங்க அடிகள், தனியொரு மனிதராய் தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது. அவர் அறுகம்புல் பற்றி எழுதியுள்ள ஒரு வெண்பா படித்து, சிந்திக்க இன்பம் தருகிறது.

""பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டி - தகவின்
அருச்சித்தால் முன்னாம்; அதுகடையாம்
       கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து''

பகுதி தகுதி விகுதி என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அருச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும்.
சிற்சபையானை எதைக்கொண்டு அருச்சித்தால், எது உண்டாகி, எது கிடைக்கும்? என்பதுதான் இப்பாடல் கூறவரும் கருத்து. பகுதி, தகுதி, விகுதி என்பதில்,
இகலில் இடையை இரட்டி: இடையில் உள்ள எழுத்து "கு' (பகுதி, தகுதி, விகுதி). இதைக் கூட்டினால் மூன்று "கு' வரும். இதை இரட்டித்தால் ஆறு "கு' - அறுகு வரும். (அறுகு-அறுகம்புல்).
அருச்சித்தால் முன் ஆம்: அறுகம்புல் கொண்டு அருச்சித்தால் முன் உள்ள எழுத்துகளான (ப, த, வி) - பதவி என்பது வரும். (பதவி - சிவபதம்).
அது கடை ஆம்: பதவி ஆகிய சிவபதம் என்னும் நிலை வந்தால், கடைசி எழுத்தினைக் கூட்ட (தி,தி,தி) மூன்று "தி' வரும். அதாவது முத்தி (மோட்சம்) கிடைக்கும். இவ்வாறு வள்ளலார் சொற்களை நயம்படக் கையாண்டுள்ளார்.

Comments

  1. உங்கள் விளக்கம் அருமை! வெறும் சொற்களினால் வரும் பொருளும் இதற்கு அமையப்பெற்றால் நன்றாயிருக்குமே. ஆழ்ந்து கற்போருக்கு மனநிறைவளிக்கும் பொருளும், மேலோட்டமாய் வாசித்துப் போவோருக்கும் ஒரு வழிசொல்லும் பாட்டாக இருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue