மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: கண்ணகியின் நம்பிக்கையும் குலச்செருக்கும்



கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்? அதற்கு என்னதான் ஆதாரம்?பண்டைக் காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது கொற்கை மாநகரம். அது துறைமுகமாகவும் விளங்கியது. பாண்டிய நாட்டின் செல்வத்துக்கும் சிறப்புக்கும் கொற்கையில் விளைந்த முத்துக்கள் ஒரு பெரும் காரணமாக விளங்கியது.÷சிலப்பதிகாரத்தில் முத்து பற்றி பல இடங்களில் பேசப் பட்டாலும், கொற்கை முத்தைப் பற்றிக் குறிப்பிடும் இடம் ஒன்றே ஒன்றுதான். மதுரை நகரில் காலை வேளையிலேயே பொது மகளிர், செல்வவளம் படைத்த தமது காதலர்களோடு (கடைகழிமகளிர் தம் காதல் அம் செல்வரோடு-ஊர்காண் காதை: வரி-70) வையை நதியில் படகோட்டிக் களித்துவிட்டு, நண்பகலில் அவர்கள் அலங்காரம் செய்து கொள்ளும்போது, கொற்கைத் துறையில் விளைந்த முத்துக்களாலான மாலையை அணிந்து (கொற்கையம் பெரும்துறை முத்தொடு பூண்டு - வரி 80) கொண்டனர் என்று கூறப்படுகிறது.தமிழ் நாட்டில் கொற்கைத் துறையில் குளித்தெழுந்த முத்துக்கள் உலகத்து எல்லாச் சந்தைகளையும் பார்த்திருக்கின்றன. ""பாரசீக வளைகுடா முத்தைவிட மன்னார் வளைகுடாவில் தோன்றும் முத்துக்களே வெண்மையும் ஒளியும் சற்று மிகுதியாக உள்ளன. ஆகவே இவை தரத்தில் உயர்ந்து அதிக விலை பெறுகின்றன'' என்று நவமணிகளைப் பற்றி நன்கு ஆய்ந்த வல்லுநர் டி.எஸ்.வைத்தியநாதன் (நவமணிகள்-பக்:81,82) குறிப்பிடுகிறார்.கொற்கையில் விளைந்த முத்துக்களுக்கு ரோமாபுரியில் அதன் செல்வத்தையே வற்ற வைக்கும் அளவுக்கு கிராக்கி இருந்து வந்தது. அதன் காரணமாக, கொற்கைத் துறையின் முத்தெடுப்பையும், முத்து வாணிபத்தையும் தமது ஏகபோகமாக்கிக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டில் விளையும் முத்துக்களை சோழ நாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் சோழ நாட்டு வணிகர்கள் கொற்கை முத்துக்களை வாங்கவோ, வாங்கி விற்கவோ முடியவில்லை. மேலை நாட்டவரும் விரும்பும் முத்துக்களை பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவி தன் காற் சிலம்பில் அணியாமலா இருந்திருப்பாள் என்பது கண்ணகியின் நம்பிக்கை.பாண்டியன் அவைக்கு வந்த கண்ணகி, ""நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!என் காற் சிலம்பு மணியுடை அரியே!'' (66,67) என்று கூறியதால், ""கொற்கையில் விளையும் முத்து உனது உடைமையாக இருக்கும் செருக்கினால் தானே, நீ கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய்?'' என்று இடித்துக் கூறுகிற பாவனையில் அவளது சொற்கள் ஒலிக்கின்றன. அடுத்தாற்போல், தான் அவனை இடித்துரைத்ததற்கான காரணத்தையும் ""என் காற்பொற் சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் மாணிக்கங்கள் தெரியுமா உனக்கு?'' என்று கேட்பது போலக் கூறிவிடுகிறாள். அவள் அவ்வாறு கூறியதன் காரணம் யாது என்று ஆராய்ந்து பார்த்தால், முத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்க மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்ட சிலம்பு வணிகர் குலத்தினரான எங்களைத் தவிர அரசனான உன்னிடம் கூட இருக்க முடியாதே என்ற குலச் செருக்கோடு கூடிய மறைமுகமான குறிப்பும் தெரிய வரும்.கண்ணகி அவ்வாறு கூறியதும் பாண்டிய மன்னன்,""தேமொழி! உரைத்தது செவ்வை நல்மொழி!யாம் உடைச் சிலம்பு முத்துடை அரியே'' (69-70)என்று ஒப்புக்கொள்கிறான்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue