இந்தவாரம்



"மக்கள் சிந்தனைப் பேரவை' என்கிற அமைப்பை ஈரோட்டில் ஏற்படுத்தி, அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அடித்தளம் இட்டிருக்கும் ஸ்டாலின் குணசேகரனுக்குக் கொங்கு மண்டலமே நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து 5 ஆண்டுகளாக மக்கள் சிந்தனை இயக்கம் "ஈரோடு புத்தகத் திருவிழா' நடத்துவதில் அல்ல சிறப்பு. அதை அவர்கள் நடத்தும் விதத்தில்தான், அந்தப் புத்தகத் திருவிழாவின் சிறப்பே அடங்கி இருக்கிறது. 12 நாள்கள் நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுமார் 170 அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பாளர்கள் அனைவரும் அதில் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைக்கிறார்கள். சுமார் 6 லட்சம் மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறார்கள். 4.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான புத்தகங்கள் ஆண்டுதோறும் விற்பனையாகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த படைப்பாளியை கெüரவிப்பதும், இலக்கிய உலகின் முன்னோடிகளில் இருவரை மக்கள் மன்றத்தில் உரையாற்ற அழைப்பதும் இன்னொரு சிறப்பம்சம். தமிழகத்தின் முன்னோடி இலக்கியவாதிகள் பேசுவதைக் கேட்க தினந்தோறும் மாலையில் 5000-க்கும் அதிகமானவர்கள் புத்தகத் திருவிழாத் திடலில் கூடுவது என்பதே மலைப்பை ஏற்படுத்தும் விஷயம். வெறும் ஐந்து ரூபாய்க்கு புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் 10,000-க்கும் அதிகமான உண்டியல்கள் தரப்படுகின்றன. ஆண்டு முழுவதும் அவர்கள் உண்டியலில் சேமிக்கும் பணம், புத்தகத் திருவிழாவில் உடைத்து எண்ணப்படுகிறது. ஒரு சில பதிப்பகங்கள் மட்டுமல்லாமல், பல வர்த்தக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், நகரப் பிரமுகர்களும் இந்த மாணவ, மாணவியருக்குத் தங்கள் பங்காகவும் ஒரு தொகையை அளிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம் என்று கொங்கு மண்டலமே ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் அதிசயத்தை என்னவென்று சொல்ல? இங்கே இன்னொரு புதுமையையும் நிகழ்த்திக்காட்டுகிறார் ஸ்டாலின் குணசேகரன். கொங்கு மண்டல அளவில் உள்ள கல்லூரிகளில் பேச்சுப் போட்டி நடத்தி, புத்தகத் திருவிழா கருத்தரங்கு நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்குகிறார். இந்த ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு பேசியது, மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். மாவட்டம் தோறும் மக்கள் சிந்தனைப் பேரவையின் உண்டியல் சேமிப்புத் திட்டம் பரவி, இளைய சமுதாயத்தினர் மத்தியில் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தப் படவேண்டும். அதற்கும் ஸ்டாலின் குணசேகரன் வழிகாட்ட வேண்டும்!*******இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பு. அந்தந்தக் காலகட்டத்தில் ஒரு சமுதாயம் எப்படி இருந்தது, அதன் மனநிலை, வாழ்க்கைமுறை, அரசியலமைப்பு, மக்களின் லட்சியம் போன்ற அனைத்து விஷயங்களையும் அப்போதைய படைப்புகள் பிரதிபலிப்பவை என்பதால்தான் சரித்திரமே இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு, அதற்குப் பிறகு அதற்கான சான்றுகளை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தப்படுகிறது. உலகிலுள்ள ஏனைய நாகரிகங்களைவிட ஒரு உன்னதமான நிலையில் தமிழ்ச் சமுதாயம் இருந்தது என்பதற்கான ஆதாரமாக நமக்குக் கிடைத்திருப்பவைதான் சங்க இலக்கியங்கள். ஏதோ வாழ வேண்டுமே என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற வரைமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் சங்ககாலத் தமிழர்கள் என்பதை அன்றைய இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. அன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்கும் இன்றைய தமிழர்தம் நிலைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு அல்லவா காணப்படுகிறது. வயிற்றுப்பிழைப்புக்காகவும், வாழ்க்கை வசதிக்காகவும் நாயினும் கீழாய் அண்டிப்பிழைக்கும் பண்பு ஏன் வந்தது? சுயநலம், தகாதன செய்தல், பழிக்கு அஞ்சாமை போன்ற குணநலன்கள் தமிழர்தம் நாகரிகத்துக்கே ஒவ்வாத ஒன்றாயிற்றே? கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்கிற பாண்டிய மன்னன் எழுதிய புறநானூற்றுப் பாடலொன்று தமிழர்தம் சிறப்பைப் பட்டியலிடுகிறது. இந்தப் பாடலைப் படிக்கும்போதெல்லாம், தமிழனின் இன்றைய நிலை ஏன் தாழ்ந்து தலைகுனிவை ஏற்படுத்துகிறது என்று எண்ணி எண்ணி நெஞ்சம் குமுறுகிறது. அன்றைய தமிழன் எப்படி வாழ்ந்தானாம் தெரியுமா? "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்று வள்ளுவப் பேராசான் கூறியதைப்போல, இந்திரலோகத்து அமுதமே வாய்ப்பினும் அதைப் பலருக்கும் கொடுத்துத் தானும் உண்பார்களே தவிர, தனித்து உண்டு களிக்க மாட்டார்கள். தேவையில்லாமல் கோபப்படுவது என்பது அவர்கள் அறியாத ஒன்று. "சாத்வீகம்' என்பதுதான் தமிழனின் அடிப்படைக் குணமே. அதேபோல ஏதாவது ஒரு செயலை எடுத்துக் கொண்டால் அதைச் செய்து முடிப்பது வரை உறங்க மாட்டார்கள். அந்த அளவுக்குக் கருமமே கண்ணெனப்போற்றிச் செயல்படுபவர்கள். பழிச்சொல்லுக்கு அஞ்சுவார்கள் என்பதால் தகாதன செய்தல் என்பது, தமிழர்தம் எண்ணத்தில்கூட உதிக்காத விஷயமாக இருந்ததாம். தவறு இழைத்துவிட்டாலோ, தங்களது உயிரையே மாய்த்துக் கொள்வார்களாம். பழிக்கு ஆளாக நேரும் இழிசெயலைச் செய்வதற்காக இந்த உலகத்தையே தந்தாலும் அதை வெறுத்து ஒதுக்கும் மனத்திண்மை கொண்டவர்களாக இருந்தனராம் தமிழர். சோர்வே இல்லாமல் உழைப்பதும், பகிர்ந்து உண்டு வாழ்தலும், தன்னலம் கருதாமல் பிறருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளலும் தமிழர்தம் மாண்புகளாக இருந்ததால்தான், அந்தச் சமுதாயம் உலக சரித்திரத்தில் தலைநிமிர்ந்து நின்றது. அதேபோல, இன்றைய தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி சரித்திரம் பதிவு செய்யுமா, அதற்குத் தகுதியானவர்களாக நாம் இருக்கிறோமா என்று நம்மைச் சிந்திக்கவைக்கும் கடலுள்மாய்ந்த இளம்பெரும்வழுதியின் புறநானூற்றுப் பாடல் இதுதான்!""உண்டால் அம்மஇவ் உலகம் - இந்திரர்அமிழ்தம் இயைவது ஆயினும், "இனிது'; எனத்தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்;அன்னமாட்சி அனையர்ஆகித்தமக்கு என முயலா நோன்தாள்,பிறர்க்குஎன முயலுநர் உண்மையானே.''புறநானூறு - 182*******கவிதை என்பது எது? ஆர்.தேவகி எழுதிய "மூங்கில் கனவு' கவிதைத் தொகுப்புக்குக் கவிஞர் நா.காமராசன் எழுதி இருக்கும் அணிந்துரையில் நல்லதொரு விளக்கம் தருகிறார். ""எப்படி எழுதப்பட்டாலும் மரபோ, புதுசோ, நவீனமோ, உருவம் எதுவாகவும் இருக்கட்டும்- உள்ளடக்கத்தில் கவித்துவம் இருக்க வேண்டும், அதுதான் கவிதை!'' "ஆர்.தேவகி கவிஞரே, கவிஞரே...' என்கிற நா.காமராசனின் கருத்தை அடியேனும் அட்சரம் பிசகாமல் ஆமோதித்து வழிமொழிகிறேன். "மூங்கில் கனவு' புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.முதியோர் இல்லத்தில்அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்என் மகன் சொன்னான்:""நானும் பெரியவனானதும்உன்னையும் வாராவாரம்தவறாமல் வந்து பார்ப்பேன்!''

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue