Wednesday, December 13, 2017

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 – கி.சிவா

(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்டஅரசியல் 1/4 – தொடர்ச்சி)
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்
இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 

தூதுப் பொருள்கள்
பொதுவாக, தூது இலக்கியங்களில் எல்லாப் பறவைகளையும் தூதுவிடும் மரபு என்பது இல்லை. “தூது நூல்களில் 35 பொருள்கள் தூதுப்பொருள்களாக அமைந்துள்ளன. அவற்றில், குயில், கூகை ஆகிய இனப்பொருள்களைத் தூது விடுத்தனவாக அமைந்த நூல்கள் இன்று இல்லை” என்று ந.வீ.செயராமன், ‘தூதிலக்கியங்கள்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997, ப.192). அன்னம், மயில், கிளி, மேகம், மைனா, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய அஃறிணைப் பொருள்கள் ஒன்பதையும் உயர்திணையில் தோழியையும் தூதாக அனுப்பலாம் என்று, கி.பி.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த பிரபந்தத் திரட்டில் (நூற்.30) எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதே கருத்தைப் புகழேந்திப் புலவரால்பாடப்பட்டதாகக் கருதப்படும் ‘இரத்தினச்சுருக்கமும் (நூற்.7) குறிப்பிட்டுள்ளது (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997,ப.191). இவ்வாறு தூதுவிடுக்கும் பறவையினங்களுள் காக்கை, வெளவால் போன்ற பறவைகளும் பிறவும் விடுபட்டுள்ளன. ஆனால், தெலுங்கில் கவிஞர் குர்ரம் யேசுவா, ‘கப்பிலம்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூல் தமிழில் கவிஞர் தெசிணியால் வெளவால்விடு தூது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற்கால வளர்ச்சியாகக் காக்கையைத் தூதுவிடுத்துள்ளமைக்குக் காக்கைவிடுதூது  சான்றாகத் திகழ்கின்றது.
காக்கையின் சிறப்புகள்
  தமிழிலுள்ள ‘கா’வெனும் எழுத்தை உலகெலாம் பேசுகின்ற சிறப்புப் பெற்ற காக்கையே, (காக்கையும் தமிழ் பேசுகின்றபோது மனிதராகிய இராசகோபாலாச்சாரியார் தமிழுக்கு எதிராக இந்தியைத் திணிக்கின்றாரே எனும் அங்கதக்குறிப்பு இதன்வழி வெளிப்படுகின்றது) நீ மேன்மை பெற்ற கருமை நிறத்தைக்கொண்டு இருக்கின்றாய் (கருப்பு நிறம் அருவருப்பானது என்ற போலிப் பண்பாட்டுக் கருத்திற்கு எதிராக, இந்தக் கருத்தை முன்மொழிந்துள்ளார்). மாயனை நிறத்தாலும் முருகப்பெருமானை வள்ளல்தன்மையாலும் ஒத்திருக்கின்றாய். உணவு கிடைத்தபோதெல்லாம் உனது இனத்தைக் கூவியழைத்து அவற்றுக்கு இன்பமூட்டி, கிடைத்ததைச் சுற்றத்தோடு பகிர்ந்துண்கின்றாய். இதுவே எம் தமிழரின் ஒப்புரவு (உலக ஒழுக்கம்) என்று உலகிற்கு அறிவிக்கின்றாய்.
உலகில் முதலில் தோன்றியது தென்னாடு. அது தோன்றியநாளிலிருந்து இம்மக்கள் பேசும் மொழி தமிழ்மொழியே என்பதை எந்நாட்டினரும் ஏற்றுக்கொள்ளும்பொருட்டு, பசுவின் கன்றுகூட அம்மா என்றழைக்கும். அதைப் பார்த்துக்கூடத் தாய்மொழிமேல் பற்றுவராததமிழ்மக்களைக் கண்டு சினந்ததால் உன்னுடல் கருகிப்போயிற்றோ!(தற்குறிப்பேற்றம்). பாவிகளாகிய தீயவர்கள் தேனையொத்த செந்தமிழைச் சிதைப்பதற்கு விரையுமுன், அதைத் தடுத்துக் ‘காகா’ (காத்திடுவீர்! காத்திடுவீர்!) என்றே கூவியழைக்கின்றாய். உன்னைப் போன்று தாய்த்தமிழ்மீது பெருங்காதல் கொண்டவர்களை நான் இதுவரை கண்டதில்லை. அகத்திய முனிவர் குடத்திலே அடக்கிய நீரைக் கவிழ்த்துக்கொட்டி, காவிரியாக ஓடவிட்டுத் தமிழகத்து உயிர்களைக் கருணையால் காத்து அருமருந்திற்கொப்பானாய். தமிழ்மொழியைக் காக்கின்றமையால் இந்த மாநிலத்துக்கு அரசனானாய் (அண்டங்காக்கை). கருமை நிறம் என்பது கடவுள் அமைத்திட்ட நிறம். கடவுளுக்கும் அதுவே நிறம். உமையும் திருமாலும் கருமைநிறம் பெற்றதனால் பேரழகும் ஆண்மையும் வாய்க்கப்பெற்றனர். முகிலும் உன்னுடைய நிறத்தைக் காட்டி மழையைப் பெய்யும். இவற்றையெல்லாம் அறியாத மடமைபொருந்தியவர்கள், உனது ஒப்பற்ற கருமை நிறத்தை உணராமல் ‘கருங்காக்கை’ என்று இழிவாகக் கூறுவர்.
 உன்னுடைய ஒப்பற்ற கண்ணைப்பற்றி அறியாதவர்கள், உனக்கு ஒற்றைக்கண்தான்   (பெரியாழ்வார் திருமொழி 3.10.6) என்று கூறுவர். சனியின் உறவு நீயென்பர். சனியின் வேகத்தைக் குறைப்பதற்காகத்தான் தந்திரம் செய்து அவருக்கு நீ வாகனமானாய் என்பதை அறிபவர் யாவரோ? உறங்குகின்ற மக்களின் மயக்கத்தை அகற்ற, காலைப்பொழுதில் வந்து கரைகின்ற அருமணியைப்போன்ற காக்கையே! ஒரு துறவியைப்போல, உயிர் பிரிந்த உடல்களைத் தின்று, அவ்வுடலை உடையவர்க்கு மறுபிறவியளிக்கும் உன்பெருமையெல்லாம் சொல்லுதல் இயலா (1-31) என்று காக்கையையும் அதன் குணம் மற்றும் செயல்களையும் புகழ்ந்து புலவர் பாராட்டுகிறார்.
தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் – ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே – மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் – … …         (12-14)

கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே – உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் – தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி
அரிதின் உலகம் அளிக்கும் – … …”           (20-22)
எனவரும் கண்ணிகள் மேற்குறிப்பிட்ட செய்திகளுக்கான சில கண்ணிகளாகும்.

(தொடரும்)
முனைவர் கி.சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம்,
மதுரை-09. மின்னஞ்சல்  : lakshmibharathiphd@gmail.com

Tuesday, December 12, 2017

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! – ஏரூர் கே. நெளசாத்து


கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்!

நல்லவர் போலவே
நகைத் திருப்பார் – சிலர்
நாவினில் நஞ்சை
விதைத்திருப்பார் .
உள்ளவை யாவையும்
கறந்தெடுப்பார் – அவர்
உண்மையைச் சொல்வதாய்
நம்ப வைப்பார் ,
பசுத்தோல் போர்த்திய
புலியாவார். – சிலர்
பாதகம் செய்வதில்
நரியாவார்.
எரிகின்ற வீட்டுக்குக்
கொள்ளி வைப்பார் – அவர்
ஏதேனும் செய்தியை
அள்ளி வைப்பார்.
நல்லவர் கெட்டவர்
பகுத்தறிவாய் – நீயும்
நான்கு குணத்தையும்
பிரித்தறி வாய் .
கோடரிக் காம்பினை
முறித்திடுவாய்.- நல்ல
கொள்கையை நெஞ்சினில்
விதைத்திடுவாய்.
கவிஞர். ஏரூர் கே. நெளசாத்து
(எனது ‘மெளனத்தின் சத்தங்கள்’ நூலில் இருந்து)

Sunday, December 10, 2017

தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

தமிழ் நன்று என்றிரு!

ஒன்று என்றிரு;
தமிழ் நன்று என்றிரு.
இம்மொழிதான் செம்மொழி எனத்
தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு
குன்று என்றிரு எம்
மொழிவளம் குன்று என்றிரு;
பிறமொழி தான்கன்று என்றிரு;
நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு .
இன்றே தொடங்கியிரு;
வன்தமிழராய் நின்றிரு
எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;.
என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு.
கொன்றால் பாவமென்றிரு
தின்றால் போகாதென்று மறு;
ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு
ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ;
தமிழால் பேசி நாவென்றிரு;
நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,
தமிழராய் பிறந்தது பாவமன்று என்றிரு;
இதல்லால் பெரும்பேறு வேறன்றே என்றிரு
இனிமேல் எம்மொழியே
நல்மொழி என நின்றிரு – உன்
காலமே சென்றாலும் காலனே நின்றாலும்
கருவறைத் தமிழே இனிக்கடமை என்றிரு
வணக்கம் நன்று சொல்லவும் ,
நன்றி என்ற சொல்ல நினைந்திரு.;
இன்றும் நாளையும் காலை மாலையும்
வேலை நேரமும் நற்றமிழே பேசித்திரிந்திரு
சாலை, வண்டி , அடையாள அட்டை,
அலைபேசி, தண்ணீரும் என் தமிழ்ச்
சொல்லாய் சொல்லியே என்றும்
நாம் தமிழர் அணியாய் தாரணி வென்றிரு
சந்திரசேகரன் சுப்பிரமணியம்

இனிது இயற்கைக் குளியல் - சுதாகர்

இனிது இயற்கைக் குளியல்

இனிக்கும் இன்பக் குளியல்
இனிது இயற்கைக் குளியல்
குளம், ஏரிக் குளியல்,
உளம் விரும்பும் குளியல்;
உள்ளங் கால் தொட்டதும்,
உள்ளம் உடம்புள் துள்ளும்;
உடல் முழுதும் சிலிர்க்கும்;
உடல் நீரில் மூழ்கப்,
பற்கள் வாத்திய மாக
பண் ணொன்று பிறக்கும்;
இழுத்து பிடித்த உணர்வை,
ஓடை இழுத்துக் கொண்டு
ஓடும்; குழந்தை மனம்
ஓங்கும், அக்கம் பக்கம்
மறக்கும், பரவசம் பிறக்கும்;
நீரில் உள்ள வரை
நிலைக்கும், நிலை குலைய
வைக்கும்; உடல் மிதக்கும்
வரை உள்ள சுகம்
நீர்த் தரும்பிர சாதம்;
குல தெய்வக் கோயில்
குரு தெய்வக் கோயில்
குளத்தில் குளிக்கும் போது
மட்டும் கிட்டும் இன்பம்பே ரின்பமே!
ஏரி குளம் குட்டை யெலாம்
வீட்டைக் கட்டி வைக்க
வரும் அடுத்த தலைமுறை
இயற்கைக் குளியல் மகிழ்விக் காதே..!
அழுக் கை நீக்கக் குளியல்
மட்டு மல்ல குளித்தல்
நீர்ப்பி ராணன் எடுப்பதும்
சூரிய சக்தி பிடிப்பதும்
குளித் தலின் நோக்கமே
கதிர் உதிக்கும் முன்னமே
குளிர் நீரில் குளிக்கவே
நீர் ஞாயிறு சக்தி கிட்டுமே..!
எவ் வூர் தண்ணி யிலும்
எப் பருவ மானா லும்
முதல் மூன்று முறை உள்ளங்
கையில் நீரள்ளி நிதான மாய்
உதடால் உறிஞ்சி யுறிஞ்சிக் குடிக்க
உடம்பு நீரைச் சோதிக் கத்தக்க
நோய் எதிர்ப்பு உண்டாக் கப்பின்
முங்கி முங்கி நாள் முழுதும்
குளித்தா லும்ஊ றொன்று நேரா
வுடபிற் கேயிது முன்னோர் வாக்கே!
– சுதாகர்

Wednesday, December 6, 2017

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05– சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05

  1. நாடும் நகரங்களும்
   இயற்கை யெல்லைகளால் பிரிக்கப்பட்டுத் தமக்கென ஒரு மொழியைக் கொண்டு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ‘நாடு’ என்று அழைத்தனர் தமிழக முன்னோர். அப் பகுதி அங்கு வழங்கும் மொழியால் வேறுபடுத்தி அழைக்கப்பட்டது.  ‘தமிழ்’வழங்கும் பகுதி ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு, மொழியை யடுத்தே நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை உலகெங்கும் காணலாம். தமிழ்நாடு ‘தமிழகம்’ எனவும்,  ‘தமிழ்கூறும் நல்லுலகம்’எனவும் சுட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்ற பெயரால்  பண்டைத் தமிழர்களின்  உலகக்  கண்ணோட்டத்தை உணரலாகும்.
 தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடவெல்லை திருவேங்கட மலையாகவும், தென் எல்லை குமரியாகவும், கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகள் கடல்களாகவும் இருந்துள்ளன என்பது பனம்பாரனார் பாயிரத்தால் அறியலாகும்.  தெற்கிலிருந்த குமரி என்பது கடலா, மலையா, நாடா, முனையா என்பது நன்கு தெளியப்படாமல் உள்ளது.  சங்கக் காலம் முடிய-கி.பி. முதல் நூற்றாண்டு – தமிழ்நாட்டின் எல்லைகள் இவையே.
 ஆனால், மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழகமாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலைநாட்டப்படும் உண்மையாக உள்ளது.
 மண்ணிற் புதையுண்டு மறைந்த ஆரப்பா’  ‘மொகஞ்சதரா’ நகரங்களில்  வழங்கிய மொழி தமிழே என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ் வுண்மையை வலியுறுத்தும்.  புறநானூற்றில்,
தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல.          ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
 தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
 குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
 குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
 …….       …….         …….       …..
 உருவும் புகழு மாகி விரிசீர்த்
 தெரிகோன் ஞமன்ன் போல ஒருதிறம்
 பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!”              ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும்மதுரைக்காஞ்சியில்,
தென்குமரி வடபெருங்கல்
 குணகுட கடலா எல்லைத்
 தொன்று மொழிந்து தொழில்  கேட்ப”  ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் கூறுவதனால் தமிழரசராட்சியின் கீழ்ப் பரதகண்ட முழுவதும் ஒரு காலத்தில் தங்கித் தழைத்தது என்ற உண்மை வெளிப்படுகின்றது.
  தமிழர்கள் (திராவிடர்கள்) வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்றும் ஆரியர்களால் வட இந்தியாவிலிருந்து தெற்கே துரத்தப்பட்டவர்கள் என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கூறியிருக்கும் கூற்று பிழைபட்டது என்று இன்று தெளிவாகின்றது.  உலகில் முதன் முதல் மக்கள் தோன்றியதே தமிழகத்தில்தான் என்றும் இங்கிருந்தே மக்கள் வெளியிடங்களுக்குச் சென்றனர் என்றும் புதைபொருள் ஆராய்ச்சியாளரும் வரலாற்று ஆசிரியரும் பூவியல் அறிஞரும் சான்று காட்டி நிறுவுகின்றனர்.  ஆதலின், ஒரு காலத்தில் இமயமுதல் பூமையக்கோட்டை யடுத்து இருந்த குமரிக்கடல்வரை தமிழகம் பரவியிருந்தது என்பதும், வடக்கே  ஆரியத்தின் வரவாலும் தெற்கே கடல்கோளாலும் தமிழ் வழங்கும் பகுதி சுருங்கியது என்பதும் நினைவிற் கொள்ளற்பாலன.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்