பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு - Prof.Dr.S.Ilakkuvanar

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

பதிவு செய்த நாள் : 16/11/2012

நட்பு இணைய இதழ்
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன் என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும்,  சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,  இதழுரைகள், நூல்கள் எழுதும் பொழுதும் தமிழ்க்காப்பு பற்றியும் தமிழ் மீட்பு பற்றியும் தமிழர் எழுச்சி பற்றியும் பேராசிரியர் உணர்த்திடத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டிற்காக  சில இலக்கியக் குறிப்புகளை மட்டும் நாம் பார்ப்போம்.

பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தொல்காப்பிய விளக்கம், சங்க இலக்கியப் பாடல்கள் விளக்கம், திருக்குறள் விளக்கம் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்து எளிமையாக விளக்கி உள்ளார். இவற்றுள் சங்க இலக்கியத்தில் அகநானூற்றுப்பாடல் பற்றிய அவரது விளக்கத்தில் சிலவற்றை மட்டும் காண்போம்.

பேராசிரியர் இலக்குவனாரின் அரும் பெரும் முயற்சிகளால் சங்க இலக்கியங்கள், வாழும் மக்கள் இலக்கியங்களாக நிலைத்துள்ளன. சங்கத்தமிழை வங்கக்கடலில் தூக்கி எறிவோம் எனத் தமிழ்உணர்வும் தமிழக வரலாறும் அறியாத் தமிழர்கள் சிலர் முனைந்த பொழுது  வீறு கொண்டு எழுந்து சங்க இலக்கியங்களைப் பரப்புவதன் மூலமே இக்கெடுநினைவை அழிக்க முடியும் என உணர்ந்து அவ்வாறு பரப்பிய இலக்கியச் செம்மல் அல்லவா பேராசிரியர் இலக்குவனார். அவ்வாறு அவர்  சங்க இலக்கியத்தின் கேடயமாகப் பயன்படுத்தியதுதான் அவர் நடத்திய சங்க இலக்கியம் (1945-1947)என்னும் வார  இதழ். இவ்விதழில் தொடர்ந்து சங்கப் பாடல்கள்பற்றி எழுதி உள்ளார். புலவர் மாமூலனார் பாடல்கள் மூலம் சங்கத்தமிழின் தெவிட்டாச் சுவையையும் பழந்தமிழ்ச் சிறப்பையும் உணர்த்தியதுடன் தமிழ் எழுச்சி உணர்வையும் பேராசிரியர் இலக்குவனார் கிளர்ந்தெழச் செய்துள்ளார். இப்பாடல்கள் மூலம் நாம் இழந்துள்ள தமிழக நிலப்பரப்புகளைப்பற்றி அவர் சுட்டிக்காட்டும் சிலவற்றைப் பார்ப்போம். அகநானூற்றுப் பாடல் 61 இல், விழுச்சீர்  வேங்கடம் பெறினும்  என்னும் அடியை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர் தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பு மன்றத்தினர் மொழி வகையாக நாடுகளை வகுக்கும்போது தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்வார்களாக.

மொழி வழியாக நாடுகள் வகுக்கப்படும் எனப் பேராசிரியர் தொலை நோக்கு உணர்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் விழைந்தவாறான மொழிவழித் தேசிய நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் அமையவில்லை. என்றாலும் இந்தியநாடு என்னும் அமைப்பில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கும் பொழுது வேங்கடம் பறிபோகும் என்பதை உணர்ந்துதான் பேராசிரியர்  தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மொழி வழி மாநிலங்கள்அமைக்கும்பொழுது ஆண்ட தலைவர்கள் வரலாற்று உணர்வு இல்லாதர்களாகவும் தமிழ்த் தேசிய உணர்வு அற்றவர்களாகவும் இருந்தமையால் நாம் வேங்கடமாகிய திருப்பதியை இழந்தோம். என்றபோதும் தமிழக  அகஎல்லையாகத் திருப்பதி அமைய நாம் முயன்று வெற்றி காண வேண்டும்.

அகநானூற்றுப் பாடல் 91 இல், குடநாடு பெறினும் தவிரலர் என்னும் பாடலடியை விளக்கும் பொழுது மொழிக்கலப்பின் தீமையைப் பின்வருமாறு உணர்த்துகிறார்.

குடநாடு: இன்று ‘மலையாளம்’ என்று வழங்கப்படும் இடம் தான் அன்று தமிழ் வழங்கும் குடநாடாக இருந்தது. இன்று தமிழரின்றும் வேறுபட்டதாகவும், தமிழர்க்கும் தமக்கும் தொடர்பு இல்லையென்றும் நினைக்கும் மக்கள் மிகுந்த நாடாக விளங்குகின்றது. இதுவும் காலத்தின் கோலம்! இவ்வேறுபாடு எதனால் ஏற்பட்டது எனின், பாண்டியநாட்டுத் தமிழரினின்றும் சேரநாட்டுத் தமிழரை மலைகளும் காடுகளும் இடைநின்று பிரித்தன. சேரநாட்டை ஆண்ட பிற்கால அரசர்கள் தமிழையும் தமிழ்ப் புலவரையும் போற்றாது புறக்கணித்தனர். ஆரியம்  அங்குச் செல்வாக்குப் பெற்றது. ஆரியமொழியை ஒட்டி இலக்கணம் வகுத்தனர். ஆரிய மொழிச் சொற்களைத் தம்மொழியிற் கலந்து வழங்கினர். ஆகவே தமிழ்மொழி வேற்று மொழியாக உருவடைந்து ‘மலையாளம்’ என்ற புதுப்பெயரையும் பெற்றது. அதனால்தான் தமிழில் வேற்று மொழிச் சொற்களைக் கலந்து எழுதுதலும் பேசுதலும் கூடாது என்கின்றோம்.

இன்று ஊடகங்கள் வாயிலாக மொழிக்கலப்பு மூலம் தமிழ்க்கொலை விரைவாக நடைபெற்றுவருகிறது. மக்களும் மொழிக்கலப்பின் தீமையை உணராமல் பிற மொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசியும் எழுதியும் வருகின்றனர்.  தமிழ்  மலைநிலம் மலையாளநாடு என்னும் வேற்ற நிலமாக மாறிய வரலாற்றை உணர்ந்தாவது நல்ல தமிழே பேசுவார்களாக! நல்ல தமிழிலேயே எழுதுவார்களாக!

தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும்  அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார்.

எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால்  ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேற்றுமொழியில் இத்தகைய பெயர்களை இடுகின்றோம். ‘காமதேனு’ (பசு) ‘கற்பகம்’ (மரம்) ‘மாணிக்கம்’ (கல்) ‘கமலம்’ (தாமரை) என்ற பெயர்களை இன்றும் இடுகின்றாக்ள். தமிழில் கூறினால்தான் அதை இழிவாகக் கருதுகின்றார்கள். இன்னும் ஆங்கிலேயர்களிடையே  Stone,Thorn,Wood முதலிய பெயர்கள் வழங்கக் காண்கின்றோம். ஆகவே அன்று அப் பழங்காலத்தில் இட்ட ‘எருமை’ என்ற பெயரைக் கண்டுவியப்படைய ஒன்றுமில்லை, இவ் எருமை என்பவன், இன்று மைசூர் என வழங்கும் நாட்டையும் ஆண்டிருத்தல் வேண்டும். மைசூரும் குடநாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடாகத்தான் அன்று இருந்தது. அதற்கு எருமையூர் (எருமை என்பவன் ஆண்ட ஊர்) என்ற பெயர் வழங்கிற்று. அப்பெயரே பின்னர் ஆரியத்தில் ‘மகிசாபுரி’ என மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் மகிசாசுரன் ஆண்டதாகப் புராணமும் எழுதப்பட்டது. ‘மயிலாடு துறையை’ ‘மாயூரம்’ எனவும் ‘பழமலையை’ விருத்தாசலம் எனவும் மறைக்காட்டை ‘வேதராணியம்’ எனவும், மொழிபெயர்த்தது போலவே எருமையூரையும் மகிசாபுரியாக்கினார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள் பெயர்கள் பிறமொழி வயமாவதால் உரிமை நிலமும் உறவற்றுப் போவதை உணர வேண்டும் என்பதற்காகவே பாடல் விளக்கங்களிலும் தமிழ் மீட்பு உணர்வைப் பதிக்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.

முப்புற எல்லைகளையும் முற்றிலும் இழந்துள்ள நாம், இருக்கின்ற நிலத்தையவாது தமிழ்நிலமாக உரிமையுடன் ஆள மறைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்பதற்குப்பேராசிரியரின் பின்வரும் விளக்கம் உந்துதலாக அமையும். அகநானூற்றுப் பாடல் 197இல் வரும்  முதுகுன்றம் என்பதற்கு அவர் தரும் விளக்கம் வருமாறு :-

முதுகுன்றம்: இது இப்பொழுது விருத்தாசலம் என்று வழங்கும் இடத்தின் பெயர்போலும். முந்தைய வெளியிட்டில் குறிப்பிட்டதுபோல் வடமொழியாளர் ஊர்களின் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மொழிபெயர்த்து வழங்கினர். முதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்று மாற்றி அப்பெயரை நிலைக்கச் செய்துவிட்டனர் தமிழர்கள். இனித் தமிழ்ப்பெயர்களையும் வழங்குமாறு செய்து, தமிழ்ப்பெயரால் அழைக்க வேண்டும். இவ்விதம் கூறுவது வடமொழி மீது கொண்ட வெறுப்பினால் அன்று. தமிழ்நாட்டில் ஊர்ப் பெயர்கள் தமிழில் இல்லாது வேற்றுமொழியில் இருப்பின், தமிழர் தம் ஊரைப்பற்றியோ, தம் மொழியைப் பற்றியோ கவலைப்படாதவர்கள் என்ற பழிதான் சாரும். ‘திருநெல்வேலி’ யை ஒரு ஆங்கிலேயன் Beautiful paddy fence, என்றும் Cumberland என்ற ஆங்கில ஊரை நாம் ‘கம்பர் நாடு’ என்றும் அழைத்தால் எப்படியோ அப்படித்தான் முதுகுன்றத்தை விருத்தாசலம் என்பதும். ஆகவே இம்மாதிரி மொழிபெயர்க்கப்பட்ட பெயர்களைத் தமிழிலேயே வழங்குவதற்கு ஆவனசெய்வார்களாக.

 கேரளா முதலான பிற நாட்டவர் அவரவர் மொழித்திருத்திற்கேற்பவே ஊர்ப்பெயர்களை ஆங்கிலம்  முலான பிற மொழிகளில் குறிப்பிடுகின்றனர். பேராசிரியரின் விழைவிற்கேற்ப தமிழ்ப்பெயர் மீளுரிமை பெறும் வகையில் சில ஊர்ப்பெயர்கள் மாற்றப்பட்டாலும் முழுமையான அளவில் நடைபெறவில்லை. இடையிலே வந்த சிரீ நீக்கப்பட்டு பல்பொருள் சிறப்பு கொண்ட திரு மீண்டும் அணி செய்ய வேண்டும் என ஊர்களில் அரசு மாற்றம் கொண்டு வந்தாலும் இன்றும் திருவரங்கம் இல்லை! சிரீரங்கம்தான் கோலோச்சுகிறது! திரு விழந்த ஊர்கள் அனைத்தும் பெயரில் திருவைப் பெறுவதன் மூலமே திருவளர் ஊர்களாக மலரும் என்பதை உணர்ந்து நாம் தமிழ்ப்  பெயர் மீட்பினை மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும்  பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.

வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப் பற்றி விரிவாக அறிவரேயன்றி, நம் நாட்டுப் போரைப்பற்றி நன்கு அறியார். அது அவர்கள் குற்றமும் அன்று. தமிழ் நாட்டு வரலாறு நன்கு அறிந்து கொள்வதற்குரிய முறையில் கல்வித் திட்டம் அமைந்திலது. வருங்காலக் கல்வித்திட்டமாவது தமிழர்கள் தம் முன்னோர்களை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம்  தமிழக  நில வரலாற்று அறிவையும்  தமிழ்ப்பெயர் வரலாற்று அறிவையும் படிப்பவர்களுக்கு ஊட்டுவதையே பேராசிரியர் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்.

சொற்பொருள் விளக்கங்களின் பொழுது மட்டும் அல்லாமல் தொடர் விளக்கங்களிலும் தமிழ் உணர்வை ஊட்டப்பேராசிரியர் தவறியதில்லை. சங்க இலக்கியப் பாடல்களை நாடக வடிவில் விளக்கும் பேராசிரியர் தலைவியும் தோழியும்  உரையாடும் பொழுது பிறமொழி கலந்து பேசுவதால் ஏற்படும் தீமையை விளக்குகிறார்; இதன் மூலம் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என  வலியுறுத்துகிறார். அகநானூற்றறுப் பாடல் 211 இல் வரும் மொழிபெயர் தேஎத்தர் என்னும் தொடரைப் பின்வரும்வகையில் விளக்குகிறார். (தலைவி, தோழி ஆகியோரின் உரையாடலில் இடைப்பகுதி)
தலைவி : (தலைவர்) எங்குப் போவதாகக் கூறினார்.
தோழி : தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகட்குச் செல்வதாகக் கூறினார்.
தலைவி : இப்பொழுது தமிழ்நாட்டின் வட எல்லை எது?
தோழி : ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வட எல்லை இமயமலையாக இருந்தது. இப்பொழுது திருவேங்கடமலைதான் வட எல்லை.
தலைவி : திருவேங்கட மலைக்கு வடக்கேயுள்ள நாடு?
தோழி : அம்மலைக்கு வடக்கேயுள்ள நாடு இப்பொழுது வேறு மொழி வழங்கும் நாடாகக் கருதப்படுகிறது.
தலைவி : அதன் காரணம் என்ன?
தோழி : என்ன? அதற்கு வடக்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் தெற்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமல் போய்விட்டது. தெற்கேயாண்ட தமிழ் அரசர்கள் வடக்கேயுள்ள தமிழ் மக்கட்கு நல்ல செந்தமிழ்க்கல்வியை அளிக்கத் தவறிவிட்டனர். வடபகுதிகளில் தமிழ்ப்புலவர்கள் தோன்றித் தமிழை வளர்க்கப் பாடுபடவில்லை. இச்சமயத்தில் ஆரியமொழி பேசும் இனத்தார் அப்பகுதிகளில் குடியேறினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தம் மொழியையும் வழக்க ஒழுக்கங்களையும் நிலை நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்து தொண்டாற்றினர். அப் பகுதியிலிருந்த  தமிழர்கள், தம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டதோடு, தம் மொழியையும் சிதைத்து வழங்கினர். பின்னர் ஆரிய மொழியைப்படித்து அதன் இலக்கணத்தை ஏற்றுக் கொண்டனர். ஆகவே இன்று, அவர்கள் பேசும்தமிழ் நம் தமிழினின்றும் வேறுபடுகின்றது.
தலைவி : பிற மொழிச் சொற்களைக் கலந்து பிற மொழி இலக்கணத்தை ஏற்றுக் கொண்டதனால் அல்லவா இந்நிலைமை ஏற்பட்டுவிட்டது?
தோழி : ஆம் அம்ம! அப்பகுதியில் வழங்கும் மொழி நம் மொழியினின்றும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
தலைவி : இப்பொழுதுஎன்ன பெயர் பெற்றுள்ளது?
தோழி : என்ன பெயரி? ஒரு பெயரும் கிடையாது. தமிழ் என்று சொல்வதற்கும் தகுதியுடையதில்லை. வேறு மொழியாயும் இல்லை.

தலைவன்-தலைவி காதல் செய்தியிலும் தமிழ்க்காதலை இணைக்கும் பேராசிரியரின் தமிழ்க்காதலும் வரலாற்றை உணர்த்தியாவது நம்மை விழிப்படையச் செய்ய எண்ணும் அவரின் நுண்மாண் திறனும் போற்றுதற்கு  உரியன அல்லவா?
அகநானூற்றுப் பாடல் 31 இல் வரும் தமிழ்கெழுமூவர் காக்கும் என்னும் அடியை விளக்கித் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததாகத் திரித்துக் கூறுவோருக்குத் தமிழ் என்னும் சொல்லே நம் மொழியின் மூல முதன்மைச் சொல் என்பதைப் பின்வருமாறு  விளக்குகிறார்.

தமிழ் : இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காண்ப்படுகின்றதால், கி.பி.5ஆம் நூற்றாண்டில் தோன்றிய திராவிட என்ற சொல்லே தமிழ் என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப் பொய் என்று அறியலாம்.

தமிழ் என்பதே தமிழர்கள் தம் மொழிக்கு இட்ட பெயர்  என இனியேனும் பகைமுக ஆராய்ச்சியாளர்கள் உணர்வார்களாக!

இலக்கியச் சுவையில் மயங்கி விடாமல் இலக்கியச் சுவை வாயிலாகவும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு தொடர்பான காப்பு உணர்வையும் மீட்பு உணர்வையும் படிப்பவர்களிடையே  விதைத்தமையால்தான்  பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்க்காப்புத் தலைவராகத் தமிழர் உள்ளங்களில் வாழ்கிறார்.
பேராசிரியர் இலக்குவனார் வழி நின்று நாம்
தமிழிலேயே பேசுவோம்! தமிழிலேயே எழுதுவோம்!
தமிழ்வழிக்கல்வியே பெறுவோம்!
தமிழால் உலகாளுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
(இந் நவம்பர் 17 ஆம் நாள் தமிழ்ப்போராளி பேராசிரியரின் 103 ஆவது பிறந்த நாள்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue