மணிக்கொடி ஏற்படுத்திய மாற்றம்!



20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் துவக்கமானது, பாரம்பரியத் தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே இடம் பெற்றது. பாரம்பரியத் தமிழ் இலக்கியம் முழுவதுமே கவிதை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்தக் கவிதையானது சங்க இலக்கியம் துவங்கி பாரதி காலம் வரை (புதுக்கவிதையைத் தவிர்க்க வேண்டும்) கூட்டு உணர்வினையே அடிப்படையாகக் கொண்டது. சங்கக் கவிதைகள் எல்லோருக்கும் பொதுவான கவிதையாக இருந்தது. கவிஞன் என்பவன் தனித்தவன் அல்ல. அவன் ஒரு குழுவைச் சார்ந்தவன். அவன் கவிதைக்குப் பாடுபொருள் குழுவிற்கும் பொதுவானது. அங்கு தனித்துவம், பொது ஆகியன இரண்டறக் கலந்திருப்பதைக் காண முடிகிறது. பின்னர் தோன்றிய கவிஞர்களான சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், திருத்தக்கதேவர், கம்பர், ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார், புகழேந்தி போன்றவர்கள் அரசவைக் கவிஞர்களே ஆவர். யாரையாவது ஒருவரையோ, அல்லது ஒரு வட்டாரத்தையோ அல்லது மதத்தையோ சார்ந்துதான் அவர்கள் இலக்கியம் அமைந்திருந்தது. இது சிற்றிலக்கியங்கள் காலத்தில் இன்னும் அதிகமாக குறுநில மன்னர்களையோ, ஜமீன்தார்களையோ சார்ந்த இலக்கியமாகவே இருந்தது. இதன் விளவுகள் பலவாக இருந்தாலும், கவிதை மொழி என்பது கவிஞனது தனித்த மொழியாக இல்லாமல் அரசவையின் கூட்டு மொழியாகவே இருந்தது. கம்பன் போன்ற கவிஞர்கள் இன்றைய புதுக்கவிஞர்களைப் போன்று அல்லாமல் அரசவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆகு பொருள், மொழி ஆகியவற்றிலேயே காவியங்கள் படைத்தனர். இது பாரம்பரியக் கூட்டு உணர்வின் ஒரு வகையான வெளிப்பாடே ஆகும். கவிதையை ஜனநாயகப்படுத்திய பாரதி எட்டயபுரம் அவை சார்ந்துதான் தன் கவிதையை வளர்த்தெடுத்தான். பின்னர் அவனது வாழ்நாள் முடிவில் எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக்கவி எழுதுகிறான். இது, பாரம்பரியத்தின் தாக்கம் பாரதியை விட்டுப்போகவில்லை என்பதைக் காட்டுகிறது. இதன் விளைவு என்னவென்றால், பாரதியின் கவிதையிலும் உரைநடையிலும் கூட்டு உணர்வு இன்னும் இருப்பதைக் காணமுடியும். இந்தக் கவிஞர்கள் அனைவரும் சமூகக் கடமையை, அதில் அவர்கள் பங்கினை உணர்ந்தவர்களாகவே செயல்பட்டனர். சமூகத்திற்கும் அவர்களுக்கும் பெரிய விரிசல் ஏற்படவில்லை. கவிதையை அவர்கள் பாரம்பரிய மொழியிலேயே எழுதினர். அதைத் தனித்த மொழியாக ஆக்கவில்லை. ஆனால், மணிக்கொடியின் தோற்றத்துடன் மாறுதல் ஒன்று நிகழ்ந்தது. அதாவது, இலக்கியத்தை சமூகக் கடமைகளில் இருந்து பிரித்து சுத்த இலக்கியமாகக் காணும் போக்கு அது. கலைஞனின் கடமை என்பது "எமக்குத் தொழில் கவிதை' என்ற நிலையில் இருந்து மாறி, கவிதை, கதை என்பன எல்லாம் படைப்பாளியின் சுயரசனை என்ற நிலைக்குச் சென்றது. இது கலை கலைக்காக என்ற கோட்பாடாக மாறியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் மிகத் திறமையான கலைஞர்கள். அவர்கள் எழுதியதில் (மெüனி, லா.ச.ரா. நீங்கலாக) எல்லாமே சமூகம் பற்றியமைதான் அதிகம். ஆனால் அவர்கள் கவனம் சமூகம் பற்றிய விஷயங்களை விட கதையின் படைப்புச் செயலிலே குவிந்தது. இதன் காரணமாகப் புலமைப்பித்தன் உள்பட எல்லாருமே கதை எழுதுவதை ஒரு உபாசனையாக, யாகமாகக் கண்டனர். விளைவுகளைப் பற்றிய கவலை அவர்களிடம் இல்லாமல் இருந்தது. இதன் பலனாக அவர்கள் கதை நேர்த்தியிலும், அதன் கலைத் தன்மையிலும் அதிக கவனம் செலுத்தினர். பல சிறந்த சிறுகதைகளைப் படைத்தனர். இருப்பினும் அவர்களிடம் ஒரு முரண்பாடு இருந்தது. இலக்கியத்தைத் தனி நபர் தன்மை வாய்ந்ததாகக் காணும் போக்கும், அதே சமயத்தில் தவிர்க்க முடியாமல் அதில் சமூகத்தன்மை இடம்பெறுவதற்கும் உள்ள முரண்பாடு ஆகும். இதன் காரணமாக அவர்கள் அனைவருமே சிறுகதை வடிவத்தையே பெரிதும் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் பெரும்பாலோர் நாவல் இலக்கியத்திற்கு வரவே இல்லை. அப்படியே எழுதினாலும் அவர்கள் சிறுகதைகளைப் போன்ற நாவல்களை எழுதவில்லை. காரணம், நாவல் இலக்கியம் மொத்த சமூகத்தைப் பற்றியதாக அமைவதால் அதில் கூட்டு உணர்வு அதிகம் இருக்கிறது. சிறுகதை தனித்த நிகழ்ச்சிகளைப் பற்றியதாக இருப்பதால் அதில் தனி நபர் உணர்வு அதிகம் இருக்கிறது எனலாம். இந்தப் பண்புகளை மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவரிடமும் காண முடிகிறது. அவர்களில் தனி நபர் உணர்வுக்குள்ளேயே சுருங்கி நின்று வாழ்க்கையில் மனித மனதில் இடம்பெறும் சிறுசிறு எண்ண அலைகளை வலுவாக வெளிப்படுத்தியவர்களும் உண்டு. அதே சமயத்தில் புதுமைப் பித்தன் போன்றவர்கள் இத்தகைய உணர்வை வெளிப்படுத்தினாலும், சமூக உணர்வை, கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் போக்கினைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள முரண்பாடு காரணமாக கலைக்குரிய கருப்பொருளை அவர்கள் விஞ்ஞானியைப் போல் அணுகினர். மணிக்கொடியின் தோற்றம் ஏற்படுத்திய மாற்றம்தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய திருப்புமுனை என்று நாம் கருத வேண்டும்!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue