சின்ன வயதில் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களையே புரட்டிப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. "இரும்புக் கை மாயாவி, இமயத்தில் மாயாவி, மஞ்சள் பூ மர்மம்' போன்ற முத்து காமிக்ஸ் புத்தகங்களே அகராதிகளைப் போல எங்கள் கைகளில் அதிகமான புழக்கத்தில் இருக்கும். அப்போது பரிசுப் புத்தகங்களாக பாரதியாரின் கவிதைகளும், வனவிலங்குகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கும்.கல்லூரிப் பருவத்தில் "முன்னேற்றப் பதிப்பகம்' மூலம் சலுகை விலையில் கிடைக்கும் பல பொதுவுடைமைப் புத்தகங்கள் எனக்குள் சமூகம் சார்ந்த உள்ளுணர்வை ஏற்படுத்தின. அப்போதுதான் "குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. "வால்காவிலிருந்து கங்கை வரை' நூலைப் படிக்கும்போது ஒப்புமையை உணர முடிந்தது.கல்லூரி நாட்களில் புதுக் கவிதை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. வெகுஜன இதழ்களில் வருகிற வரிகளை இரசித்து, உணவுக் கூடங்களில் நடக்கும் விவாதங்கள் சுவாரசியமானவை. கல்லூரி முடித்துப் போட்டித் தேர்வுக்கான ஆயத்தங்களில் இலக்கியம் கைகளிலிருந்து நழுவ, பொதுஅறிவு, சரித்திரம், பூகோளப் புத்தகங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. களப்பணியின் பணியே படிப்பானது; மக்களே புத்தகமானார்கள்; அரசு இலக்குகளே மனப்பாடப் பகுதிகளாயின; ஆய்வுக் கூட்டங்களே வாசக வட்டங்களாயின.மனம் குறித்த கேள்விகளும், வாழ்வின் நோக்கம் குறித்த சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்த நேரத்தில் ஜென், கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரூமி, கலீல்கிப்ரான், ரிச்சர்ட் பேக், இக்ரீஸ் ஷா, நீட்சே, காஃப்கா போன்ற நூல்கள் உதவின. அவற்றின் மூலம் துணிச்சலும், எதிர்காலம் குறித்த அச்சமின்மையும் ஏற்பட்டன.மதுரையின் ஐந்தாண்டுப் பணியில் வாசிப்பை இயக்கமாக்க ஒரு கருவியாக இருக்க முடிந்தது. ஆங்கில இலக்கியம், மனவியல், மேலாண்மை ஆகியவற்றின் பரிச்சயம் அப்போது நிழற்குடையை நிறுவி தனிமை வெப்பத்தைத் தணித்தன.ஷேக்ஸ்பியர், மார்லோ, டிக்கன்ஸ், ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ் வர்த், அரவிந்தர், தாகூர் என வாசிப்பை விசாலமாக்க, பணி பன்னீர் தெளித்தது.எத்தனையோ அரிய புத்தகங்கள் வாழ்வின் ஒவ்வொரு பிடியையும் தீர்மானிக்கும் திக்குகளாக எனக்கு இருந்திருக்கின்றன. வாசிக்கின்ற ஒவ்வொரு வரியையும் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் கலையைக் கற்றபோது, என் படிப்பு அடர்த்தியானது.திருக்குறள் குறித்த மனித வள ஆய்வுக்காக அதைப் பயில ஆரம்பித்தபோது, இன்றைய மேலாண் வல்லுநர்கள் கண்டுபிடித்தவற்றையெல்லாம், உள்ளுணர்வின் மூலம் உணர்த்திய வள்ளுவர் உள்ளம் துள்ள வைத்தார்.தகவல் தொடர்பு பற்றி ‘நஹஹ் ண்ற் ப்ண்ந்ங் நட்ஹந்ங்ள்ல்ங்ஹழ்ங்' (பட்ர்ம்ஹள் கங்ங்ஸ்ரீட்)தொகுத்த நூல் முக்கியமானது. அதில் உள்ள பல குறிப்புகளைத் திருக்குறளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும்.அண்மையில் ‘ஊழ்ன்ண்ற்ள் ர்ச் ஜ்ஹழ்’என்ற நூல் எனக்குப் போரைப் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. ‘ரண்ள்க்ர்ம் ர்ச் ற்ட்ங் ஸ்ரீழ்ர்ஜ்க்’ என்கிற நூல் அவ்வப்போது தலைதூக்கும் கர்வத்தை அமுக்கித் தள்ளியது. ‘பட்ங் ஆப்ண்ய்ந்’ என்கிற நூல் எனக்கு மூளையின் மின்னல் வேகச் செயலை விளக்கியது. ஜேரிட் டயமண்ட் எழுதிய ‘The rise and fall of the third chimpanzee’ இனிய நூல்.இப்படி எண்ணற்ற நூல்கள் நம் பார்வையை விரிவாக்கிக் காட்டும் திறனோடு சந்தையில் வந்து விழுந்தவண்ணமிருக்கின்றன. தன் வாழ்வில் 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஐசக் அஸிமோவ், விமானப் பயணத்திலேயே புத்தகத்தை முடித்த எட்வர்ட் டீ பேனோ ஆகியோர் பற்றிப் படிக்கும்போது நம் வாசிப்பின் வறுமையை உணர முடியும்.இந்த ஒவ்வொரு நூலுமே என்னைப் பரிணாம வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் தட்பவெப்ப மாற்றங்கள். இங்கு தகுந்தவையே எஞ்சுகின்றன; மிகுந்தவையே மிஞ்சுகின்றன; விஷயமுள்ளவையே விஞ்சுகின்றன.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue