செம்புலப் பெயல்நீர்



அவனோ (தலைவன்), நாகரிகப் - பண்பாட்டின் இருப்பிடமாம் தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்; அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய பண்புகளால் உயர்ந்தவன்; அவற்றால் பிறர் போற்றும் புகழ் வாய்க்கப் பெற்றவன்; தன் முயற்சியால் பொருளீட்டி வாழ்வாங்கு வாழக் கருதுபவன்.அவளோ (தலைவி), வடபுலமான வேற்று மாநிலத்தில் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்; அச்சம், மடம், நாணம் என்னும் பெண்மைக்குரிய பண்புகளில் உறுதியாக நின்றவள்; அவற்றால் நிமிர்ந்த நன்னடை கொண்டவள்.இத் தலைவன் யார்? அவன் பெயர் என்ன? எச் சமயத்தைக் - குலத்தைச் சார்ந்தவன்? என்ன மொழி பேசுபவன்? என்பன போன்ற அவனைக் குறித்த தகவல் எதுவும் அத் தலைவிக்குத் தெரியாது; அதுபோலவே அவளைப் பற்றிய தகவல் - செய்தியும் அவனுக்குத் தெரியாது. இருப்பினும், அவனும் அவளை நோக்கினான்; ஆரணங்காம் அவளும் அவனை மெல்ல நோக்கினாள். ஆம்! அவ்விருவர்தம் கண்களும் கலந்து பேசின. உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட மாறிப்புக்கு இதயத்தால் இருவரும் கூடினர்.இவ்வாறு, மதத்தால், குலத்தால், மொழியால், மாநிலத்தால் வேறுபட்ட அவ்விருவரும் அன்பினால் கண்டுண்டனர். ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்துகொண்டார்கள். அவனும், அவள்மேல் கொண்ட காதலால், ""அன்னமே! உன்னைவிட்டு என்றும் பிரியமாட்டேன்; ஒருவேளை உன்னைப் பிரிய நேரின் உயிர் தரியேன், இது சத்தியம்'' என்று அவளிடம் உறுதி அளித்தான்.அவளும், ""அன்பரே! இப்பிறப்பு நீங்கி மறு பிறப்பு வாய்க்கினும் நீங்களே என் கணவர்; நான் ஒருத்தியே உமது நெஞ்சிலே குடியிருக்க உரியவள்!'' என்று பேரா அன்பினை வெளிப்படுத்தினாள். எவ்வாறெனில், தன் மனதைக் கவர்ந்த கள்வனை - சொன்ன சொல் பிழையாத வாய்மையாளராக - காலம் உள்ளளவும் தன் நெஞ்சிற்கு இனியவராக - என்றும் என் தோளைப் பிரியாதவராக இருப்பாரென்று அவன்மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்தாள். இவ்வாறு, இருவரும் அன்புக்கு ஊறு ஏற்படாவண்ணம் இரண்டு ஆண்டுகள் உள்ளத்தளவில் பழகினர்!""தானே அவளே தமியர் காணக்காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்''என்னும் இறையனார் அகப்பொருள் (சூ.2) கூற்றிற்கேற்ப மனமொத்த காதலராக இருவரும் திகழ்ந்தனர். இருப்பினும், அவர்களின் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், தன் தலைவன் தன்னைத் தவிக்கவிட்டுப் பிரியப்போகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தலைவி மிக வருந்தினாள். அச் செய்தியால் அதிர்ச்சியுற்ற அவளது செயல்பாட்டிலே மாற்றம் இருந்ததைக் குறிப்பால் உணர்ந்தான் தலைவன். அதனால் அவனது மனதில் கலக்கம் ஏற்பட்டது. ஆகவே, அவன், அவளிடம் வைத்த அளவிலாக் காதலை அவளுக்கு உணர்த்த முற்படுகிறான். ""என்பால் அன்பு அகலாத மங்கையே! என் தாயும் உன் தாயும் நாம் பழகுவதற்கு முன் எத்தகைய உறவினர்? அவ்வாறே, என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவு முறையினர்? போகட்டும், இப்பொழுது பிரியாமல் அன்பு பாராட்டும் நானும், நீயும் எவ்வண்ணம் அறிந்திருந்தோம்? ஆம்! நம் பெற்றோரும் முன்பின் அறியாதவர்; ஏன், நாம் இருவரும் இதற்குமுன் ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகியதுண்டா? இருந்தும், நம்மிடையே ஏற்பட்ட இவ்வுறவு, நம்மாலன்றி ஊழ்வினையின் வலிமையால் - தெய்வத்தின் அருளால் நாம் இன்று இணைந்திருக்கிறோம், இல்லையா? இப்பிணைப்பு எத்தகையது என்பதை நீ அறிதல் நலம்.நீலவானில் கோல நிலா ஒளிக் கற்றைகளை அள்ளிவீசி மண்ணுலகின் காரிருளையும் ஓட்டுகிறது. அந்நிலவையும் மறைத்துக்கொண்டு கருமேகங்கள் அவ்வானில் உலா வருகின்றன; மலைச் சிகரங்களையும் முத்தமிட்டுச் செல்கின்றன. இடையிடையே மாந்தரை அதிரவைக்கும் இடியும் மின்னலும் தோன்றி வேடிக்கை காட்டுகின்றன. அம் மேகங்கள் மழையைப் பொழிகின்றன. அப் பெயல்நீர் செம்மண் நிலத்தில் படிகிறது. ஆம்! கறுத்த மேகம் பெய்த மழைநீர் செம்மண்ணில் விழுந்ததும் அம் மண்ணின் செந்நிறத்தைப் பெறுகிறது. அதுமட்டுமா? அம் மண்ணின் தன்மையாகிய சுவையையும் பெற்று உருமாறிவிடுகிறதல்லவா அம் மழைநீர்? கருமணிப் பாவையே! அப் பெயல்நீர் போலவே நம்முடைய இரு நெஞ்சமும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே! அவ்வாறிருக்க, உன்னை நான் எப்படிப் பிரியவோ, மறக்கவோ முடியும்? ஆமாம், உன்னைவிட்டு ஒரு நொடியும் பிரிந்து அகலேன் என்பதை உன் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துகொள்'' என்று சொல்லி, தன் மனதிற்கு உகந்தவளைத் தேற்றுகிறான்.போலியான புகழை விரும்பும் மாந்தர் பலர் இம் மண்ணகத்தில் இருக்க, தேனிலே ஊறிய இப் பாடலைப் பாடிய புலவர் தம் பெயரைக் குறிக்காமலேயே சென்றுவிட்டார்!செம்புலப் பெயல் நீர்' - இவ் உவமையின் அழகுதான் என்னே! புலனல்லாதன புலப்படுத்தப் பயன்படுத்தப்படுவதுதானே உவமை! இந்த உவமையின் வாயிலாகப் புலவர்தம் கற்பனைத் திறனையும், காதலின் நுட்பத்தைப் புலப்படுத்தும் பான்மையையும் நம்மால் உணரமுடிகிறதன்றோ!திருவள்ளுவரும் இவ் உவமையின் சீர்மை கருதி, "நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும்' (452) என்றும், "நிலத்தொடு நீரியைந் தன்னார்' (1328) என்றும் தம் இரு குறட்பாக்களில் இந்த உவமையைக் கையாண்டுள்ளமை ஈண்டு குறிக்கத்தக்கது. இனி, தேன் பிலிற்றும் அப்பாடலைக் காண்போம்.""யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே''(குறு-40)இக் குறுந்தொகை (40) பாடல் நம்மை இன்பத்தில் திளைக்கச் செய்கிறதல்லவா?

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue