இந்த வாரம் கலாரசிகன்



கடந்த வாரம் எழுதும்போது, இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த கவிஞர் திருமலைராஜனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தொடர்பு விட்டுப்போய்விட்ட அந்த நண்பரைப் பற்றிய தகவலை அன்பர் அ. நீலகண்டன் மதுரையிலிருந்து தெரிவிக்கிறார்.மதுபோதைக்கு அடிமையாகி, தான் யார் என்பதையே மறந்துவிட்ட நிலையில், மதுபோதை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்படும் ஒரு அறக்கட்டளையின் தொழிற்பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாராம் திருமலைராஜன்."அவரிடம் நான் பேசினேன். பழைய நினைவுகள் ஏதும் அவரிடம் இல்லை. தான் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தது, கவிதைப் புத்தகங்கள் எழுதியது போன்ற விவரங்கள்கூட மற்றவர்கள் சொல்லித்தான் தனக்குத் தெரியும் என்றும், தனக்கு நினைவு இல்லை என்றும் தெரிவித்தார். அவர் எழுதிய இரண்டு கவிதைத் தொகுப்புகளான "பாலைவன ராத்திரிகள்' "ஒரு புயலின் ஆரம்பம்' ஆகியவற்றையும், திரையுலகம் பற்றிய "திரைக்கலை - சில சிந்தனைகள்' என்கிற புத்தகத்தையும் என்னிடம் தந்து, இவையெல்லாம் நான் எழுதியதாக உறவினர்களும் நண்பர்களும் தந்தவை என்றும் கூறினார்.தற்போது கையெழுத்துப் போடவே தடுமாறும் இவரா இவ்வளவு அருமையான படைப்புகளைப் படைத்துள்ளார் என்று ஆச்சரியமாக இருந்தது. கனவுத் தொழிற்சாலையில் தனது கனவுகளையும், வாழ்க்கையையும் தொலைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது புரிந்தது. தற்போது, திருமலைராஜன் நல்ல உடல் நலம் மற்றும் மனநிலையோடு புத்துயிர் பெற்று மதுரை அழகர்கோயில் அருகில் உள்ள சேவா நிலையத்தில் இருந்து வருகிறார். அவருக்குப் பழைய நினைவுகள் எதுவும் இல்லை' என்று எழுதியிருக்கிறார் அன்பர் நீலகண்டன்.அன்பு நண்பா! உனக்கு எங்களைப் பற்றிய நினைவுகள் அழிந்து போயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு உன்னுடன் அளவளாவி மகிழ்ந்த நாட்கள் பசுமையாகவே நினைவிருக்கின்றன.******மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்ல நூல்கள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மறுபதிப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும் ஓர் அற்புதமான நூல் "ஸ்ரீதிலகர் விசாரணை' அல்லது 1908-ம் வருஷத்துக் "கேசரி' "இராஜ நிந்தனைக் கேஸ்' என்கிற புத்தகம்.சுதந்திரப் போராட்டத்தின் வேகம் அதிகரித்து வந்த நேரம் அது. அன்றைய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் பாலகங்காதர திலகர். அவர் தனது "கேசரி' பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ராஜதுவேஷக் குற்றமுடைய கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணை மிகவும் பரபரப்பாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 1908 ஜூலை 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது.அந்த வழக்கு விசாரணையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் தானே மிகத் திறமையுடன் வாதிட்டார் லோகமான்ய திலகர். அவர் 21 மணி 10 நிமிடங்கள் தொடர்ந்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார். வழக்கு முடிவில் திலகருக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது."கேசரி' பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த திலகர் வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த "சுதேசமித்திரன்' துணை ஆசிரியர் தி.சி. வில்வபதி செட்டியார் தொகுத்து 1909-இல் ஒரு நூலாக வெளியிட்டார். அப்போது அந்த நூலின் விலை வெறும் 12 அணா. அதாவது, முக்கால் ரூபாய். இன்றைய கணக்கில் சொல்வதாக இருந்தால் 75 காசுகள்.தமிழ்நாட்டு ஆவணக் காப்பகத்தின் உதவியுடன் இந்த நூலை நல்லி குப்புசாமி செட்டியார் சார்பில் மறுபதிப்புச் செய்திருக்கிறார்கள் ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகத்தார். இந்தப் புத்தகத்தில் காணப்படும் திலகருடைய வாதங்கள் அவரைப் பற்றிய பிரமிப்பை மேலும் அதிகப்படுத்துகின்றன.திலகருக்குத் தண்டனை அளிப்பதற்கு முன்னால், "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?' என்று நீதிபதி தேவார் கேட்டபோது திலகர் அளித்த பதில் என்ன தெரியுமா?"எல்லாம் கடவுள் செயல். என் நாட்டார் படும் அவதிகளைக் கண்டு புண்ணாக வெந்து கதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் கண்மறைவாகக் கஷ்டப்பட்டுக் கொண்டாயினும் சிறையில் கிடப்பதே மேலாகும்.ஹிந்து - மகமதியர்கள் நீரும் நெருப்புமானாலும் இரண்டும் ஒன்றுகூடி எப்படி உலகத்தை ஒன்றுபடுத்தி வருகிறதோ, அவ்வாறே இவ்விரு வகையினரும் ஒன்றுகூடியேதான் இந்தியா உயர வேண்டும் என்பதை இன்னும் அறியாதிருப்பது மிக்க விசனகரமானதே!'திலகர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட மேலான ஒரு சான்று தேவையா?******கவிஞர் பாலாவின் மரணம் என்கிற அதிர்ச்சியில் இருந்து தமிழ் இலக்கிய உலகம் மீள இன்னும் பல காலம் ஆகும். அவர் நாடறிந்த நல்ல கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்பதற்கெல்லாம் மேலாக எல்லோருக்கும் நல்லவர் என்பதுதான் கவிஞர் பாலாவின் சிறப்பு.1946-இல் சிவகங்கையில் பிறந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்றவர் கவிஞர் பாலா. "மணிக்கொடி' எழுத்தாளர்களைப் போலவே "வானம்பாடி' கவிஞர்களும் தங்களுக்கென ஒரு தனித் தடம் பதித்தவர்கள். கோவையில் இருந்து வெளியான "வானம்பாடி' இதழ் தமிழகத்துக்கு அளித்த கொடை பல சமுதாய சிந்தனை உள்ள கவிஞர்கள். அந்த வரிசையில் இடம்பெற்றவர்களில் கவிஞர் பாலாவும் ஒருவர்."வானம்பாடி' பற்றிக் குறிப்பிடும்போது பாலா சொல்வார் - "தூய இலக்கியவாதிகளையும், மொழிவெறி, இனவெறிக் கும்பலையும் எதிர்த்து நிற்குமாறு காலச்சூழலால் நிர்பந்திக்கப்பட்ட ஓர் இளம் தலைமுறைக் கவிஞர் அணிதான் "வானம்பாடி' கவிதை இயக்கம்.முன்பே குறிப்பிட்டது போல பாலாவின் நட்பு வட்டம் மிகமிகப் பெரிது. பாலாவைப் பற்றி பளிச்சென்று சொல்வதாக இருந்தால், கவிஞர் மேத்தாவை துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது. அவர் பாலாவின் "திண்ணைகளும் வரவேற்பறைகளும்' கவிதைத் தொகுப்புக்குத் தந்திருக்கும் முன்னுரையில் குறிப்பிடுவார் - "பாலா - விமர்சகர்களில் ஒரு தராசு முள்! கவிஞர்களில் ஒரு நவகவிஞன்! மனிதர்களில் ஒரு மாமனிதன்! பாலாவின் நட்பை உணர முடியுமே தவிர உரைக்க முடியாது... பாலாவின் படைப்பைப் பாராட்ட முடியுமே தவிர எடைபோட இயலாது.'கடந்த மாதம் 22-ஆம் தேதி பாலா என்கிற கவிதை காற்றில் கலந்துவிட்டது. சற்றேறக்குறைய ஒரு வாரகாலம் பாலாவின் உடல் கண்ணாடிப் பேழையில் கண்களை மூடி நிரந்தரத் துயிலில் வைக்கப்பட்டிருந்தது. எதற்காக தெரியுமா? அழுது துடித்த நண்பர்கள் அனைவரும் வந்து இறுதியாகத் தரிசிப்பதற்காக!புதுக்கோட்டையில், பிறப்பால் அமைந்த உறவுகள், தம் உணர்வுகளை ஒடுக்கி பாலாவின் நண்பர்களுக்கு முக்கியத்துவம் தந்து பொறுத்திருந்தனர். 27-ஆம் தேதி இறுதியாக கவிஞர் பாலாவின் மேனியை எரியூட்டிவிட்டு, "எந்த ஒரு நண்பரும் வருத்தப்பட்டுவிடக் கூடாது. திடீர்னு பாலா காணாமல் போய் விட்டாரே என்று நினைத்து விடக்கூடாதே என்றுதான் இத்தனை நாள், இத்தனை மணி நேரம் அப்பாவைப் பாதுகாத்து வைத்திருந்தோம் - இது கூடாது என்பவர்களையும் மீறி!' - பாலாவின் புதல்வர் சரத்கார்த்திக் சொன்னபோது, எல்லோரது இதயங்களும் நெகிழ்ந்தன.கவிஞனுக்கு ஏது மரணம்? அவன்தான் கவிதையாக வாழ்ந்துகொண்டு இருக்கிறானே... மறக்க முடியுமா கவிஞர் பாலாவின் "திண்ணைகளும் வரவேற்பறைகளும்' என்கிற கவிதைத் தொகுப்பை? அதிலிருந்து சில வரிகள் - முடியுமா இந்த வரவேற்பறைகளில் ஒரு வழிப்போக்கன் வழிநடைக் களைப்பிற்கு ஆதரவாய் அமர? முடியுமா இந்த வரவேற்பறைகளில் ஒரு தொலை தூரப் பயணி ஒரு செம்பு நீரோ ஒரு வாய் மோரோ தாராளமாய் இருந்து பருக? முடியுமா இந்த வரவேற்பறைகளில் வாழ்க்கையில் பழுத்ததோர் தாத்தாவோ பாட்டியோ ஒரு முகம் தெரியா மனிதரை உட்கார வைத்து ஊர்க் கதை முதல் வீட்டு வம்பு வரை பேச? திண்ணைகள் இடித்து வரவேற்பறை கட்டும் நண்பரே நம் உள்வெளி நாகரிகத்தில் வாழ்க்கை அலங்காரமாகி விட்டது! மனிதம் தான் மூளியாகி விட்டது!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue