இல்வாழ்க்கை – [6-10] குறள் விளக்கம்

இல்வாழ்க்கை – [6-10] குறள் விளக்கம்

பேராசிரியர் சி.இலக்குவனார்
பதிவு செய்த நாள் : 10/11/2011


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?                                   (46)

அறத்து ஆற்றின்=அறவழியில், இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, ஆற்றின்=செலுத்தினால், (எல்லா இன்பங்களையும் எய்துதல் கூடும்.) புறத்து ஆற்றில்=அறத்திற்குப் புறம்பாகிய தீயநெறியில், போஓய்=சென்று, பெறுவது எவன்=அடைவது என்ன?

இல்லற வாழ்க்கையை அறநெறியில் செலுத்தினால் நல்லின்பங்களை நன்கே பெறலாம். சிலர் அங்ஙனமின்றி அறநெறியினின்றும் விலகி மறநெறியில் வாழத் தலைப் படுகின்றனர். இஃது, அறநெறியில் செல்வதினும் தீய நெறியில் செல்லுதலை எளிதாகக் கருதுவதனால் உண்டாகும் விளைவாகும். ஆனால், அறத்திற்குப் புறம்பான நெறியில் எதனையும் எய்திவிட முடியாது. எய்துவதுபோல் தோன்றினும் பின்னர் நிலைத்து நில்லாது துன்பத்திடையே கொண்டு செலுத்தும். ஆதலின், அறநெறியில் வாழ்வதே பயனுடைத்து என அறிதல் வேண்டும்.

புறத்தாறு=இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் போஒய்ப் பெறுவது எவன் என்றார்- இங்ஙனம் பரிமேலழகர் கூறுகின்றார். அவர் கூற்றுப்படி துறவறத்தினும் இல்லறமே பயனுடைத்து என்பதாகும்.

பரிதியாரும், கவிராச பண்டிதரும் புறத்தாறு என்பதற்குப் பாவத்தின் வழி என்று பொருள் கூறுகின்றனர்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை                        (47)

இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, இயல்பினான்= அதற்குரிய இயல்பு முறைப்படி, வாழ்பவன் என்பான்= வாழ்கின்றவன் என்று சொல்லப் படுபவன், முயல்வாருள் எல்லாம்=இன்பங்களை அடைவதற்கு முயல்கின்றவர் அனைவருள்ளும், தலை= முதன்மை யாகக் கருதி மதிக்கப் படுபவன் ஆவான்.

இன்பங்களை அடைவதற்கு, இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்களைவிட இல்லற நெறியில் வாழ்கின்றவரே உயர்ந்தவர்- தமக்கும் பிறர்க்கும் பயன்படுகின்ற வகையில் இயற்கை யோடிசைந்து வாழ்ந்து இன்ப நலன்களைத் துய்ப்பவர் – என்பது அறியற்பாலது.

முயல்வார்=முற்றத் துறந்தவர் விட்டமையின் முயல்வார் என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை என்பர் பரிமேலழகர். மூன்றாம் நிலை என்பது மனைவியுடன் காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யும் நிலையாகும். இது தமிழர் வாழ்வியல் நெறிக்குப் பொருந்தாது. தமிழர் நால்வகை நிலைகளை ஏற்றுக் கொண்டாரிலர். பிரமச்சரியம், கிரகத்தம், வானப்ரத்தம், சந்நியாசம் என்னும் நால்வகை நிலையும் வடவர்க்கே உரியன. ஆதலின், முயல்வார் என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை என்பது பொருந்தாது.

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து                         (48)

ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத,இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மையுடைத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.

இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத் துறவுநிலை மேற்கொண்டுள்ளவர் பெரியவரா? என்ற கேள்வி எழுமேல், இல்லற நெறியில் வாழ்கின்றவரே பெரியவர் என்பது தெற்றென விளங்கும். இல்லற நெறியில் வாழ்கின்றவர் தாமும் அறநெறியில் ஒழுகிப் பிறரையும் அங்ஙனம் அறநெறியில் ஒழுகத் துணைபுரிகின்றார். உணவு, உறைவிடம் முதலியன பெறுவதற்கு இல்லறத்தாரின் துணை துறவறத்தார்க்கு வேண்டற்பாலது. இல்லறத்தாரின்றித் துறவறத்தார் வாழ இயலாது. ஆதலின், இல்லற வாழ்வே துறவற வாழ்வினும் பொறுப்பும் கடமையும் சிறப்பும் மிக்கதாகும்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று                          (49)

அறன்=அறநெறி, எனப்பட்டதே=என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டதே, இல்வாழ்க்கை=இல்லற  வாழ்க்கை நெறியாகும், அஃதும்=அவ்வில்லற வாழ்க்கை நெறியும், பிறன் பழிப்பது இல்லாயின்=பிறனால் பழிக்கப்படுவது இல்லையானால், நன்று=மிகப் பெருமையுடையதாகும்.

வசையொழிய வாழ்வதே வாழ்க்கையாகும் என்பது வள்ளுவர் கருத்து (திருக்குறள் 240). ஆதலின் இல்லற வாழ்வு பிறனால் பழிக்கப்படாமலிருத்தல் வேண்டும் என்றார். நன்று என்பதன் பொருள் பெரிது என்பதாகும். நன்று பெரிதாகும் என்பது தொல்காப்பிய நூற்பா. ஆகவே, அறநெறி வாழ்வு எனப்படும் இல்லற வாழ்வு பிறனாலும் பழிக்கப்படாமல்  இருக்குமாயின் மிகப் பெரிதாகும் என வள்ளுவர் பெருமான் அறிவுறுத்துகின்றார் என்று கருதுதல் வேண்டும்.

அஃதும் என்பதனைத் துறவறத்தைச் சுட்டுவதாகப் பொருள் கொண்டு, துறவறம் பிறரால் பழிக்கப் படுவது இல்லையாயின் இல் வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று எனப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். சுட்டுச்சொல் ஒரு தொடரில் வரும் (தோன்றியும் தோன்றாமலும்) பெயரையே சுட்டி நிற்பது இயல்பு. ஆதலின் அஃதும் என்னும் சுட்டு அறன் என்பதனையே சுட்டுவதாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து. அஃதும் என்பதில் உள்ள உம்மை சிறப்பும்மையாகும். பட்டதே என்பதில் உள்ள , தேற்றப் பொருளில் வந்ததாகும்.

பரிமேலழகர் காலத்தில் துறவறம் மக்களால் போற்றப்பட்டு வந்திருத்தல் வேண்டும். துறவற நிலையினை மேற்கொண்டோர் பலர் கூடா ஒழுக்கம் உடையோராய் மக்களை வஞ்சித்து வாழ்ந்திருத்தல் வேண்டும். ஆதலின் இல்லறத்தினும் துறவறம் தாழ்வுடைத்து என்ற கருத்தினைப் பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளார் எனத் தெரிகின்றது.

துறவறம் மேற்கொள்வது இல்லறத்தார்க்குத் தொண்டு செய்யவே. ஆதலின், உண்மைத் துறவு நிலை உயர்ந்தோரால் போற்றத்தக்கதே. இல்லறத்துக்குத் துணையாய் உள்ள துறவறத்தை இல்லறத்தோடு ஒப்பிட்டுக் காணுதல் முறையன்று. துறவறத்தார் மேற்கொண்டுள்ள தொண்டின் மேன்மையால் இல்லறத்தாரால் நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்ததும் வருவதும் உலகம் அறிந்ததே. அதனால் இல்லறம் துறவறத்தினும் தாழ்வுடைத்து என்று கருதுதல் பொருந்தாது. துறவறத்தினும் இல்லறமே ஏற்றமுடைத்து என்ற பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளது பாராட்டத்தக்கது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                        (50)

வையத்துள்=உலகில், வாழ்வாங்கு=வாழும் நெறி முறைப்படி, வாழ்பவன்=வாழ்கின்றவன், வானுறையும்=  வானுலகில் வாழும், தெய்வத்துள்=கடவுளுடன் வைக்கப்படும்=ஒப்பிட்டு மதிக்கப் படுவான்.

மாந்தன் நிலையைவிட உயர்ந்த நிலை கடவுள் நிலையாகும். மாந்தன் நிலை குற்றம் செய்வதற்கு  இடம் உடையது. கடவுள் நிலை குற்றங்கட்கு அப்பாற்பட்டது. குற்றமற்ற நிலையே கடவுள் நிலையாகும்.

மக்கள் குற்றமற்றவர்களாக வாழவேண்டும். அப்பொழுதுதான் இவ்வுலகம் துன்பங்களினின்று விடுதலை பெற இயலும். கசடறக் கற்று, கற்ற வழியில் மக்கள் ஒழுகினால் குற்றங்களுக்கு இங்கு இடமில்லை. குற்றமற்று வாழ வேண்டுமென்பது, மக்கள் வாழ்க்கைக்கு இயலாது என்று சிலர் கருதிவிடுகின்றனர்; கடவுள் பிறப்பினர்க்குத்தான் குற்றமற்று வாழ முடியும் என்று கூறித் தம் குற்றங்களுக்கு அமைதி தேடுகின்றனர். வள்ளுவர் பெருமானுக்கு இக் கருத்து உடம்பாடன்று. மாந்தனும் கடவுளாகலாம். எப்பொழுது? உலகில் வாழும் அறநெறிப்படி வாழ்ந்தால். ஆகவே, ஒவ்வொருவரும் இல்லறம் ஏற்று வாழும் அறமுறைப்படி வாழுங்கள் அவ்வாறு வாழுகின்றவன் இவ்வுலகில் இருப்பவனே யாயினும் வானுலகில் உறைவதாகக் கூறப்படும் கடவுளாகவே கருதப்படுவான். இல்லற நெறியே  இனிய கடவுள் நிலைக்கு மக்களை இட்டுச் செல்லும்.
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue