மா.உலகநாதன்
First Published : 28 Jun 2009 01:32:47 AM IST


Last Updated :

சங்க இலக்கியம் தமிழின், தமிழனின் தாய் இலக்கியம்; உலக இலக்கியங்களின் சிகரம்; உலகத்தாரின் வாழ்க்கை முறைகள் பற்றிப் பேசுவது. அதனால்தான் அது உலகப் பொது இலக்கியம் என்று கூறப்படுகிறது.

அம்பலும் அலரும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவை சங்க காலந்தொட்டே நிகழ்ந்து வந்திருக்கின்றன என்பதை பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அன்று நிகழ்ந்த ஊர்வம்பு பேசுதலை, "அம்பல்' என்றும் "அலர்' என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனர். அம்பல் என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய அம்பலும் அலரும் இன்று பேசப்படும் கிசுகிசுக்களைப் போலன்றி, நன்மையின் நிமித்தமாகவே பேசப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.

ஊர்வம்பு என்றாலே ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நாட்டம் உண்டு என்று சொல்வர். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும். இதை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. நற்றிணையில் கபிலர் தமது குறிஞ்சித்திணைப் பாடலில்,

""தீ வாய்

அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்''

என்கிறார். ""வீட்டகத்துச் செய்திகளை அடுக்களைப் புகையைப் போல நுழைந்து காணும் ஆசையும், கூடியிருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் எப்படியோ பெண் சமுதாயத்துப் பிறவிக்குணம் போல அமைந்து வாய்க்குள் பேசும் வல்லமை வந்துவிடுகிறது'' என்பார் .சுப.மாணிக்கனார்.

நெய்தல் பாடிய உலோச்சனார்,

""சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மருகின் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப

அலந்தனன் வாழி! தோழி!'' என்கிறார்.

(நற்-149)

தெருவில் நடந்து செல்கிற தலைவியை, கடைக்கண்ணால் நோக்கி, மூக்கின் மேல் விரல் வைத்து ஜாடையாகவும், நேரிடையாகவும், காதோடு காதாகவும் கிசுகிசு பேசும் அந்தக் காட்சியை மிக அழகாக மேற்கண்ட பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்பத்துப் பாலில், "அலர் அறிவுறுத்தல்' என்ற தலைப்பில் வரும் பத்துக் குறட்பாக்களும் ஊர் வம்பு பற்றியே பேசுகின்றன.

""ஊரவர் கெüவை எருவாக அன்னை சொல்

நீராக நீளுமின் நோய்''

(குறள்-1147)

காதல் வயப்பட்ட தலைவியின் காம நோயானது ஊரார் கூடிக் கூடிப் பேசும் வம்புகளால் எரு இடப்பட்ட பயிரைப் போலவும், மகளைப் பற்றி எழும் வதந்திகளால் மனம் வெதும்பி, தாய் கூறும் கடுஞ்சொற்கள் எல்லாம் அந்தப் பயிருக்கு நீராகவும் இப்படிக் காதலும் காமமும் மக்கள் பேசும் கிசுகிசுவால் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்கிறார் திருவள்ளுவர். இன்னொரு குறளில்,

""நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெüவையால்

காமம் நுதுப்பேம் எனல்''

(குறள்-1148)

தலைவன், தலைவி காதல் பற்றிய செய்தி தீ பரவியது போல, ஊர் முழுவதும் பேசப்படுகிறது. ஆயினும் தலைவி தன் காதலில் உறுதியாக இருக்கிறாள். யார் என்ன பேசினால் என்ன? எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றி அணைக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. பதிலாக இன்னும் என் காதல் தீவிரமடையும் என்று கூறுவதாக இக்குறள் அமைகிறது. ஆம். எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றினால் அது மேலும் கொழுந்துவிட்டு எரியும் அல்லவா?

இலக்கியங்கள் சொல்லுவதைப் போல, இன்றும் கூட கிராமங்களில் ஜாடை பேசுதல் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. அம்பலும் அலரும் பண்டைய காலந்தொட்டு பேசப்பட்டாலும் அவை காதலர்களின் உறவைக் கெடுக்காது, பெண்ணைப் பெற்றோருக்கும் ஊராருக்கும் இந்தக் காதல் செய்தியைப் பரப்பி, காதலர்களைத் திருமணம் காணச் செய்தது. இந்த நற்செயலைச் செய்யும் அம்பலும் அலரும் வாழ்க! வளர்க! என்று கூறலாம் தானே!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue