மறைமலையடிகளார் மாண்பு!

மறைமலையடிகளார் மாண்பு!
- மா.க ஈழவேந்தன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கை
நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப்பேராளர்
னித்தமிழ் இயங்கங் கண்ட தந்தை மறைமலை அடிகள்... தமிழக மண்ணில் 15-07-1876; விண்ணில் - 15-09-1950.
     
15-09-1909ல் அறிஞர் அண்ணா தோன்றினார். 15-09-1950ல் மறைமலை அடிகள் மறைந்தார்.  இவ்விரு பெருமக்களின் தோற்றமும் மறைவும் செப்டம்பர் 15ல் நடைபெற்றுள்ளதால் இந்நாள் பெருமை பெற்ற நாளாக விளங்குகின்றது. எனவே மறைந்தமலை அடிகளைப்பற்றி இதே நாளில் பிறந்த அறிஞர் அண்ணா கூறுவதை முதலில் நினைத்துப்பார்த்து மகிழ்வு கூறுவோமாக:
அறிஞர் அண்ணா வாழ்த்தும் மறைமலை அடிகள்
"மறைமலைஅடிகளாரின் மாண்பினை எண்ணும்தோறும் வியக்கத்தக்க மாண்பினை அவரோடு நெருங்கிப்பழகிய பலரும் எடுத்துரைத்திருக்கின்றார்கள். நான் அவரோடு அதிகம் நெருங்கிப் பழகியவன் அல்ல. அவரோடு எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பெல்லாம் இந்நாட்டில் முதலில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் மறைமலையடிகளாரது புலமை, இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்தில் ஈடுபட்ட எங்களுக்கெல்லாம் பெரும் அரணாக அமைந்திருந்தது. இந்தி, தமிழகத்துக்குத் தேவைதானா? அது தமிழகத்துக்கு பொது மொழியாகத்தான் வேண்டுமா? அப்படி பொது மொழியானாற் தமிழுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை எல்லாம் மறைமலையடிகளார் ஏடுகளின் வாயிலாக எடுத்துக் காட்டி வந்தார்கள்.
இதைப்போல், அவர் மேற்கொண்டிருந்த பல்வேறு முயற்சிகள் இன்று காலத்தால் கனிந்து வருகின்றன. மறைமலையடிகளுக்குப் பெற்றோரிட்ட பெயர் சுவாமி வேதாசலம். அதனை அவர் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்ட போது, பலருக்கு ஐயப்பாடு. சிலர், இது என்ன, 'புதியதோர் புலி' என்று கேட்டனர்.
ஆனால். மறைமலையடிகளோ தமிழனுக்கு எனத் தனிமொழி உண்டு என்பதை நிலைநாட்டுவதில் மிக அக்கறை காட்டினார். இப்பண்பும் மொழியும் காப்பாற்றபடாவிடின் நாளாவட்டத்திற் தமிழர்கள் இப்பண்பையும் மொழியையும் மறந்து தங்களுக்கென உள்ள சீரிய தன்மையை இழந்துவிடுவர். உலகில் இன்றுள்ள வாழ்வு இழந்த இனத்தாரோடு தமிழரும் சேர்க்கப்பட்டு விடுவர். எனவே, தமிழர்கள் தங்கள் மொழியையும், பண்பையும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக மறைமலையடிகள், 'தனித்தமிழ் இயக்கம்' என்ற பெயராற் சீரியதோர் முயற்சியை மேற்கொண்டார்.
இந்த இயக்கத்தை அவர் தோற்றுவித்த போது, 'இது வெற்றி பெறுமா' என்று சிலரும், 'இது வேண்டப்படுவது தானா' என்று வேறுசிலரும், இதனால் 'தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் என்ன பயன்' என மற்றும் சிலரும் வினவத் தொடங்கினார்கள்.
ஆனால் இன்று, "யார் நடத்துகின்ற ஏடானாலும், அதிற் தனித்தமிழ் நடை கையாளப்படுவதை நாம் காணுகிறோம்."
மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதற்கு அறிஞர் அண்ணா அளித்துள்ள இக்கூற்று, தலைசிறந்த சான்றாக அமைகிறது.
பாரதியும் மறைமலையடிகளும்!
பாட்டிற்கொரு புலவன் பாரதி, தன் பாட்டுத் திறத்தாற் பைந்தமிழை வாழ்வித்தமை நாம் மறுப்பதிற்கில்லை. அவருடைய நாட்டுப்பற்றும். அவர் கையாண்ட எளிய உணர்ச்சி மிக்க நடையும் காலத்தின் தேவையை நிறைவு செய்து தமிழ் மக்களைப் புதிய வழியில் இட்டுச் சென்றதை நம்மவர் ஏற்றேயாக வேண்டும். அதே வேளையில், தமிழ் மொழியிற் படிந்த எல்லை மீறிய பிறமொழி மாசினைக் களைந்து தமிழின் தூய்மையைப் பேணி, தமிழைத் தமிழாகவும், தமிழனைத் தமிழனாகவும் வாழ வைத்த பெருமை மறைமலை அடிகளாருக்கே உண்டு.
மொழியின் வாழ்வோடுதான் ஓர் இனத்தின் வாழ்வு இணைக்கப்படுகின்றது.
மொழி ஒரு இனத்தின் விழி மட்டுமல்ல, மொழி அதனின் உயிராகும். ஒரு மொழி அழிகின்றபோது, அம்மொழியைப் பேசுகின்ற இனமும் அழிகின்றது. ஒரு தேசிய இனத்தின் உயிர்நாடி அதன் மொழியாகும்.  புரட்சிக் கவிஞன் பாரதிதாசன், 'தமிழுக்கும் அமுது என்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று அழகுபட ஆணித்தரமாக தமிழுக்கும், தமிழ் இனத்துக்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பைப் பீறிட்டு எழும் உணர்ச்சியுடன் மொழிந்துள்ளார்.
மறைமலையடிகள் ஏற்படுத்திய தாக்கம்!
மேற்கூறிய கூற்றுக்கள் அனைத்தையும் நாம் நினைவிற் கொள்ளும் போதுதான் மறைமலையடிகளாரின் மாண்பினை நாம் உணரும் நிலை ஏற்படுகின்றது. தமிழன் தன் மொழி எது, தன் பண்பாடு எது, தன் நாகரிகம் எது? தன் நெறி எது? தனது வாழ்வியல் முறை எது? என்று உணராது தத்தளித்துத் தன்நிலை மறந்திருந்த வேளையிற் தமிழனுக்குத் தன் இன உணர்வை, மொழி உணர்வை ஊட்டியவர் மறைமலையடிகளார்.
இன்று ஆட்சி மன்றங்களிலும், தமிழ் மன்றங்களிலும் நல்ல தமிழ், தூய தமிழ் அரசோச்சுகின்றது.  அதற்கு அடிகோலிய பெருமை, தானே தனி இயக்கமாக விளங்கி எதிர்ப்புகள் அனைத்தையும் துணிவுடன் தாங்கிய மறைமலையடிகளார் ஆற்றிய பணியின் விளைவே என்பதனை அவரின் கொள்கையுடன் மாறுபடுவோர் கூட ஏற்றேயாக வேண்டும். இன்று நல்ல தமிழில் எழுதாவிட்டால், நல் அறிஞர்களின் மதிப்பினையோ வாழ்த்தினையோ பெற முடியாததோடு தமிழ்ப்பொதுமக்களும் வரவேற்க மாட்டார்கள் என்ற நிலையும் இன்று உருவாகியுள்ளது இவை எல்லாம் மறைமலையடிகளாரின் இயக்கம் ஏற்படுத்திய தாக்கமேயாகும்.
தமிழன் தன் மீது நம்பிக்கை கொள்ளின்!
தனி ஒரு மானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புகளையெல்லாம் தூளாக்கி வெற்றி கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ்வெற்றியை ஈட்ட முடியுமெனிற் தமிழ் இனம் ஒருங்கிணைந்து, தன்னிலை உணர்ந்து, தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதி பூணில் எவரும் அதனைத்தடுக்க முடியாது. இன்று தமிழனை எதிர்நோக்கும் பெரும் அழிவுக்கு அடிப்படைக் காரணம் பிற நாட்டுப்படையெடுப்போ அல்லது பிற இனத்தின் ஆட்சியோ அல்ல. இவையனைத்திற்கும் மேலாகத் தமிழனுக்குத் தம்மீது நம்பிக்கையின்மையே இவ்வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
தமிழ் மன்றங்களில் இன்று தமிழ் தலைதூக்குவதற்கு யார் காரணம்?
இன்று தமிழ் மன்றங்களில் அக்கிராசர் அகற்றப்பட்டுள்ளார், அவைத் தலைவர் தலைமை தாங்குகின்றார். காரியதரிசியைக் காணவில்லை, செயலாளர் செம்மையோடு வீற்றிருக்கின்றார், பொக்கிஷாலர் புதைக்கப்பட்டுள்ளார், பொருளாளர் பொலிவோடு வீற்றிருக்கின்றார். போஷகர் போன இடம் தெரியாது, காப்பாளர் கனிவோடு வீற்றிருக்கின்றார், இவை மறைமலையடிகள் கண்ட தனித்தமிழ் இயக்கத்தின் வெற்றி என்பதனை யார் மறுக்க முடியும்?
கோயில்களில் தமிழ்...
தமிழன் கட்டிய கோயிலில் இன்று தமிழ் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

இன்று நாம் விரும்புகின்ற அளவுக்கு தமிழ் வழிபாடு தலைதூக்காவிடினும், தமிழ் வழிபாடு வேண்டும் என்ற இயக்கம் பல இடங்களில் வலியுறுத்தப்படுகின்றது. தமிழக க்கோவில்கள் சிலவற்றில் செந்தமிழ் வழிபாடு செம்மையுடன் நடைபெறுகின்றது.  கடவுளுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்ட தமிழின் இன்று கடவுளுக்குத் தமிழ் தெரியும் என்பதை உணர்ந்து தமிழில் கடவுளை வழிபடத் தொடங்கி விட்டான்.
"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்", என்று அப்பர் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பிய குரல் காலங்கடந்த நிலையில் தமிழர் நெஞ்சில் நிலைத்த பாடலாக விளங்குகின்றது. 
திருஞான சம்பந்தர், தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் தன்னைத் தமிழ் ஞான சம்பந்தன் எனவும் தமிழ் ஞானவிரயன் என்று ஏறக்குறைய ஐம்பது இடங்களில் தன்னைப் பற்றி வலியுறுத்தியதோடு ஐநூறு இடங்களில் தமிழின் பெருமை பேசுகின்றார்.
'எங்கே தமிழின் நீர்மை பேசப்படுகின்றதோ அங்கு இறைவனைக் காண்கிறேன்' என்கின்றார். திருஞானசம்பந்தரிடம் மறைமலையடிகளுக்கு தனி ஈடுபாடு உண்டு என்பதனை தமிழ் தென்றல் தெரிவிக்க பல இடங்களில் சொல்லிச் சென்ற செய்தி எம் சிந்தையை இனிக்க வைக்கின்றது.
எட்டாம் நூற்றாண்டில் நம்பி ஆருரனுக்கு இறைவன் இட்ட கட்டளை அர்ச்சனைப்பாட்டேயாகும். எனவே நம்மை மண்ணில்,  'சொற்றமிழ் பாடுக' என்பதேயாகும். ஆண்டவன் தம்பிபிரான் தோழனுக்கு அன்று இட்ட ஆணை ஆண்டுகள் பல உருண்டோடிய நிலையில் அரைகுறையாக தமிழ் வழிபாடு ஓரளவு தயக்கத்தோடு நிறைவேற்றப்படுகின்றது.
கடவுள் இட்ட கட்டளையே காலம் தாழ்த்தி உணர்பவன் தான் தமிழன். நாயன்மார்க்கு நயம்பட நவின்ற கூற்றுக்கு செவிமடுக்காத நிலை நிலவிய போது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வான் கலந்த மாணிக்க வாசகர் தன் தேன் கலந்த வாசகத்தில் "சொல்லிய பாட்டின் பொருள் உண்ர்ந்து சொல்லுக" என்று இடித்துரைப்பதையும் இங்கு நாம் நினைவுகொள்வோமாக.

இவற்றையெல்லாம் நினைவு கொண்டு போலும், "குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழி விழுமாறே" என்று திருமூலர் தன் திருமந்த்திரத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் கூறியதை நாம் நினைவு கொள்ள மறுக்கலாமா?
இவையனைத்தையும் செவி மடுத்த நிலையிலும் தமிழன் சிந்தனையில், விரும்பியமாற்றத்தைக் காணாத பாவேந்தன் பாரதி தாசன் கோயிற் படிக்கட்டின் கீழ் நின்று, 'தமிழ் மானத்தை வடிகட்டி, 'வடமொழியில் மந்திரம் என்று உகந்து போற்றும் தமிழனை 'மடையா" என்று ஆத்திரத்துக்கு உள்ளாகி பாவேந்தர் இடித்துரைத்துள்ள கூற்று நம் இதயத்தில் இடம்பெற வேண்டாமா?  எனவே தான் தோன்றியிருக்கும் தமிழ் ஈழத்தின் அரசவைக் கவிஞராக வீற்றிருக்கப் போகின்ற கவிஞர் காசியானந்தன் 'ஏ தமிழா! நீ செருப்பாக இருந்தது போதும் நீ நெருப்பாக மாறு' என்று கொதித்தெழுகிறார். சமயச்சான்றோரும் தமிழை வாழ்வித்த அறிஞர்களும் விடுத்த வேண்டுகோளையாவது நாம் நிறைவேற்ற முயல்வோமாக.
தமிழ் மணமக்களை தமிழில் வாழ்த்துவோம்; எம் அழுகுரலும் அருந்தமிழில் கேட்கட்டும்!
தமிழன் திருமணத்தில் பொருள் பொதிந்த முறையில் தமிழ் மணமக்களை தமிழில் வாழ்த்துவோமாக. எம் இறப்பு இல்லங்களிலும், எம் அழும் ஓசை அருந்தமிழில் கேட்கட்டும். சாகும் போதும் தமிழ் படித்து சாவோம். எம் சாம்பல் வேகும் போதும் தமிழ் மணந்து வேகட்டும். துயர் தோய்ந்த உள்ளத்தோடு நாம் விடுக்கின்ற வேண்டுகோளுக்கு தமிழினம் செவி மடுக்குமா?
மறந்தும் "டாடி", "மம்மி" என்ற சொற்கள் வாய்க்குள் புகாது தடுப்போம், அல்லாவிடில் தமிங்கிலம் தலைதூக்கிவிடும்.
நாம் பெற்ற குழந்தைகளை "அம்மா" என அழைக்க வைப்போம். எம் குழந்தைகளோடு பேசுகின்ற போது, "பேபி" என்றழைக்காது என் செல்லக்குழந்தையென்று செம்மாந்தழைப்போமாக. எங்கள் குழந்தைகளுக்கு நாம் சூட்டுகின்ற பெயர்கள், அன்பழகன், அறிவழகன், யாழினி, எழிலினி, என எங்கள் பிள்ளைகளின் பெயர்களில் தமிழ் மணம் கமழட்டும். சுரேஷ், நிரோஷன், டர்மினி, டக்‌ஷலா என்ற பெயர்களை தவிர்த்துக்கொள்வோம்.
எனவே ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக ஒவ்வொரு தமிழ் மாணவனும், மாணவியும் தன் மொழியிற் தனி ஆற்றலில் நம்பிக்கை வைத்துத் தனித்தியங்கவல்ல, அதனின் தன்மையில் உறுதிபூண்டு செயலாற்றின் வெற்றி நமதே. எம் அறிவின் பஞ்சத்தை எம் மொழியின் பஞ்சமாக ஆக்காது, காலத்தின் கருத்தோட்டத்திற்கேற்ப நம் மொழியைப் பல துறைகளிலும் வளமாக்க முயல்வது எமது தலையாய கடனாகும்.
ஆட்சியில் அமைதிகாண மொழியில் செம்மை வேண்டும்
மொழியிற் செம்மையிருப்பின் கருத்திற் தெளிவு பிறக்கும். கருத்துத் தெளிவோடு ஆட்சி அமையின் அவ்வாட்சியில் அமைதி நிலவும். எனவே செந்தமிழிற் செம்மை காண விழைந்த மறைமலையடிகளாரின் முயற்சி ஆட்சியிலும் அமைதி காண துணை நிற்கின்றதென்று எம்மனோர் துணிவு.
மறைமலையடிகளின் நூல்கள் ஆயிரம் மூளைகளை சிந்திக்கச் செய்யும்.
மறைமலையடிகளின் பணி, மொழியின் தூய்மை காப்பதோடு நிற்கவில்லை. அவர் பல்துறையிற் நூல்கள் பலவற்றை யாத்துள்ளதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.
அவரின் நூல்கள் ஆயிரம் மூளைகளைச் சிந்திக்கச் செய்யும் பத்து ஆயிரம் நாக்குகளைப்பேசச் செய்யும்; அத்தோடு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு ஆற்றல் மிக்க எழுத்தாளர்களை எழுதச் செய்யும். மறைமலையடிகளின் நூல்களை நுகர வேண்டிய முறையில் நுகர்வோர், இவ்வுண்மையை உணர்ந்தவர் ஆவர்.
மறைமலையடிகளாரின் மாண்பினை நாம் விரிக்கிற் பெருகும் எனவே விரிவு அஞ்சி நாம் சுருக்கிக்கூறின் மறைமலையடிகளார் மாண்பு வியக்கத்தக்கதே.
மறைமலையடிகளார் மறைந்த அறுபது ஆண்டை நினைவுகொள்வோம்!
*

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue