சீனத்து இலக்கியப் பட்டு

First Published : 01 Mar 2012 09:37:39 AM IST


ஸ்ரீதரன்மதுசூதனன்
சீன மொழியின் மிகப் பழைய பாடல் தொகுப்பை அந்த மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு, அதன் மண் வாசனையும், தொன்மையும் குலையாமல் மொழியாக்கியுள்ளார் இந்திய வெளியுறவு அதிகாரி ஸ்ரீதரன். "வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை' என்பது நூலின் தலைப்பு. பிற மொழிபெயர்ப்பைப் போல் அல்லாமல், இந்நூலைத் தமிழில் கொண்டுவருவதற்கு ஓர் இலக்கியப் பயணமே மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீதரன். "பயணி' என்ற புனை பெயரில் இந்நூலை தமிழுக்குத் தந்திருக்கிறார். பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் "கலைச் செல்வங்கள் யாவும்' பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இன்றளவு சீனாவின் முதல் நூல் என்று கருதப்படுவது "ஷிழ் சிங்' (கிட்டத்தட்ட சீன மொழியின் உச்சரிப்புக்கு இதுவே உகந்தது). இதைத்தான் சீன மொழியிலிருந்து, அதன் பண்பாட்டுப் பின்னணியில், களப் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொண்டு, அந்த மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார் "பயணி'. இவரது இயற் பெயர் ஸ்ரீதரன் மதுசூதனன். சென்னையில் பிறந்து, சென்னையில் படித்து பத்திரிகைப் பணியில் நாட்டம் கொண்டு எழுத்தாளராக, நாடகக் கலைஞராக பன்முகத்தன்மை கொண்ட ஸ்ரீதரன் மதுசூதனன், வெளியுறவுத் துறையில் இருந்தாலும் உலக நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மனைவி வைதேகி, கல்வியாளராகப் பள்ளியில் ஆசிரியப் பணி செய்து வருகிறார். மகன் அபி அமெரிக்காவில் இசை பயின்று வருகிறார். மகள் கீர்த்தனா 7வது வகுப்பு மாணவி. இந்திய அயலுறவுப் பணியாளரான இவர் சீனாவில் 1998ம் ஆண்டிலிருந்து பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்த நூலைப் பற்றியும், அதை வடிவாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீதரன்: ""இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியாகப் பொறுப்பேற்ற எனக்கு பெய்ஜிங்கிலும், ஹாங்காங்கிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் முறையாக சீன மொழியைக் கற்றுக் கொண்டேன். தமிழுக்குத் தொல்காப்பியம் என்று சொல்வதைப் போல் இன்று கிடைத்துள்ள பண்டைய சீன நூல் இது. இன்னும் சொல்லப் போனால், சீனாவின் இலக்கிய வரலாறே இந்த நூலில்தான் தொடங்குகிறது. இதில் "ஷிழ்' என்ற சொல்லுக்கு கவிதை அல்லது பாடல் என்று பொருள். "சிங்' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றில் தொகுப்பு, செவ்விலக்கியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எனவே, புறநானூறு, அகநானூறு, கலித் தொகை என்பதைப் போன்று இதை "கவித் தொகை' என்று அழைக்கலாம். உண்மையில் இந்நூலின் கவிதைத் தொகுப்பு கிடைக்கப் பெறவில்லை. மாறாக கவிதைகளுடன் விளக்கங்களாகக் கிடைத்தவற்றைத் தொகுத்து, அவற்றிலிருந்து கவிதைகளைத் தொகுத்த வடிவம்தான் இது. எல்லாவற்றையும் விட தமிழின் சங்க இலக்கியத்துக்கும் சீன "ஷிழ் சிங்'குக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. சங்கப் பாடல்கள் எப்போது எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன என்பதற்குச் சரியானஆதாரம் கிடைக்கவில்லை. அதைப் போலவே "ஷிழ் சிங்' கவிதைகளும் எப்போது எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன என்பது தெரியாது. "ஷிழ் சிங்' பாடல்களின் காலமும் கி.மு. 1000 என்று கூறுகிறார்கள். சங்க இலக்கியத்தில் திணை, துறை இருப்பது சிறப்பு. இன்ன பின்னணியில், இன்னச் சூழலில், இன்ன கால நேரத்தில், இந்த வகையான உணர்ச்சி வெளிப்பாடு கவிதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் முழுமையாக இல்லாவிட்டாலும் கவித் தொகையின் பாடல்களில் ஒருவித வரைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். மொழி பெயர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இரு வேறு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்பது சரியே அல்ல. நான் சீன மொழியைக் கற்றிருந்தாலும், அதில் விற்பன்னனாக இல்லை. காரணம், சீன மொழியைக் கற்றுவிட்டு, பிற சூழலுக்கு மாறும்போது, கற்ற மொழி எளிதில் ஆவியாகிவிடும். மீண்டும் அந்த மொழியை ஆள வேண்டுமானால், அந்த மண்ணுக்குள்தான் புக வேண்டும். இந்த மொழி பெயர்ப்பு தனி ஒரு நபரால் உருவானதே அல்ல. ஒரு குழு சிந்தாமல், சிதறாமல் கவனத்துடன் செய்த நேர்த்தியான பணி. எனக்கு இதில் உதவியவர்களில் முதல் நபர் பீகிங் பல்கலைக்கழக சீனத் துறைத் தலைவர் ட்ச்சீ யோங்ஷ்ஸியாங். ஒவ்வொரு பாடலாக எடுத்துக்கொண்டு நிதானமாக சொல்லிக் கொடுத்தார் அவர். அதையடுத்து என் ஆசிரியை ட்சாங் யீங்ஹுவா. அயலுறவுப் பணியில் இருப்போர் வெளிநாட்டு மொழிகளைக் கற்றிருக்க வேண்டும். எனவே, சீன மொழியை நான் தேர்ந்தெடுத்தேன். அதனால், சீனாவில் பணியாற்றினேன். அப்போது, கட்டாயம் அந்நாட்டிலேயே அந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே எனக்குப் பலமும் ஊட்டியது. மொழிபெயர்ப்புக்காக தனிக் குழுவையே என் வீட்டில் உருவாக்கியிருந்தேன். சீன வானொலியில் தமிழ் படித்த சீனர்கள் உதவினர். தமிழ் படிக்கும்போது அரவிந்தன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்ட ட்ஷிழ்ஹுவா, திலகவதி என அழைக்கப்படும் ஹான் ச்சொங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என் மனைவி வைதேகியும் துணை புரிந்தார். கவித்தொகை சீனாவின் சமூகத்தை, மதத்தை, அரசியல், வாழ்வியல் ஆகியவற்றை ஊடுருவியிருக்கிறது. சரியாகச் சொல்லப் போனால், சீன இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்ல, சீன சமூகம், வரலாற்றுச்சூழல் ஆகியவற்றையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். கன்ஃபூஷியஸ் இந்த நூலை அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது மட்டுமல்ல, "இப்பாடல்களைப் படிக்காமல் இருப்பது எதையும் பார்க்காமல் சுவரின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருப்பதுபோன்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்கள் என 305 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன'' என்று கவித்தொகையைப் பற்றிய அறிமுகத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட "பயணி'யிடம், நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்: இந்த நூலை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? சீனாவில் பணியில் இருந்தபோது, 2002ம் ஆண்டு ஹாங்காங்கில் சீன மொழி - ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதினேன். இதுதான் எனது முதல் நூல் என்பது மட்டுமின்றி, சீன மொழி குறித்து தமிழில் உருவான முழுமையான நூல் எனலாம். இந்நூல், ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தில் அப்போது இருந்த இந்திய துணை தூதரகத் தலைவரால் வெளியிடப்பட்டது. தமிழைப் போல் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி, தமிழ்ப் பண்பாட்டைப் போல் தொன்மையும் சிறப்பும் கொண்ட சீனத்தைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்; அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற தணியாத தாகமே இந்நூல் உருவானதற்கு முதல் காரணம். பண்டைய தமிழர்கள் கிரேக்கம், ரோமாபுரி, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிக அரசியல் உறவுகளை வளர்த்து வந்துள்ளனர். ஆனால், பிற மொழி இலக்கியம் தமிழுக்கு வரவில்லை. அதைப் போல் தமிழ் மொழி இலக்கியமும் அந்த மொழிகளில் சேரவில்லை. ஆனால், வடமொழி நூல்களை மட்டும் தமிழில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. சீனத்திலிருந்து மொழி பெயர்த்தது போல், தமிழின் உன்னத இலக்கியங்களை சீனத்துக்கு கொண்டு செல்லும் எண்ணம் உண்டா? அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. சீனத்தைக் கற்றுத் தேர்ந்தாலும், தமிழ்மொழி மீது நமக்கு ஆளுமை அதிகம்தான். மொழியாக்கம் செய்யும்போது, இரு மொழிகளிலும் போதிய அளவு ஆளுமைத் திறன் இருக்கவேண்டும். அப்போதுதான், தமிழிலிருந்து இதர மொழிக்குக் கொண்டு செல்வது எளிதாக அமையும். உங்கள் எதிர்காலத் திட்டம்? தமிழில் உள்ள இலக்கியம், இலக்கியம் சார்ந்த படைப்புகள், தகவல்கள், ஆகியவற்றை உலக அளவில் அறிந்து கொள்வதற்காக தகவல் தொகுப்பு (இன்ஃபர்மேஷன் பூல்) கொண்ட இணைய தளத்தை உருவாக்கவேண்டும் என்பது நோக்கம். அதற்காக தேர்ந்தவர்களை அடையாளம் கண்டு வருகிறேன். தமிழ் இலக்கியப் படைப்புகளை அப்படியே பதிவேற்றம் செய்யலாம். ஒருவேளை "காப்புரிமை' இருந்தால், அந்நூல் பற்றிய விவரத்தைத் தெரிவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரியைக் கொடுத்து, அதில் சொடுக்கினால், முழு நூலுக்குள்ளும் செல்லும் வகையில் பதிவு செய்யலாம். இப்படி பல யோசனைகள் இருக்கின்றன.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்து: 
அருமையான தகவல்கள் அடங்கிய செவ்வி. என் வலைப்பூவில் பதிந்து சில குழுக்களுக்கும் அனுப்பும் ஆர்வத்தில் இருந்த எனக்குத் தினமணி இன்றுதான் மின்பதிப்பில் தருவது வருத்தமாக உள்ளது. இன்னும் சுறுசுறுப்பாகத் தினமணி செயல்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
நன்றி : தினமணி ஞாயிறு  கொண்டாட்டம் 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue