Iniyavanukku 70; ilakkiya veedthikku 34

Blog post image #1
50 ஆண்டுகளுக்குமேலாக எழுத்தாளராகப் பணி, 33 ஆண்டுகள் இடையறாத அமைப்புப் பணி எனத் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் ‘இலக்கிய வீதி’ அமைப்பாளர் இனியவனின் 70ம் ஆண்டு விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் பிற இடங்களிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதை முன்னிட்டு அவரிடம் ஒரு நேர்காணல்...
இனியவன் பெயரில் மட்டுமல்ல, நேரிலும் இனியவராகவே இருக்கிறார். இனியவன் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மட்டுமல்ல, பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து இன்றுவரை செயல்பட்டுவருபவர். அதோடு தமிழின் தற்கால இலக்கியத்துக்கு வளம் சேர்க்க பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
• இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்..
“9ஆம் வகுப்பு படிக்கும்போதே ‘மாணவர் குரல்’ என்ற இதழில் முதல் சிறுகதையை எழுதினேன். அது பரிசும் பெற்றது. அந்த ஊக்குவிப்பின் காரணமாகத் தொடர்ந்து எழுதி 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 75க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 2 பயண நூல்கள் எழுதியுள்ளேன். கல்கி இதழில் நா. பார்த்தசாரதி ‘பச்சைக்குழந்தை’ எனும் சிறுகதை எழுதினார். அதைப் படித்துவிட்டு நான் ‘வாழ்வே வேடந்தான்’ எனும் சிறுகதையை எழுதி நா. பார்த்தசாரதிக்கு அனுப்பிவைத்தேன். அவர் அதைப் படித்துப் பாராட்டிவிட்டு அதனை அவராகவே கல்கியில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தார். அதுமல்லாமல், நான் எழுதிய சிறுகதையைப் பற்றிப் பாராட்டி ஒரு கடிதமும் எழுதினார் நா.பா. அவர் குணம் யாருக்கு வரும். அவரின் ஊக்குவிப்பே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. அதுவே எனக்கு வளரும் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்து அறிமுகப்படுத்தும் எண்ணம் ஏற்பட்டது.
நான் எழுதிய முதல் கதை விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமாகியது. அதேபோல் ‘கண்ணன்’ சிறுவர் இதழ் நடத்திய நாவல் போட்டியில் நான் எழுதிய ‘பொன்மனம்’ எனும் சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. ‘கல்கி’ நினைவு நாவல் போட்டியில் நான் எழுதிய ‘விதியின் கை’ முதல் பரிசைப் பெற்றது.” என்றவர் சற்று நிறுத்தினார்.
14 வயதில் இலக்கியப் பணியைத் தொடங்கிய ‘இலக்கிய வீதி’யின் அமைப்பாளராக இருக்கும் இவர், சென்னை ‘கம்பன் கழகத்தின்’ செயலாளராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும், உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிவருகிறார்.
இவரது சொந்த ஊரான விநாயகநல்லூருக்கு அருகில் அமைந்திருக்கும் உலகில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கலைப் பற்றியும் அங்கு வரும் பறவைகளைப் பற்றியும் இவர் எழுதிய ‘வேடந்தாங்கல்’ எனும் நூல் சுற்றுலாப் பயணிகளுக்குப் பயனளிக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. அதேபோல் ‘உத்திரமேரூர் உலா’ என்ற இவரது பயண நூலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.
இவர் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக்கொண்டு இளம் எழுத்தாளர்களை வளர்த்தெடுப்பதில் கவனத் தைத் திருப்பினார். பலர் படைப்பாளராக இருப்பவர்கள் செயல்வீரர்களாக இருப்பதில்லை. ஆனால் இனியவன் சிறந்த எழுத்தாளராகவும் இருந்துகொண்டு ‘இலக்கிய வீதி’ எனும் அமைப்பின்மூலம் பல இலக்கியப் பணிகளைச் செய்து வருகிறார்.
• இலக்கிய வீதியின் பணி பற்றிக் கூறுங்கள் :
“10-7-1977ஆம் ஆண்டு உருவாக்கிய இலக்கிய வீதியின் சின்னம் அன்னம். நீரிலிருந்து பாலைப் பிரிப்பதுபோல் சமுதாயத்தில் நல்ல, திறமையானவர்களைக் கண்டெடுத்து ஊக்கப்படுத்தி இலக்கிய உலகில் உலாவரச் செய்வதுதான் இதன் விளக்கம். மொழி, இலக்கியம், கலை, பண்பாடு - இவை இலக்கிய வீதியின் நான்குவழித் தடங்கள். வீடுதோறும் தமிழின் வெளிச்சம், வீதிதோறும் தமிழின் வெளிச்சம் - இது இலக்கிய வீதியின் இலட்சிய முழக்கம். உலக வீதிகளில் தமிழை உலாவச் செய்வது, திருக்குறள் நெறியைத் திசையெங்கும் பரப்புவது, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது, புதிய படைப்புகளை நூல்களாக வெளியிடுவது, பல மொழி இலக்கியங்களுக்குப் பாலம் அமைப்பது, அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் தருவது, பழந்தமிழ்க் கலைகள், பண்பாட்டைப் பராமரிப்பது - இலக்கிய வீதியின் நோக்கங்கள்.
இந்தச் சீரிய பணிகளை ஏற்று கடந்த 33 ஆண்டுகளில் வியக்கத்தக்க சாதனை மைல்கற்களை இலக்கிய வீதி எட்டியிருக்கிறது. இலக்கிய வீதி தனது அகவையால் தற்பொழுது 34ஆம் ஆண்டில் வெற்றி நடைபோடுகிறது. ஒவ்வொரு மாதமும் இலக்கிய வீதியின் உலா நடக்கிறது. தமிழகத்தின் தொன்மைச் சிறப்புமிக்க பதின்கவனகக் கலை, தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை இன்னபிறவற்றை உன்னதமாகப் போற்றி வளர்ப்பதில் இலக்கிய வீதி முன்னின்று முனைப்புடன் செயல்படுகிறது.” என்று கூறிப் பெருமிதமாக யோசித்தார்.
• தங்கள் அமைப்பின் மூலம் வெளிச்சமிட்டவர்களைப் பற்றி...
திருக்குறள் தசாவதாணி கோவில்பட்டி இராமையாவின் நினைவாற்றல் கலையைத் தமிழுலகிற்கு முழுமையாக அடையாளம் காட்டி, அவர் அரசுக் கலைஞராக உதவியது இலக்கிவீதி. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் வாயிலாகப் பதின்கவனக் கலையின் புகழ்பரவ இலக்கியவீதி வழிவகுத்தது. அதேபோல் திருக்குறள் இராமையாவின் மகன் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினத்தை அரங்கேற்றி அவரது பன்முகத் திறன்களை இலக்கியவீதி பறைசாற்றியது.
இலக்கிய வீதியில் பாராட்டுப்பெற்றவர்கள் 161 பேர்கள். அறிமுகப்படுத்தப்பவர்கள் 112 சிறுகதை எழுத்தாளர்கள், 127 கவிஞர்கள், 73 திறனாய்வாளர்கள், 5 ஓவியர்கள். அதேபோல் திறனாய்வு பெற்ற நூல்கள் 224 ஆகும்.
• அமைப்பின் செயல்பாடுகள் பற்றி...
நாடகக்கலை, இசைக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை, தொழிற்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை அழைத்துப் பாராட்டுகிறோம். தொடர்ந்து சுழற்கூட்டங்கள் நடத்துகிறோம். செங்கை மாவட்டத்துச் சிற்றூர்களிலும் நகரங்களிலும், கோவை, தஞ்சை, சென்னை முதலிய வெளிமாவட்டங்களிலும், புதுவை, கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், இந்தியத் தலைநகர் புதுதில்லியிலும், அந்தமான் தீவுகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலும் சுழற்கூட்டங்கள் நடத்தினோம்.
இலக்கிய வீதியினர் 55 பேர் புதுதில்லிக்குச் சென்று நடத்திய ‘தலைநகர் உலா’ வரலாற்றுப் புகழ்பெற்றது. அதேபோல் அந்தமான் பகுதியில் உள்ள குறிப்பிடத் தகுந்த 11 பெரிய தீவுகளிலும் உலா நடத்தினோம்.
பள்ளிக் குழந்தைகளுக்கு, சின்ன அரும்புகளுக்குச் சிந்தனை மேடையமைத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிகிறோம். பள்ளி மாணவர்களைக்கொண்டே குழந்தை இலக்கிய நூலைத் திறனாய்வு செய்ய வைத்திருக்கிறோம். கல்லூரி மாணவர்களின் ஆற்றல்களை, கவிக்குரல் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டிகள் மூலமாக வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறோம்.
மகளிருக்குத் தலைமை, சிறப்பிடம் அளிப்பதோடு முழுக்க முழுக்க மகளிர் மட்டும் பங்கேற்றும் உலாவை நடத்துகிறோம். அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் இலக்கியவீதி பரிசுகள் வழங்குகிறது. புலம்பாக்கம் முத்துமல்லா அறக்கட்டளை வழங்கும் சிறுகதைப் பரிசு, கலாசேகர் அறக்கட்டளை வழங்கும் திறனாய்வுப் பரிசு, அமெரிக்கத் தமிழர் இராமானுஜம் அறக்கட்டளை வழங்கும் கண்ணதாசன் நினைவு கவிதைப் பரிசு மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் நினைவு இசைப் பரிசு ஆகியன இலக்கிய வீதி வழங்கிச் சிறப்பிக்கிறது.” என்றவர் பெருமூச்செறிந் தார்.
70 வயதைக் கடந்தாலும் இன்றும் ஒரு இளைஞருக்கே உரிய புத்தெழிலோடு செயல்படுகிறார். தமிழ் என்றதும் நிமிர்ந்து நிற்கிறார். தமிழ்த்தொண்டு என்றால் ஓடோடிச் செயல்படுகிறார்.
சுடடெரிக்கும் எழுகதிரின் தகப்பினூடே இலக்கியச் சோலையின் நிழலில் இளைப்பாறிய இதம் அய்யா இனிவனின் பகிர்வு இருந்தது. அவரிடம் ‘100ஆம் ஆண்டு சாதனை நிகழ்வில் சந்திப்போம்’ என்று கூறி விடைபெற்றோம்.

கட்டுரை : தமிழ்வேல்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue