படிக்காத மேதை' - "மஞ்சரி' தி.ச.இர.

"படிக்காத மேதை' -  "மஞ்சரி' தி.ஜ.ர.!

First Published : 14 October 2012 05:56 AM IST
தமிழில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போன்று ஓர் இதழை வெற்றிகரமாக சுமார் 25 ஆண்டுகாலம் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் "தி.ஜ.ர.' என்றழைக்கப்படும் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். அவர் நடத்திய "மஞ்சரி' எனும் இதழின் பெயராலேயே "மஞ்சரி தி.ஜ.ர.' என்றழைப்பதும் சாலப்பொருத்தம்.
÷1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்தவர். ஒரத்தநாடு சத்திரத்தில் இருந்த பள்ளியில் நான்காம் வகுப்பு வரையே படித்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தாலும் தந்தை அவரைப் படிக்க வைக்கவில்லை.
÷தி.ஜ.ர.வின் தந்தை "கர்ணம்' வேலை பார்த்து வந்ததால், தந்தையாருடன் ஊர் ஊராய்ச் சுற்றினார். இதனால் தமது படிப்பைத் தொடர முடியாத தி.ஜ.ர., தனக்குத் தானே ஆசிரியராக இருந்து படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படித்தார். விஞ்ஞானத்தில் குறிப்பாக, கணிதத்தில் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே ஆங்கிலம் படித்துப் பின்னாளில் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார்.
÷தொடக்கத்தில் சில காலம் நில அளவைக்கான பயிற்சி பெற்று கர்ணம் வேலை பார்த்தார். பின் தன் 14-ஆவது வயதில் சுந்தரவல்லி என்பவரைத் திருமணம் புரிந்தார். பிறகு மாமனார் ஊரில் சில மாதங்கள் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், தஞ்சாவூரில் வக்கீல் குமாஸ்தாவாக, கும்பகோணத்தில் ஒரு மளிகைக் கடையில் சிற்றாளாக - இப்படிப் பல பணிகள் செய்துள்ளார்.
÷1916-ஆம் ஆண்டு தம் 15-ஆவது வயதில் திருவாரூர் அருகில் இருக்கும் "திருக்காராயல்' எனும் சிற்றூரில் இருந்த தம் சின்னம்மா இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஐந்து பாகங்கள் கொண்ட "ஐரோப்பிய யுத்த சரித்திரம்' என்னும் தமிழ் நூலைப் படித்தார். ""அந்த நூல்தான் எனக்குத் தலைமை ஆசான்'' என்று தி.ஜ.ர. குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்ததைத் தொடர்ந்து அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.
÷தி.ஜ.ர., எழுதிய முதல் கட்டுரை 1916-இல் "ஆனந்தபோதினி' என்னும் இதழில் வெளிவந்தது. அப்போது "ஸ்வராஜ்யா' இதழில் அவர் எழுதிய கவிதையும் வெளிவந்தது. தஞ்சாவூரிலிருந்து வெளிவந்த "சமரசபோதினி' என்னும் இதழில் தி.ஜ.ர., துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஊழியன், சுதந்திரச்சங்கு ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணிபுரிந்துள்ளார்.
÷அவரது முதல் சிறுகதைத் தொகுதி "சந்தனக் காவடி' என்னும் பெயரில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நொண்டிக்கிளி, காளி தரிசனம் போன்றவை வெளிவந்தன. தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் தி.ஜ.ர., முக்கியமானவர். அவருடைய கட்டுரைகளை பொழுதுபோக்கு, சமகாலச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என்று மூன்று வகைகளில் உள்ளடக்கலாம். தி.ஜ.ர., தமது கட்டுரைகளைப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் விதத்தில் அமைத்தார். சொல் அலங்கார நடையை அவர் வலிந்து மேற்கொள்ளாதவர்.
÷1923-இல் சமரசபோதினியில் தொடங்கிய அவரின் இதழ்ப்பணி 1972-இல் மஞ்சரியிலிருந்து விலகும்வரை நீடித்தது. ஆசிரியர், துணை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், உதவி ஆசிரியர், கூட்டாசிரியர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்துள்ளார்.
÷தி.ஜ.ர., சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வங்க எழுத்தாளர் ஹரீந்திரபாத் சட்டோபாத்யாயாவின் நாடகங்கள், இராஜாஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகள், வெண்டல் வில்கி என்ற அமெரிக்க எழுத்தாளரின் "ஒரே உலகம்' என்னும் நூல், லெனின் சரித்திரக் கதைகள், ருஷ்ய எழுத்தாளர் ஷென்கோவின் நாவல், நேருவின் உரைகள், லூயி ஃபிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை, போன்ற பல மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார்.
÷1940 முதல் 1946 வரை "சக்தி' இதழில் பணிசெய்தபோது தி.ஜ.ர., பாலன், நீலா எனும் புனைபெயர்களில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதினார். சிறுவர்களுக்காக அவர் எழுதிய சித்திர ராமாயணம் குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக அறிவியல் நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கதைகள், பாடல்கள் போன்று பல படைத்து தி.ஜ.ர., குழந்தை இலக்கியத்துக்கும் அணி சேர்த்துள்ளார்.
÷தி.ஜ.ர.வின் சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. தமிழக அரசு குழந்தை இலக்கியம் வளர்த்தமைக்காக அவருக்குப் பரிசளித்தது. தி.ஜ.ர., இறுதி நாள்களில் பேசமுடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மறதி நோய்க்கும் ஆளானார். பின்னர், 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார்.
÷இவர் படைத்தளித்த ராஜேந்திரன், ராஜாம்பாள், ஜெயரங்கன் போன்ற படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
÷"தி.ஜ.ர.வின் வாழ்க்கை, பலவிதமான குறைகள், அவதிகள், கஷ்டங்கள் நடுவில் சுறுசுறுப்பு, உற்சாகம், நம்பிக்கை, அறிவுத்தேடல் ஆகியவற்றைக் கொண்டது' என்று தன் இரங்கல் குறிப்பில் "கணையாழி' (நவம்பர் 1974) குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். "படிக்காத மேதை'யான தி.ஜ.ர., நம்மைப் படிக்கவைத்த படைப்புகள் ஏராளம்... ஏராளம்...!


கருத்துகள்(1)

>>இவர் படைத்தளித்த ராஜேந்திரன், ராஜாம்பாள், >>ஜெயரங்கன் போன்ற படைப்புகள் அரசுடைமை >>ஆக்கப்பட்டுள்ளன. தவறு! இவை துப்பறியும் நாவல்கள். ஜே.ஆர்.ரங்கராஜு எழுதியவை. தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தவறாக எழுதப் பட்டதைப் பார்த்து எழுதியிருக்கிறார்!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue